சரோஜினி பாலநந்தன்

சரோஜினி பாலநந்தன் (Sarojini Balanandan)(15 மே 1938 - 29 ஆகத்து 2023) கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முக்கியத் தலைவராகவும், இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கேரள மாநிலக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். சரோஜினியின் கணவர் இ. பாலநந்தனும் பொதுவுடமைக் கட்சியின் அரசியல்வாதி ஆவார்.[1]

சரோஜினி பாலநந்தன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1938-05-15)15 மே 1938
சக்திகுளாங்கார, திருவிதாங்கூர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு29 ஆகத்து 2023(2023-08-29) (அகவை 85)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்இ. பாலநந்தன்

வாழ்க்கை தொகு

சரோஜினி 1938ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள சக்திகுளங்கராவில் கேசவன் மற்றும் நாராயணி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். கொல்லத்தில் உள்ள எஸ். என். மகளிர் கல்லூரியில் இடைநிலைப் படிப்பை முடிப்பதற்கு முன், 1 செப்டம்பர் 1957இல் இ பாலநந்தனை மணந்தார். சிறீசித்ரா ஆலையில் நடந்த தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக பாலநந்தன் சில நாட்கள் வீட்டை விட்டு வெளியில் இருக்க வேண்டியதாயிற்று. இதற்கிடையில், சரோஜினி ஆலுவாவில் உள்ள அசோகா நூற்பாலைத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பாலநந்தன் தனது சுயசரிதையில், சரோஜினி நெருக்கடி நிலையின் போது வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எருமைகள் மற்றும் மாடுகளை வளர்த்து, பால் பண்ணையாளராகவும் பணியாற்றினார் எனத் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில், இவர் எந்த தொழிற்சங்கத்திலும் அலுவலகப் பொறுப்பாளராக இல்லை. இருப்பினும், இவர் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களிலும், உழைக்கும் குடும்பங்களில் பெண்களை ஒழுங்கமைப்பதிலும் முன்னணியிலிருந்தார்.[2] 1970களில், எர்ணாகுளத்தில் சில மொத்த வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததை எதிர்த்து, சரோஜினி உள்ளிட்ட பெண்கள் ஆர்வலர்கள் போராடினர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் தலைவர்களைக் கடைக்காரர்கள் மற்றும் குண்டர்கள் அடித்து, கடையின் கதவுகளை மூடி உள்ளே வைத்துப் பூட்டினர். வேலைநிறுத்தம் மக்களின் ஆதரவைப் பெற்றதால் வியாபாரிகள் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1986ஆம் ஆண்டு பொதுவுடமை கட்சியின் அனைத்திந்திய வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தொழிலாளர் பேரணியில் கலந்து கொண்டபோது சரோஜினி தாக்கப்பட்டார். கை எலும்பு முறிந்து பல நாட்கள் மருத்துவமனையிலிருந்தார். களமசேரியின் முதல் பெண் நிர்வாகி சரோஜினி ஆவார். இவர் 1979 முதல் 1984 காலகட்டத்தில் களமச்சேரி (இப்போது நகராட்சி) ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.[3] 1983 முதல் 1997 வரை மகளிர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த சரோஜினி, இச்சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். 1985ல் இந்தியப் பொதுவுடமை கட்சி-மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினரானார். இவர் 27 ஆண்டுகள் இந்தப் பதவியிலிருந்தார்.[4] இதற்கிடையில், 1996 முதல் 2001 வரை, இவர் மாநில சமூக நல வாரியத்தின் தலைவராக பணியாற்றினார். 2012ஆம் ஆண்டு மாநிலக் குழுவிலிருந்து சரோஜினி தனது உடல்நிலை காரணமாகப் பதவி விலகினார். கோவிட் பெருந்தொற்று நோயின் போது பரவூரில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்ட வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டார். சரோஜினி 29 ஆகத்து 2023 அன்று தனது 85வது வயதில் இறந்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Bureau, The Hindu (2023-08-30). "Former CPI(M) State committee member Sarojini Balanandan dead". https://www.thehindu.com/news/cities/Kochi/former-cpim-state-committee-member-sarojini-balanandan-dead/article67251558.ece. 
  2. Sunday, Suppliment (3 September 2023). "A symbol of forwardness". பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
  3. "സമരഭരിതമായ ജീവിതം; കരുത്തുറ്റ സംഘാടക". பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
  4. "CPM leader Sarojini Balanandan passes away at 86". பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
  5. "സ്വാമിയുടെ കൈപിടിച്ച്‌ സഖാവായി; സ്‌ത്രീകളെ മുൻനിരയില്‍ എത്തിക്കാൻ മുന്നിട്ടിറങ്ങി". பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜினி_பாலநந்தன்&oldid=3885471" இலிருந்து மீள்விக்கப்பட்டது