உள்துறை அமைச்சகம் (இந்தியா)

உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) என்பது நாட்டின் உள்விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இவ்வமைச்சகத்தின் பணிகள் பல்வேறாகயிருந்தாலும் முக்கியமாக உள்நாட்டின் பாதுகாப்பையும், உள்நாட்டுக் கொள்கையையும் உறுதிசெய்வதாகும். மாநில அரசியல் அமைப்பு உரிமைகளுக்குட்பட்டு மனிதவளம், நிதி உதவி மற்றும் ஆலோசனைகளை மாநிலங்களுக்கு வழங்குகிறது.[3] இதன் தலைவர் உள்துறை அமைச்சர் எனப்படுவார். உள்துறை இணை அமைச்சர்களும், இந்தியக் குடியியல் அதிகாரிகளான செயலர்களும் இவ்வமைச்சகத்தில் செயல்படுகிறார்கள்.

இந்திய உள்துறை அமைச்சகம்
गृह मंत्रालय
அமைச்சகம் மேலோட்டம்
அமைப்பு15 ஆகத்து 1947; 77 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்உள்துறை அமைச்சகம், நடுவண் செயலகக் கட்டிடம், புது தில்லி
28°36′50″N 77°12′32″E / 28.61389°N 77.20889°E / 28.61389; 77.20889
ஆண்டு நிதிரூபாய் 196034.94 கோடி (2023–24)[1]
அமைச்சர்
பொறுப்பான துணை அமைச்சர்கள்
அமைச்சகம் தலைமை
கீழ் அமைப்புகள்
வலைத்தளம்mha.nic.in

இதன் தற்போதைய மூத்த அமைச்சர் அமித் சா மற்றும் இணை அமைச்சர்கள் நித்தியானந்த ராய், அஜய் மிஸ்ரா தெனி மற்றும் நிசித் பிரமாணிக் ஆவார்.

நோக்கம்

தொகு

உறுதியான மற்றும் வளமான நாடாக இந்தியா வளர, நாட்டின் அமைதியும், ஒற்றுமையும் கருத்தில் கொண்டு இவ்வமைச்சகம் கீழ் கண்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது:

  • இராணுவம், கிளர்ச்சி மற்றும் தீவிரவாதம் உட்பட உள்நாட்டு அச்சுறுத்தல்களை நீக்குகிறது.
  • சமூக ஒற்றுமையை உண்டாகுதல், பாதுகாத்தல், உறுதிசெய்தல்
  • சட்டத்தை அமலாக்கி தகுந்த நேரத்தில் நீதியைக் காத்தல்
  • குற்றங்கள் நிகழாத சமுதாயத்தை அமைத்தல்
  • மனித உரிமையை நிலைநிறுத்தல்
  • இயற்கை மற்றும் மனித பேரழிவுகளால் உண்டான இழப்புகளை சீர்செய்தல்

உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள்

தொகு
  1. இந்திய உளவுத்துறை[4]
  2. தேசியப் புலனாய்வு முகமை
  3. தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
  4. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடும்போக்குவாத தடுப்புப் பிரிவு
  5. தேசிய பாதுகாப்புப் படை
  6. பன்னோக்கு முகமை மையம்
  7. தேசிய புலனாய்வுக் கட்டமைப்பு
  8. கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம்
  9. தில்லி காவல்துறை

துறைகள்

தொகு

இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதி, 1961ன்[5] படி இவ்வமைச்சகம் கீழ்கண்ட துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

எல்லை மேலாண்மைத் துறை
இந்திய கடலோரங்கள், சர்வதேச எல்லைகள் உட்பட இந்திய எல்லைகளை கவனிக்கிறது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை
இந்திய காவல்துறை, சட்ட ஒழுங்கு மற்றும் மக்கள் மறுவாழ்வு ஆகியவற்றை கவனிக்கிறது.
ஜம்மு & காஷ்மீர் விவகாரத் துறை
இந்திய வெளியுரவு அமைச்சகத்தின் தலையீடு அல்லாத ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிற விவகாரங்களில் அரசியலமைப்பை மேற்பார்வை யிடுகிறது.
உள்நாட்டு துறை
இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஆகியவர்களின் அலுவல் ஏற்பையும், இந்தியப் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களின் நியமனத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.
அலுவல் மொழித் துறை
இந்திய அலுவல்மொழிச் சட்டம், 1963ன் படி அலுவல் மொழி பயன்பாட்டை நிர்வகிக்கிறது.
மாநிலத் துறை
மத்திய-மாநில உறவு, மாநிலங்களுக்கிடையேயான உறவு, இந்திய ஒன்றியப் பகுதிகளின் உறவு மற்றும் சுதந்திர போரட்ட வீரர்களின் ஓய்வூதியம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது

பிரிவுகள்

தொகு

நிர்வாகப் பிரிவு

தொகு

நாட்டின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்புப் பணிகள், அமைச்சகத்தின் பிற பிரிவுகளின் பணிகளைத் தீர்மானித்தல், தகவல் உரிமைச் சட்டம் 2005ன் படி தகவல்களை கண்காணித்தல் ஆகியவை இதன் பணிகளாகும். மேலும், அரசியல் அதிகார அட்டவணை, பத்ம விருதுகள், வீர விருதுகள், ஜீவன் ரக்ஷா படக் விருதுகள், தேசியக் கொடி, தேசியச் சின்னம், மாநிலங்களின் சின்னம் மற்றும் செயலாளர்களின் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றையும் தீர்மானிக்கிறது.

