சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம்
சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம் (Chapai Nawabganj District) (வங்காளம்: চাঁপাই নবাবগঞ্জ) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ராஜசாகி கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் வடமேற்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நவாப்கஞ்ச் நகரம் ஆகும்.
இந்தியப் பிரிவினையின் போது சபாய் நவாப்கஞ்ச் பகுதி கிழக்கு பாகிஸ்தானுக்குப் பிரித்து தரப்பட்டது.[1] 1984-இல் சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம் புதிதாக துவக்கப்பட்டது.[1]இம்மாவட்டம் வங்காள தேசத்தின் மாழ்பழத் தலைநகர் எனச் சிறப்பு பெயர் பெற்றுள்ளது.
மாவட்ட எல்லைகள்
தொகுசபாய் நவாப்கஞ்ச் மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கில் இந்தியாவின் மால்டா மாவட்டம் மற்றும் நாடியா மாவட்டங்களும், கிழக்கில் நவகோன் மாவட்டம் மற்றும் தென்கிழக்கில் ராஜசாகி மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
தொகு1702.55 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சபாய் நவாப்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக சபாய்கஞ்ச், சிப்கஞ்ச், நச்லோல், கோமதஸ்வபூர் மற்றும் வாலஹத் என ஐந்து துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் சபாய்நவாப்கஞ்ச், சிப்கஞ்ச், ரோகன்பூர் மற்றும் நச்லோல் என நான்கு நகராட்சி மன்றங்களையும், நாற்பத்தி ஐந்து கிராம ஒன்றியக் குழுக்களையும்,1135 கிராமங்களையும் கொண்டுள்ளது.
சபாய் நவாப்கஞ்ச் மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 5280 மற்றும் தொலைபேசி குறியிடு எண் 0781 ஆகும். இம்மாவட்டம் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
தொகுஇம்மாவட்டத்தில் பத்மா ஆறு, மோகனாந்த ஆறு, புனர்பா ஆறு, தங்கோன் ஆறு, மரகத ஆறு, பக்ளா ஆறு, நொண்டகுஜா ஆறுகள் பாய்வதால் நீர் வளம் மற்றும் மண் வளம் கொண்டுள்ளது.
இங்கு மா, பலா, வாழை, கொய்யா, விளாச்சி, எண்ணெய் வித்துக்கள், நெல், சணல், கரும்பு, கோதும், வெற்றிலை, கொய்யா, தென்னை முதலியனப் பயிரிடப்படுகிறது.[2]
தட்ப வெப்பம்
தொகுஇம்மாவட்டத்தில் ஏப்ரல் முதல் சூலை முடிய அதிக வெப்பமும், குளிர்கால தட்ப வெப்பம் ஏழு முதல் 16 பாகை செல்சியஸ் வரை வெப்பம் காணப்படுகிறது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1448 மில்லி மீட்டராகும்.
மக்கள் தொகையியல்
தொகு1702.55 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 16,47,521 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,10,218 ஆகவும், பெண்கள் 8,37,303 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 97 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 968 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 49.8 % ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
கல்வி
தொகுவங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
கல்வி நிலையங்கள்
தொகுசபாய் நவாப்கஞ்ச் மாவட்டத்தில் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளது. பிற கல்லூரிகள் அல்ஹஜ் அப்துஸ் சமத் கல்லூரி, அல்ஹஜ் செரீப் அகமது பள்ளி மற்றும் கல்லூரி, அலிநகர் பள்ளி மற்றும் கல்லூரி, பீர் சிரேஸ்தா சாகிப் கேப்டன் முகைதீன் ஜஹாங்கீர் கல்லூரி, சார தராப்பூர் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி, கர்பலா உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி, மிர்சாபூர் கல்லூரி, நாராயண்பூர் ஆதர்ச கல்லூரி, ரஹன்பூர் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, ராணி ஹாத்தி கல்லூரி, ரோகன்பூர் பி. எம். ஐடியல் கல்லூரி, சாகித் ஸ்மிருதி கல்லூரி, உசிர்பூர் ஆதர்ச கல்லூரி, சபாய் நவாப்கஞ்ச் சி. டி. கல்லூரி, சிப்கஞ்ச் மகளிர் கல்லூரி மற்றும் சாரா வங்காள ஏ கே போஜ்லோல் ஹக் கல்லூரிகள் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mazharul Islam Taru (2012). "Nawabganj District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ Chapai Nawabganj District, Bangladesh
- ↑ Community Report Chapai Nawabganj Zila June 2012 [தொடர்பிழந்த இணைப்பு]