சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி
சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி (எஸ்.ஆர்.எம்.மேனிலைப்பள்ளி) சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். இது ஆற்காடு சர் ராமசுவாமி முதலியாரின் நினைவை நிலைநிறுத்தும் வண்ணம் 1958இல் அ.மு.மு. அறக்கட்டளையினால் தொடங்கப்பட்ட பள்ளி ஆகும். 13-ஏக்கர் நிலத்தில் 60 லட்ச ரூபாய் (அன்றைய) மதிப்பில் இப்பள்ளி நிறுவப்பட்டது. 1978-இல் இருபாலர் மேல்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டது. தற்போது ஏறத்தாழ 2000 மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்.
சர் இராமசுவாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
அம்பத்தூர், சென்னை, தமிழ் நாடு | |
தகவல் | |
குறிக்கோள் | முயற்சி திருவினையாக்கும் |
தொடக்கம் | 1958 |
நிறுவனர் | அ.மு.மு.நிறுவனம் |
பள்ளி மாவட்டம் | திருவள்ளூர் |
கல்வி ஆணையம் | முதன்மை கல்வி அலுவலர் (திருவள்ளூர்), மாவட்ட கல்வி அலுவலர் (அம்பத்தூர்) |
பள்ளிக் குறியீடு | 33010907103 (TN EMIS) |
தலைமை ஆசிரியை | வெ. லக்ஷ்மி[1] |
தரங்கள் | ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை |
பால் | இருபால் மாணவர்கள் |
மாணவர்கள் | 2044 |
கல்வி முறை | தமிழ்நாட்டு மாநில கல்வித்திட்டம் |
பள்ளி வரலாறு
தொகுஅம்பத்தூர்-வெங்கடாபுரத்தில் நடேச அய்யரால் தொடங்கப்பட்ட திண்ணைப்பள்ளியே இன்றைய எஸ்.ஆர்.எம்.மேனிலைப்பள்ளியின் வித்தாகும். 1927 ஆம் ஆண்டில் அம்பத்தூர் கல்விக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட இப்பள்ளி ஸ்ரீ மகா கணேசா வித்யாலயா என்ற பெயரில் இயங்கி வந்தது. 1950-களில் நிகழ்ந்த தொழில் விரிவு அம்பத்தூரை மையங்கொண்டிருந்தது; அவ்விரிவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய தொழிலதிபர்கள் அ.மு.மு.முருகப்ப செட்டியார், அ.மு.மு.அருணாச்சலம் ஆகியோர். வேகமாக வளர்ந்து வந்த அம்பத்தூருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளியின் தேவையை உணர்ந்த அம்பத்தூர் கல்விக்கழகத்தார் இவ்விரு தொழிலதிபர்களையும் சந்தித்துப் பேசினர். அ.க.கழகம் மனமுவந்து அளித்த ஸ்ரீ மகா கணேசா வித்யாலயாவை அ.மு.மு.அறக்கட்டளை 12-09-1957 அன்று முறைப்படி ஏற்றுக்கொண்டது.
பல புதிய திட்டங்களோடு பள்ளியின் வளர்ச்சியை மேம்படச் செய்தது அ.மு.மு.அறக்கட்டளை. பள்ளியின் முதல் தாளாளர் எம்.எம். முத்தைய்யா மற்றும் முதல் தலைமையாசிரியர் சி.ஆர்.இராமனாதன் ஆகியோரின் முயற்சியால் பள்ளி மென்மேலும் வளர்ந்தது.
1958இல் பொதுக்கல்வித் துறையின் ஒப்புதல் பெற்று முறையே பள்ளியில் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது படிவம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளியும் தற்போதுள்ள இடமான சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலைக்கு இடம் மாற்றப்பட்டது. நிரந்தரமான உட்கட்டமைப்பு வசதிகளை கோரமாண்டல் பொறியியல் நிறுவனம் மிகக்குறுகிய காலகட்டத்தில் செய்து தந்தனர். 22-6-1960 இல் அன்றைய தமிழக முதலமைச்சர் காமராசர் முன்னிலையில் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் சர் ராமசுவாமி முதலியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்ததன் மூலம் பள்ளி புதிய சகாப்தத்தை நோக்கி அடியெடுத்து வைத்தது. பிறகு 4-07-1960 அன்று பள்ளியைக் காண வருகை புரிந்தனர் அ.மு.மு.முருகப்ப செட்டியார் மற்றும் அ.மு.மு.அருணாச்சலம் - அவர்களுடன் வந்தார் சர் ராமசுவாமி முதலியார். அன்று தொடங்கியது தான் சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி
பொன்விழா
தொகுபள்ளி தொடங்கி ஐம்பதாவது ஆண்டில் பள்ளியின் பொன்விழா 2008 செப்டம்பரில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார்[2].