எல்லை மேலாண்மைப் பிரிவு

தொகு

நாட்டின் நிர்வாகம், இராசதந்திரம், பாதுகாப்பு, புலனாய்வு, சட்டம், ஒழுங்குமுறை மற்றும் நிதி முகமைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, சர்வதேச எல்லைகள், உள்கட்டமைப்புகள், எல்லைப்பகுதி மேம்பாடுகள், கடலோரப் பாதுகாப்பு மற்றும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டைகள் ஆகியவற்றை செய்துமுடிக்கிறது.

மத்திய மாநில பிரிவு

தொகு

ஆளுநர் நியமனம், புதிய மாநிலம் உருவாக்கல், நாடாளுமன்ற பிரதிநிதிகள், மாநிலங்களுக்கிடையேயான எல்லைப் பகிர்வு, மாநிலத்தின் குற்ற சூழல்கள் மேற்பார்வை, மாநிலத்தில் குடியரசு ஆட்சியை அமலாக்கல், குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு முறை போன்ற மத்திய மாநில அரசு விவகாரங்களிலை கையாளுகிறது.

ஒருங்கிணைப்புப் பிரிவு

தொகு

நாடாளுமன்ற விவகாரங்கள், பொது புகார்கள்(public grievances), அமைச்சகத்தின் ஆண்டுச் சுற்றறிக்கைகள், அமைச்சகத்தின் ஆண்டுத் திட்டங்கள், பதிவு நினைவாற்றல் அட்டவணை, உளமைச்சக வேலை தரவுகள் போன்றவற்றில் அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பை பேணுகிறது.

பேரழிவு மேலாண்மைப் பிரிவு

தொகு

இயற்கை(பஞ்சம், தொற்று நோய்கள் உட்பட) மற்றும் மனிதப் பேரழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து நிவாரணங்கள் வழங்குவது தன் பொறுப்பாகும். மற்றும் சட்டம், கொள்கை, தடுப்பு, கட்டமைப்பு, மட்டுப்படுத்தல் போன்றவைகள் மூலம் மறுவாழ்விற்கு துணை புரிகிறது.

நிதிப் பிரிவு

தொகு

ஒருங்கிணைந்த நிதித் திட்டத்தின் படி அமைச்சகத்தின் வரவுசெலவுகளை ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்தி நிர்வகிக்கிறது.

வெளிநாட்டினர் பிரிவு

தொகு

நுழைவு சீட்டு, குடியேற்றம், குடியுரிமை, இந்திய வெளிநாட்டு குடியுரிமை, வெளிநாட்டினர் பங்களிப்பு மற்றும் விருந்தோம்பல் ஏற்பு போன்றவைகளை கையாளுகிறது.

சுதந்திரப்போராட்ட வீரர்கள் & மறுவாழ்வுப் பிரிவு

தொகு

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியத் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்துகிறது. கிழக்கு மற்றும் மேற்கு பாக்கிஸ்தான், வடக்கு இலங்கை, திபெத் போன்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறது.

மனித உரிமைப் பிரிவு

தொகு

தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமை போன்ற விவகாரங்களிலும், மனித உரிமை காப்பதிலும் இப்பிரிவு தலையிடுகிறது.

உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு

தொகு

உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு -1 தேசவிரோத மற்றும் கிளர்ச்சி நடவடிக்கைகள் செய்யும் அமைப்புகள், தீவிரவாத கொள்கை மற்றும் செயல்பாடுகள், பாதுகாப்பு அனுமதிகள், பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மற்றும் அதன் செயலாளர்களின் நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்தல் உட்பட உள்நாட்டு சட்ட ஒழுங்கு ஆகியவற்றை கண்காணிக்கிறது.

உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு -2 ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப் பொருள் மற்றும் போதை கட்டுப்பாட்டு செயலகம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை கையாளும் பிரிவாகும். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவகாரங்கள், சில ஆணையங்களின் விசாரணைகள், குற்றம் சாட்டப்பட்ட மற்றும் சரணடைந்தவர்களின் முடிவு நிலை அகியவற்றையும் புரிகிறது.

ஜம்மு-காஷ்மீர் பிரிவு

தொகு

அரசியலமைப்புச் சட்டம் 370ன் படி சம்மு காசுமீரின் அரசியல் விவகாரங்கள் மற்றும் தீவிரவாத/இராணுவ பொதுக் கொள்கைகளில் தலையிடுகிறது. மற்றும் பிரதமரின் சிறப்புத் திட்டத்தையும் இம்மாநிலத்தில் அமல்படுத்துகிறது.

