அனைத்துலக பெண்கள் நாள்

(சர்வதேச பெண்கள் நாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.[1] ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

அனைத்துலக பெண்கள் நாள்
அனைத்துலக பெண்கள் நாளுக்கான சுவரொட்டி, மார்ச் 8, 1914
வகைஉலகெங்கும்
முக்கியத்துவம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலின வாதம் மற்றும் வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள்
நாள்மார்ச் 8 (ஆண்டு தோறும்)
தொடர்புடையனஅன்னையர் நாள், குழந்தைகள் நாள், அனைத்துலக ஆண்கள் நாள்

வரலாறு

தொகு
 
டாக்காவில் மார்ச் 8 பெண்கள் நாள் ஊர்வலம்
 
1975 இல் சிட்னியில்

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.[2] 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

பெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலகப் பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.

உருசியாவில் பெண்கள் எழுச்சி

தொகு

1913–1914-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.[3]

ஐநா பேரறிவிப்பு

தொகு

பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலகப் பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "UN WomenWatch: International Women's Day – History". UN.org. பார்க்கப்பட்ட நாள் February 21, 2013.
  2. "United Nations page on the background of the IWD". Un.org. பார்க்கப்பட்ட நாள் March 8, 2012.
  3. "8th of March – International woman's day: in search of the lost memory". Archived from the original on March 13, 2011. பார்க்கப்பட்ட நாள் March 14, 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனைத்துலக_பெண்கள்_நாள்&oldid=3673147" இலிருந்து மீள்விக்கப்பட்டது