சர்வதேச பெண்கள் அமைப்பு
பெண்களுக்கான சர்வதேச அமைப்பு (International Council of Women ) என்பது பெண்களுக்கான மனித உரிமைகளை வாதிடுவதற்கான பொதுவான காரணத்திற்காக தேசிய எல்லைகளுக்கு அப்பால் பணிபுரியும் பெண்கள் அமைப்பாகும். மார்ச் மற்றும் ஏப்ரல் 1888 இல், கனடா, அயர்லாந்து , இந்தியா, ஐக்கிய இராச்சியம், பின்லாந்து, டென்மார்க், பிரான்சு மற்றும் நோர்வே ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த 53 பெண்கள் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 80 பேச்சாளர்கள் மற்றும் 49 பிரதிநிதிகளுடன் பெண் தலைவர்கள் வாசிங்டன், டி. சி.யில் ஒன்று கூடினர். இதில், தொழில்முறை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கலைக்குழுக்கள் மற்றும் நற்பணி மன்றங்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். தேசிய அமைப்புகள் சர்வதேச பெண்கள் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன, இதனால் அவை சர்வதேச அளவில் கவனிக்கப்படுகின்றன. இந்த அமைப்பானது, ஐக்கிய நாடுகள் அவை மற்றும் அதன் நிரந்தரப் பிரதிநிதிகளான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை, பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், ஆகியவற்றுடன் ஆலோசனை அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
ஆரம்பம்
தொகு1882 இல் ஐரோப்பாவிற்கு வருகை தந்த போது, அமெரிக்க வாக்குரிமையாளர்களான எலிசபெத் கேடி ஸ்டாண்டன் மற்றும் சூசன் பிரவுன் அந்தோனி ஆகியோர் பல நாடுகளில் உள்ள சீர்திருத்தவாதிகளுடன் சர்வதேச பெண்கள் அமைப்பின் யோசனை பற்றி விவாதித்தனர். அவர்கள் வீடு திரும்புவதற்கு சற்று முன்பு அவர்களின் மரியாதை நிமித்தமான வரவேற்பு நிகழ்ச்சியில் யோசனையை மேலும் வளர்க்க கடிதப் பரிமாற்றக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தோனி மற்றும் ஸ்டாண்டன் தலைமையிலான தேசிய பெண் வாக்குரிமை சங்கம், மார்ச் 25, 1888 அன்று வாஷிங்டன் டி. சி. இல் சர்வதேச பெண்கள் அமைப்பின் நிறுவனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்த அமைப்பில், லூசியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் கரோலின் எலிசபெத் மெரிக் ஆவார். முதல் பெண்கள் உரிமைகள் மாநாட்டான செனிகா நீர்வீழ்ச்சி மாநாட்டின் நாற்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இருந்தது. [1]