சட்டப் பிரிவு

தொகு

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், குற்ற நடவடிக்கைகள் நடைமுறைச் சட்டம் மற்றும் ஆணைக்குழு விசாரணைச் சட்டம் ஆகிய சட்டவிசயங்கள் இப்பிரிவைச் சார்ந்ததாகும். குடியரசுத் தலைவரின் தலையீடு, சுதந்திரத்திற்கு முன்னிருந்த அரசியல்வம்ச ஓய்வூதியம், 72ம் சரத்துப்படி கருணை மனுக்கள் போன்ற மாநில சட்ட விவகாரங்களிலும் தலையிடுகிறது.

நக்சல் மேலாண்மைப் பிரிவு

தொகு

நக்சலைட்களுக்கு எதிராக 2006 அக்டோபர் 19-இல் உருவாக்கப்பட்டப் பிரிவாகும். நக்சலைட்களின் நிலை, பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள், தேவைப்படும் இதர கடை நிலை சட்ட மற்றும் கொள்கைகளை கண்காணிக்கிறது. உரிய அமைச்சகத்தை மேற்பார்வையிட்டு, எதிர்ப்புத் திட்டங்களின் செயல்படுகளை உறுதிபடுத்துகிறது.

வடகிழக்குப் பிரிவு

தொகு

இந்திய வடகிழக்கு மாநிலங்களின் சட்ட ஒழுங்கு மற்றும் இதர அமைப்புகளின் தேசவிரோத கலவரங்களைக் கண்காணிக்கிறது.

காவல்துறை பிரிவு

தொகு

இந்தியக் காவல் பணியின் கட்டுப்பாட்டு மையமாகவும், குடியரசுத் தலைவரின் காவலர் விருதுகள் மற்றும் வீரதீர விருதுகளின் காவல்துறை -1 பிரிவு தலையிடுகிறது.

மத்திய காவல் படையின் பணியாளர்கள் மற்றும் நிதி சார்ந்த விடயங்களும், மத்திய காவல் படையின் செயல்திட்டங்கள், நலஉதவுகள், கொள்கைகள் ஆகியவற்றை காவல்துறை -2 பிரிவு நிர்வகிக்கிறது. மத்திய காவல் ஆயுதப் படை இப்பிரிவின் கீழ் செயல்படுகிறது.

காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு

தொகு

இப்பிரிவு மாநிலங்களின் காவல் படை மற்றும் மத்திய காவல் படையின் நவீனமயமாக்கல், மேற்பார்வை, சீர்திருத்தங்கள், கொள்கைகள் ஆகியவற்றைப்புரிகிறது. மேலும் முக்கிய நபர்கள், முக்கிய வரலாற்று தலங்கள், முக்கிய தொழிற்நுட்ப மையங்கள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.

கொள்கை திட்டப்பிரிவு

தொகு

உள்நாட்டுக் பாதுகாப்புக் கொள்கை, தீவிரவாத எதிர்ப்பிற்கு சர்வதேச ஒத்துழைப்பு, சர்வதேச உடன்படிக்கைகள், இருதரப்பு உதவி ஒப்பந்தங்கள் மற்றும் இதர சார்ந்த கொள்கைகளில் இப்பிரிவு செயல்படுகிறது.

ஒன்றியப் பகுதிப் பிரிவு

தொகு

டெல்லி உட்பட இந்திய ஒன்றியப்பகுதிகளின் சட்டம் மற்றும் அரசியல் விசயங்களின் தலையிடுகிறது. மேலும் அருணாச்சல் பிரேதேசம், கோவா, மிசோராம் மற்றும் ஒன்றியப்பகுதிகளின் இந்திய ஆட்சிப் பணி, டெல்லி-அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு குடியியல் பணி, டெல்லி-அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு காவல் பணி ஆகிய அதிகாரிகளை நிர்வகிக்கிறது. மேலும் ஒன்றியப்பகுதிகளின் குற்றங்கள், சட்ட ஒழுங்குகள் ஆகியவற்றையும் கண்காணிக்கிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "MHA gets Rs 1.96 lakh crores in Budget-2023; focus on women safety, police modernisation". The Print. https://www.theprint.in/india/mha-gets-rs-1-96-lakh-crores-in-budget-2023-focus-on-women-safety-police-modernisation/1348413/%3famp. 
  2. "ORGANIZATIONAL CHART OF MINISTRY OF HOME AFFAIRS" (PDF). Ministry of Home Affairs, இந்திய அரசு. November 30, 2017. Archived from the original (PDF) on 11 September 2017. பார்க்கப்பட்ட நாள் January 17, 2018.
  3. உள்துறை அமைச்சகம் முகவுரை
  4. "Intelligence bureau (IB) - India Intelligence Agencies". Fas.org. 30 May 2008. Archived from the original on 26 November 2012. பார்க்கப்பட்ட நாள் 9 December 2012.
  5. Pk=276 உள்துறை அமைச்சகப் பிரிவுகள்