சமூக ஆய்வு
சமூக ஆய்வு (Social research) என்பது, ஒரு முறையான திட்டத்தின் அடிப்படையில் சமூக அறிவியலாளர்களால் நடத்தப்படும் ஆய்வு ஆகும். சமூக ஆய்வு முறைகளைக் அளவறி ஆய்வு, பண்பறி ஆய்வு என இரண்டாகப் பிரிக்கலாம்.[1] அளவறி ஆய்வு முறைகள் சமூகத் தோற்றப்பாடுகளை அளவிடக்கூடிய சான்றுகளின் ஊடாக அணுகுகின்றன. இவை, உண்மையானவையும் நம்பத்தகுந்தனவுமான முடிவுகளை எட்டுவதற்குப் பெரும்பாலும் புள்ளியியல் பகுப்பாய்வுகளில் தங்கியுள்ளன. பண்பறி ஆய்வுகள் சமூகத் தோற்றப்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கு, நேரடிக் கவனிப்பு, பங்கேற்பாளருடனான தொடர்பாடல்கள், நூல்களின் பகுப்பாய்வு போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அத்துடன் இவை, பொதுமைப்படுத்தலிலும் பார்க்கச் சூழ்நிலை சார்ந்த தற்சார்பான துல்லியத்துத்துக் கூடுதல் அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ஆய்வு முறைகள் அளவறி முறை, பண்பறி முறை என இரண்டாக வகைப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலான முறைகள் இரண்டு வகைகளின் கூறுகளையும் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பண்பறி முறைத் தரவுகளின் பகுப்பாய்வில் முதல் தரவுகளை முறையான தகவல்களாகக் குறிமுறையாக்கம் செய்வதற்குக் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை பயன்படுகிறது.[2] ஆகவே, இரண்டு முறைகளையும் வேறுபடுத்துவதற்கு அவற்றிடையே எளிமையான எல்லைக்கோடு ஒன்று இல்லாமல், அளவறி முறைக்கும், பண்பறி முறைக்கும் இடையே சிக்கலான தொடர்பு காணப்படுகிறது.
பெருமளவாகப் பரந்து காணப்படும் சமூகத் தோற்றப்பாடுகளைப் பகுப்பாய்வு செய்வதற்குச் சமூக அறிவியலாளர்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இவை பல கோடி தனியாட்களிடமிருந்து பெறப்படும் குடிமதிப்பு ஆய்வுத் தரவுகள் முதல், ஒற்றை ஆளின் சமூக அனுபவங்களில் ஆழமான பகுப்பாய்வுகள் வரையும்; தற்காலத் தெருக்களில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிப்பதில் இருந்து, பழங்கால வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்வதுவரை வேறுபடுகின்றன. செந்நெறிச் சமூகவியலிலும், புள்ளியியலிலும் உருவான முறைகள், அரசறிவியல், ஊடக ஆய்வு, சந்தை ஆய்வு போன்ற பிற துறைகளின் அடிப்படைகளாக உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Shackman, Gene. What is Program Evaluation, A Beginner's Guide. Module 3. Methods. The Global Social Change Research Project. 2009. Available at http://www.ideas-int.org. See Resources.
- ↑ Elizabeth H Bradley; Leslie A Curry; Kelly J Devers (August 2007). "Qualitative Data Analysis for Health Services Research: Developing Taxonomy, Themes, and Theory". Health Serv Res 42 (4): 1758–1772. doi:10.1111/j.1475-6773.2006.00684.x. பப்மெட்:17286625.