சங்கர்ராமன் கொலை வழக்கு

சங்கர்ராமன் கொலைவழக்கு என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் வரதராசப் பெருமாள் கோவிலில் மேலாளராக பணியாற்றி வந்த சங்கர்ராமன் இக்கோவில் வளாகத்திலேயே செப்டம்பர் 3, 2004 ஆம் ஆண்டு கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறித்ததாகும். இதற்கு முன்னதாக சங்கரமடத்தில் பணியாற்றி வந்த சங்கர்ராமன் சந்திரசேகர சரசுவதி சுவாமிகளின் மறைவிற்குப் பிறகு செயந்திர சரசுவதி பதவியேற்றபின்னர், மடத்தில் நிகழ்ந்த பிறழ்வுகளுக்கு எதிர்ப்பு காட்டி வெளியேறியவர். இந்த மனகசப்பின் பின்னணியில் இவரது கொலைக்கு சங்கரமடமே பொறுப்பு என்ற கருத்து உள்ளூரில் நிலவி வந்தது.

கொலையை விசாரித்தக் காவல்துறையினர் இதனை நிகழ்த்திய அப்பு என்பவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்து அவர்களுக்கு பணம் கொடுத்ததாக இரவி சுப்பிரமணியம் என்பவரையும் கைது செய்தனர். குற்றத்திற்கான திட்டமிடலுக்காகவும் தூண்டலுக்காகவும் ஆந்திராவில் முகாமிட்டிருந்த சங்கரமடத் தலைவர்களான செயந்திர சரசுவதி மற்றும் விசயேந்திர சரசுவதி இருவரையும் நவம்பர் 11, 2004 அன்று கைது செய்தது. சனவரி 21, 2005 அன்று விசாரணை அதிகாரியும் காவல்துறை கண்காணிப்பாளருமான பிரேம் குமார் 1873 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.[1] குற்றம் சாட்டப்பட்ட இரவி சுப்பிரமணியம் குற்றம் ஒப்பிய சான்றுரைஞராக மாறி புலனாய்வுக்கு உதவியதாக பதிந்தார். குற்றப்பத்திரிகையில் மடத்தில் நடக்கும் குளறுபடிகளையும் சாமிகளின் விதிமீறல்களையும் குறிப்பிட்டு சங்கர்ராமன் எழுதிய கடிதங்களாலும் அவர் பொதுவெளியில் இவற்றை வெளியிட மிரட்டியதாலும் கவலையுற்ற மடத்தலைவர்கள் இருவரும் அவரை அழிக்க திட்டமிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 2005ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி புதுவை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் இரு மடத்தலைவர்களும் பிணை விடுப்பில் வெளியே வந்தனர். ஏப்ரல் 5,2011 அன்றைய நிலவரப்படி இன்னும் 20 சான்றுறைஞர்கள் விசாரிக்கப்பட வேண்டி இருந்தது. இந்நிலையில் விசாரிக்கப்பட்ட 177 சாட்சிகளில் பலர் தங்கள் முந்தையக் கூற்றுகளை மறுத்துள்ளனர்[2].

ஆகத்து 25, 2011 அன்று இந்தக் கொலை வழக்கை விசாரித்து வரும் புதுவை நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசுவது போன்று வெளியாகியுள்ள ஒலிநாடாக்கள் நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கின் தீர்ப்பை மாற்ற முயல்வதாக சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 5ஆம் நாள் இறுதி விசாரணை நடத்தவிருந்த நிலையில் புதுவை அமர்வு நீதிமன்றத்திற்கு மேலும் தொடர இடைக்காலத் தடை விதித்து இது குறித்த விசாரணையை நடத்துமாறு உயர்நீதிமன்றத்தின் ஊழல் கண்காணிப்புப் பதிவாளருக்கு உத்தரவிட்டது. [3]

தீர்ப்பு

தொகு

காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலில் மேலாளராக பணியாற்றி வந்த சங்கரராமன் கொலை வழக்கில் ஜயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் அவர்களுடன் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரையும் புதுவை நீதிமன்றம் மூலக் காரணம் நிருபிக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக 27.11.2013 அன்று விடுதலை செய்தது.[4][5][6]இவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யத் தேவையில்லை என்று உள்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த கருத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரகோத்கி தெரிவித்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 'Sankararaman murder brutal, cold-blooded'
  2. Hearing in Sankararaman murder case adjourned to April 9
  3. நீதிபதியுடன் ஜெயேந்திரர் 'பண பேர' பேச்சு: சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை![தொடர்பிழந்த இணைப்பு] தட்ஸ்தமிழ் இணைய செய்தித்தளத்தில் ஆகத்து 25,2011
  4. கொலை: ஜயேந்திரர் உள்பட 23 பேரும் விடுதலை
  5. கொலை வழக்கு தீர்ப்பின் முழு விவரம்
  6. http://www.dailythanthi.com/2013-11-27-Sankararaman-Murder-case-Verdict-Full-Details
  7. "நீதியை மறைக்கும்நிழல் விலகுமா?". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 25 ஆகத்து 2014. p. 4. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்ராமன்_கொலை_வழக்கு&oldid=3689237" இலிருந்து மீள்விக்கப்பட்டது