சஷ்டி தேவி அல்லது சட்டி தேவி (சமக்கிருதம்: षष्ठी, Ṣaṣṭhī) அல்லது ஆறினி என்பாள், குழந்தைகளைக் காக்கும் தெய்வமாகவும், இனப்பெருக்கத்தைச் செழிப்பாக்கும் தெய்வமாகவும் வடநாட்டில் போற்றப்படுமோர் இந்துத் தெய்வம் ஆவாள். நிறைகுடம் ஒன்றாகவும்[1], ஆலமரத்தடியில் ஒரு செந்நிறக் கல்லாகவும், அவளை உருவகித்து வழிபடுவதுண்டு. மாதமொன்றின் இரு சஷ்டி திதிகளின் போதும், இவள் வழிபடப்படவேண்டும். நிறைசூலிகளும், குழந்தை பெற்ற பசும்மேனிப் பெண்டி்ரும், தம் சேய்நலத்துக்காக இவ்வன்னையை வழிபடுவர்.பொதுவாக பழங்காலத்திலிருந்தே, ஆலமரமாகவும், ஆலங்கன்றாகவும், ஆலமரத்தடிச் செந்நிறக் கல்லாகவும், ஆறினி அம்மையை அமர்த்தி வழிபடுவது கீழை இந்தியாவில் வழக்கில் இருந்து வந்திருக்கின்றது..[2][3]

சஷ்டி தேவி
அதிபதிகுழந்தைகளின்
தேவநாகரிषष्ठी
சமசுகிருதம்Ṣaṣṭhī
வகைதெய்வானை
இடம்கந்தகிரி
துணைமுருகன்

உருவவியல்

தொகு

அன்னைத் தெய்வமாக சித்தரிக்கப்படும் ஆறினி, பூனையில் இவர்பவளாகவும், எட்டுக் குழந்தைகள் சூழக் காட்சி தருபவளாகவும் சித்தரிக்கப்படுவாள்.[4][2][5][3] பொதுவாகப் பொன்வண்ணத்தவளாக[4][2] சித்தரிக்கப்படும் ஆறினி அன்னை, அணிமணிகளால் அலங்கரிக்கப்பட்டு மடியில் ஒரு தெய்வீகமரமொன்றின் கிளையை வைத்திருப்பாள்.[6] ஆரம்பகால சிற்ப இலக்கணங்கள், இவள் பூனை முகம் கொண்டவள் என்கின்றன.,[5][7] இதனாலேயே பிற்காலத்தில் அவள் பூனையூர்தி கொண்டவளாக மாறியிருக்க வேண்டும்.

முருகனைப் போல் ஆறுமுகமும் இருகரமும் கொண்டு விளங்கும் சட்டியன்னையை, குசாணர் காலச்சிற்பங்கள் காட்டுகின்றன.[8] யௌதேய நாணயங்களிலும் ஆறினியன்னையின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது.[5][8] மேலும் அகிச்சாத்திரா எனுமிடத்தில் குப்தர் காலத்தைச் (320–550 CE) சேர்ந்த சுடுமண் சஷ்டி சிற்பங்கள் கிடைத்துள்ளன.[8]

ஆறினியை போற்றிப்புகழும் நூல்கள் ஒருபுறம் எழ, அவளை எதிர்மறைப் பொருண்மையாகக் கருதி அச்சுறுத்தும் நூல்களும் ஒருபுறம் எழாமலில்லை. பொ.பி ஐந்தாம் நூற்றாண்டு காசியப்ப சங்கிதை அவளை "ஜடாஹாரிணி" (பிறவியைக் கவர்பவள்) என்றழைக்கின்றது. அதனாலேயே, அவளால் குழந்தை கொல்லப்படக்கூடிய அதிகபட்ச எல்லையான ஆறாம் நாளன்று அவளைப் போற்றச் சொல்கின்றது.[1] குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி அந்நாட்களில் குறைவு என்பதே இவ்வாறு சட்டி, சுட்டிக்காட்டப்படுவதன் மறைகுறி ஆகும்.[1][9][10]

எனினும் கடந்த ஆயிரத்தைநூறு ஆண்டுகளாக, ஆறினி, அன்பான தெய்வமொன்றாகவே வளர்ந்து வந்திருக்கின்றாள். ஏழாம் நூற்றாண்டுக் "கர்சசரிதம்", காதம்பரி நூல்கள், அவளை முறையே ஜடாமாத்ரு (சிசுவின் அன்னை), "பாகுபுத்ரிகா" (பல்குழவிகள் பெற்றாள்) என்று போற்றுகின்றன.[1] குழந்தைகளைக் கவர்ந்து கொன்று வந்து, பின் புத்தரால் நல்வழிக்குத் திருப்பப்பட்டதாகச் சொல்லப்படும் "ஹரிதி" என்ற பௌத்தத் தேவதைக்கும்,, சஷ்டிக்கும் இவ்விடத்தில் பல ஒற்றுமைகளைக் காணலாம். ஹரிதியும் குழந்தைகள் சூழ, பூனையில் இவர்பவள் தான்.[5]

