சஞ்சயா இராசாராம்

சஞ்சயா இராசாராம் (Sanjaya Rajaram, பிறப்பு:1943) இந்திய மாநிலம் உத்திரப் பிரதேசத்தில் சிற்றூரொன்றில் பிறந்து மெக்சிக்கோவில் குடிமகனாக வாழும் வேளாண் அறிவியலாளர் ஆவார்.[1] இவருக்கு 2014ஆம் ஆண்டுக்கான, வேளாண்மையில் நோபெல் பரிசினை ஒத்த, உலக உணவுப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.[2][3] இவரது ஆய்வு முயற்சிகளால் உலக கோதுமை உற்பத்தியை 200 மில்லியன் கோடி டன்னிற்கும் கூடுதலாக உயர்த்தியமைக்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.[1] மெக்சிக்கோவில் உள்ள பன்னாட்டு மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையத்தில் தமது ஆய்வுகளின் மூலமாக குளிர்கால கோதுமை இரகத்திற்கும் வேனில்கால கோதுமை இரகத்திற்கும் ஒட்டு ஏற்படுத்தி புதிய ஒட்டுவீரிய கோதுமையை அறிமுகப்படுத்தினார்; இவை பலதரப்பட்ட வெப்பச் சூழல்களிலும் கூடுதலான மகசூல் தரக்கூடியவை.[1]

சஞ்சயா இராசாராம்

பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்படும் நார்மன் இ போர்லாக், பன்னாட்டு மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையத்தின் (சிஐஎம்எம்ஒய்டி) கோதுமைத் திட்டத்தை 1976-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை வழிநடத்தி வந்தார். அவருக்குப் பிறகு அத்திட்டத்தின் இயக்குநர் பொறுப்பை ராசாராம் ஏற்றுள்ளார்.

இளமைக்காலமும் கல்வியும்

தொகு

ராசாராம் 1943இல் உத்திரப் பிரதேசத்தின் சிற்றூர் ஒன்றில் வறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கிய இராசாராம் வாரணாசி மாவட்டத்திலேயே முதலாவது மாணவராக விளங்கினார். மாநில அரசின் உதவித்தொகை பெற்று படித்து வந்த இராசாராம் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் ஜான்பூர் கல்லூரியில் 1962இல் வேளாண்மையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் எம்.எஸ்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் புது தில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் 1964ஆம் ஆண்டு மரபியல் மற்றும் பயிர் வளர்ப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஆத்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். அங்கிருந்து மெக்சிக்கோவில் போர்லாக் தலைமையிலான பன்னாட்டு மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையத்தில் பணியில் சேர்ந்தார்.[1]

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "The World Food Prize Borlaug Centennial Laureate". Centro Internacional de Mejoramiento de Maíz y Trigo (International Maize and Wheat Improvement Center). 18 சூன் 2014. Archived from the original on 2014-07-25. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2014.
  2. "உலக உணவுப் பரிசு இணைய அறிவிப்பு". Archived from the original on 2014-07-05. பார்க்கப்பட்ட நாள் 2014-07-04.
  3. "கோதுமை உற்பத்தியை உயர்த்திய இந்திய விஞ்ஞானிக்கு உலக உணவு விருது". தி இந்து (தமிழ்). 19 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சயா_இராசாராம்&oldid=3552671" இலிருந்து மீள்விக்கப்பட்டது