சமஸ் (Samas, பிறப்பு: டிசம்பர் 4, 1979), தமிழகத்தின் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார்.

Tamil writer Samas.JPG

வாழ்க்கைக் குறிப்புகள்தொகு

சமசின் தந்தை மு. சந்திரசேகரன், தாய் மு. இரா. மலர்க்கொடி. மன்னார்குடி இவர் பிறந்த ஊர். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்ட இவர் தன் தாய்வழித் தாத்தா சு. ராஜகோபாலனின் ஆதரவில் வளர்ந்தார். தன்னுடைய தொடக்கக் கல்வியை மன்னார்குடி சேவியர் ஜீசஸ் பொதுப் பள்ளி, இலக்கணாம்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மன்னார்குடி பின்லே தொடக்கப் பள்ளி ஆகியவற்றிலும் மேல்நிலைக் கல்வியை பின்லே மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பின்னர், மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முடித்தார். பள்ளி நாட்களில் ‘இந்தியன்’, கல்லூரி நாட்களில் ‘இந்தியன் இனி’ என்று தொடங்கி பின்னர் ‘தினமலர்’, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘ புதிய தலைமுறை’ என்று பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி தற்போது தி இந்து தமிழ் நாளிதழில் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னையில் வசிக்கிறார். மனைவி ரா.ரேகா. இரு குழந்தைகள் உள்ளனர்.

எழுத்துலக அறிமுகம்தொகு

சிறு வயதிலிருந்தே எழுதி வருகிறார். கல்லூரி நாட்களில் மூன்று கவிதை நூல்களை வெளியிட்டார். நினைவுகள், கண்ணீர் காதலன், நிழல். சமசைத் தமிழகம் அறிந்த எழுத்தாளராக அறிமுகப்படுத்தியது தினமணி நாளிதழின் ‘ஞாயிறு கொண்டாட்டம்’ இணைப்பிதழில் ‘ஈட்டிங் கார்னர்’ பகுதியில் அவர் எழுதிய உணவு தொடர்பான கட்டுரைகள். 2009-ல் ‘சாப்பாட்டுப் புராணம்’ என்ற பெயரில் அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்தது. தமிழர் உணவைக் கொண்டாடும் தமிழின் முதல் நூல் என்ற அடைமொழியோடு வெளியான இந்நூலை ‘இந்தியா டுடே’ வார இதழ் “இந்தப் புத்தகம் பெரும் பொக்கிஷமாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டது. தொடர்ந்து, ‘தினமணி’யின் தலையங்கப் பக்கக் கட்டுரையாளர்களில் ஒருவராக மாறிய சமஸ், பின்னாளில் ‘ஆனந்த விகடன்’ வார இதழுக்கு மாறிய பின்னர் அதன் பத்தி எழுத்தாளர் ஆனார். பிறகு, ‘புதிய தலைமுறை’ நிறுவனம் தொடங்கவிருந்த ‘புது யுகம்’ தொலைக்காட்சியின் ஆரம்ப காலக் குழுவில், புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரான பால.கைலாசத்தின் கீழ் பணியாற்றினார். பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குழுமம் தமிழில் நாளிதழ் தொடங்கியபோது அதன் நிறுவன அணியில் பங்கேற்க அழைக்க, தற்போது ‘தி இந்து’ நாளிதழில் பணியாற்றுகிறார்.

உலகின் மாபெரும் ஜனநாயக நிகழ்வான இந்தியத் தேர்தலை நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும் எப்படிப் பார்க்கிறார்களென நாடெங்கும் பயணித்து எழுதிய 'இந்தியாவின் வண்ணங்கள்', ஆதிகுடிகளான கடலோடிகள், விவசாயிகள், வனவாசிகள் நிலையைக் களத்தில் தங்கிப் பதிவு செய்யும் 'நீர், நிலம், வனம்' இரு தொடர்களும் தமிழ் இதழியலில் சமஸ் முன்னெடுத்த முக்கியமான முன்மாதிரி முயற்சிகள். மேலும் 2016ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் போது இவர் எழுதிய 'அரசியல் பழகு' என்ற தொடர், அரசியலுக்கும் பொது மக்கட் சமுதாயத்துக்கும் இடையேயான பிணைப்பையும் பரஸ்பர சார்பையும் உரக்கக் கூறியது. சமகாலப் பிரச்சினைகளை வரலாற்றுப் பின்புலத்துடன் அணுகும் சமஸின் கட்டுரைகள், பொதுப் புத்தியை உடைப்பவை. மனசாட்சியுடன் உரையாடுபவை. மாற்றங்களைக் கோருபவை.[1]

நூல்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. யாருடைய எலிகள் நாம்? பின் அட்டையிலிருந்து

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமஸ்&oldid=2761996" இருந்து மீள்விக்கப்பட்டது