வழிபாட்டு வளர்ச்சி

தொகு
 
கந்தனுக்கும் விசாகனுக்கும் நடுவே ஆறினியம்மை நின்றருளும் குசாணர் சிற்பம். பொ.பி 2ஆம் நூற்றாண்டு

முருகனைப் போலவே, சட்டியம்மையும் பழங்குடி வழிபாட்டிலிருந்து பெருமத நெறிக்குள் உள்நுழைந்த தெய்வமாக இருக்கலாம்.[1] குழந்தையொன்று பிறந்த ஆறாம் நாளன்று ஷஷ்டியை வணங்குவது, இன்றும் வடநாட்டின் பொது மரபுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.[5] 49 பெருந்தேவியர் பட்டியலில், வாயு புராணம், (பொ.பி 5ஆம் நூற்றாண்டு) சட்டியையும் உள்ளடக்குகின்றது.[1]

பிற்கால நூல்களெல்லாம் அவளை தெய்வானையாகவே இனங்காண, சில நூல்கள், சஷ்டியை உமையவள் அம்சம் என்கின்றன. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட யாக்ஞவல்கிய சுமிருதியில், கந்தனை வளர்த்த கார்த்திகைப் பெண்டிர் அறுவரில் இவள் இளையவள் என்கின்றது.[4][11][12] மகாபாரதமும் பத்ம புராணமும், பிரமன் மகளாய்ப் பிறந்து, இந்திரனால் வளர்க்கப்பட்டு, முருகனை மணந்துகொண்ட தேவசேனையே சஷ்டி தேவி என்கின்றன.[5][1] [1][13] ஏழாம் நூற்றாண்டுக் "காதம்பரி" எனும் நூல், அந்தப்புரச் சுவரோவியமொன்றில், கந்தனும் சட்டியும் காட்சியளிப்பதை விவரிக்கின்றது.[5] மகாபாரதத்தின் இன்னொரு பகுதியில், குழந்தைகளுக்கு நோயை ஏற்படுத்தும் "கந்தக்கிருகங்களில்" (முருகனின் பதினெட்டு பணிப்பெண்டிரில்) ஒருத்தியான ரேவதியே சஷ்டி என்று கூறப்படுகின்றாள்..[9]

பொ.மு 2ஆம் நூற்றாண்டு நூலான கிருகய சூத்திரம், அழகும் வளமும் நல்கும் திருமகளை ஒத்த தெய்வம் என்று ஆறினியைப் போற்றுவதுடன், குழந்தைகள், கால்நடைகள், செல்வங்கள் என்பனவற்றின் பாதுகாப்புக்காக, மாதமொன்றின் இரூ சஷ்டி திதிகளிலும் அவ்வன்னையைப் போற்றுமாறு கோருகின்றது.[5][14] தேவி பாகவதம், பராசக்தியின் ஆறாவது அம்சமே ஆறினி என்கின்றது.[1][13]

அருட்டிறம்

தொகு
 
நிறைகுடமாக வழிபடப்படும் சட்டி தேவி

தேவி பாகவதத்தில் காணப்படும் "சஷ்டிதேவி உபாக்கியானம்" எனும் பகுதி, சுவாயம்புவ மனுவின் மகனான பிரியவிரதனுக்கு, அவன் மனைவி மாலினியிடம் இறந்து பிறந்த குழந்தையொன்றை, சுடலையில் சஷ்டி தோன்றி உயிர்ப்பித்த அற்புதத்தை விவரிக்கின்றது. இவ்வாறு தன் மகன் சுவ்விரதனின் உயிரை மீட்டளித்த தேவசேனையை, குழநநதை பிறந்தபின் ஆறாம் நாளும் இருபத்தோராம் நாளும் வழிபடுமாறு நாடெங்கும் கட்டளையிட்டான் என்று அது, மேலும் வருணிக்கின்றது.[13][15]

ஒரு குடும்பமொன்றின் ஏழு மருமகள்களில் இளையவள், விருந்தொன்றில் பேராசைப்பட்டு உணவெல்லாம் உண்டுவிட்டு, கரும்பூனை ஒன்றினைக் குற்றம் சாட்டி, அதை வீட்டார் தண்டிக்கக் காரணமானாள். அதனால் சினமுற்ற பூனை, அவள் பெற்ற ஏழு ஆண்குழந்தைகளையும் பிறந்த உடனேயே கவர்ந்து சென்றது. அப்பெண்ணே அவற்றைக் கொன்றுண்பதாகவும், அவள் பெண்ணல்ல பேய் என்றும் சுற்றத்தாரிடையே அலர் பரவ, அடுத்ததாகப் பிறந்த பெண்குழந்தையை அதே பூனை கவர்ந்து சென்றபோது அதனுடன் போராடி அதனபின் ஓடினாள். அப்பூனை, சட்டியம்மையின் ஆலயத்துள் நுழைந்து மறைய, ஆங்கே தன் குழந்தைகள் யாவரும் உயிர்வாழக் கண்டு மகிழ்ந்து தன் தவற்றுக்கும் வருந்தி ஆறினியன்னையைப் போற்றினாள். "ஜமை-சஷ்டி" எனும் சட்டிக்கான நோன்பை, அப்பெண்ணே முதன்முதலில் நோற்றதாக, வங்கத்து நாட்டார் கதை ஒன்று செல்கின்றது.[16]


வழிபாடு

தொகு

மாதந்தோறும் இரு ஷஷ்டி திதிகளில் இவளை நோக்கி நோற்கப்படும், "ஷஷ்டி கல்ப விரதம்" கோரியன எல்லாம் தரும்.[13][5] ஒவ்வொரு மாதமும் சந்தனை, ஆரணியை, கர்த்தமை, உலுந்தனை, சவேதி, துர்க்கை, நதி, மூலகை, அன்னை, சீதளை, கோரூபிணி, அசோகை என்ற பெயர்களில் இவள் வழிபடப்படுகின்றாள்.[6] தவிர குழந்தை பிறந்த ஆறாம் நாளன்றும் ஆறினியைப் போற்றுவது பெருவழக்காக உள்ளது.

நிறைசூலியரின் அறையில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதை சட்டி தேவியாகக் கருதி வனங்கும் வழக்கம், பீகாரில் இன்றும் உண்டு. குழந்தை பராயமடையும் வரை, மாதாந்திரம் ஆறாம் நாள் அவளை போற்றுவதுண்டு.[17]

ஆடி மாத வளர்பிறை ஆறாம் நாள், வங்கத்திலும் தென்னகத்திலும்[10] ""ஆரணிய சஷ்டி நோன்பு" அல்லது "ஜமை சஷ்டி நோன்பு" நோற்கப்படுவதுண்டு.குழந்தைப்பேற்றுக்காகவும், அன்னையர் தம் சேய்நலத்துக்காகவும் இந்நோன்பு நோற்கப்படுகின்றது.[1] ஆறின் எண்ணிக்கையிலேயே இதன்போது, பழம், மலர்கள் அவளுக்குப் படைக்கப்படுகின்றன.

அடிக்குறிப்புகள்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Singh, Nagendra Kr., ed. (2000). "A Folk deity in Purana Literature". Encyclopaedia of Hinduism. Vol. 31–45. Anmol Publications. pp. 861–72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7488-168-9.
  2. 2.0 2.1 2.2 Wilkins, W. J. (1900). Hindu Mythology, Vedic and Puranic. Sacred Texts Archive. p. 477. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-9308-4.
  3. 3.0 3.1 Wilkins pp. 6–8
  4. 4.0 4.1 4.2 Stutley, Margaret. "Ṣaṣṭhī". The Illustrated Dictionary of Hindu Iconography. p. 127.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 White, David Gordon (2003). Kiss of the Yogini: "Tantric Sex" in Its South Asian Contexts. pp. 40–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-89483-5.
  6. 6.0 6.1 Bhattacharji p. 66
  7. McDaniel p. 39
  8. 8.0 8.1 8.2 Srinivasan, Doris Meth (1997). "Ṣaṣṭhī". Many heads, arms, and eyes: origin, meaning, and form of multiplicity in Indian art. Brill. pp. 333–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10758-4.
  9. 9.0 9.1 Clothey, Fred W. (1978). The many faces of Murukan: the history and meaning of a South Indian god. The Hague: Mouton Publishers. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-279-7632-5.
  10. 10.0 10.1 Underhill, M. M. (March 1921). The Hindu religious year. Oxford University Press. pp. 103–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0523-3.
  11. Naraharayya, Samarao Narasimha (Translator) (2008). Yajnavalkya Smriti: Book 2: The Prayaschita Adhyaya. The Sacred books of the Hindus. Cosmos Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-307-0545-1. {{cite book}}: |first= has generic name (help)
  12. Singh, N.K.; Kumar Singh, Nagendra (2002). "Encyclopaedia of Hinduism". Encyclopaedia of Hinduism. New Delhi: Anmol Publications PVT. LTD.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174881687. http://books.google.com/books?id=dBKBWnPSpYAC&printsec=frontcover#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 18 February 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
  13. 13.0 13.1 13.2 13.3 Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. p. 700. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8426-0822-2.
  14. Gonda, J. (1993). "Sri". Aspects of early Viṣnuiṣm. Motilal Banarsidass Publ. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1087-2.
  15. The Stillborn Prince: Bhattacharji pp. 66–9
  16. The Cat's Revenge: Bhattacharji pp. 69–71
  17. Wilkins (1900) pp. 68–9

மேலதிக வாசிப்புக்கு

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சஷ்டி_தேவி&oldid=3937259" இலிருந்து மீள்விக்கப்பட்டது