சாணியடி விழா

சாணியடி விழா தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் கொண்டாடப்படுகின்ற விழாக்களில் ஒன்றாகும்.

சாணி குண்டம் இறங்கும் விழா

தொகு

இவ்விழா ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி அருகில் உள்ள கும்டாபுரத்தில் அமைந்துள்ள பீரேஸ்வரர் கோயிலில், விவசாயம் செழிப்பதற்காக, தீபாவளிப் பண்டிகையை அடுத்து வருகின்ற மூன்றாவது நாள் கொண்டாடப்படுகிறது. [1] இவ்விழாவினை சாணி குண்டம் இறங்கும் விழா என்றும் கூறுகின்றனர். [2]

நம்பிக்கை

தொகு

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் இருந்த சிவலிங்கத்தை ஒரு பக்தர் சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்ததாகவும், அவ்வூரைச் சேர்ந்த மாட்டு வண்டி அந்தக் குப்பைமேட்டில் ஏறியபோது அங்கு ரத்தம் பீறிட்டு வந்ததாகவும், அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரிய வந்ததாகவும் கூறுகின்றனர். மேலும் ஒரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி, தீபாவளி முடிந்து 3ஆம் நாள் சாணத்தில் இருந்து மீண்டு எழுந்ததின் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கூறிவிட்டு மறைந்ததாகவும் அதன் நினைவாக இந்த விழாவை அப்போதிருந்து நடத்தி வருவதாகவும் கூறுகின்றார்கள். [3] மூதாதையர்கள் வழிகாட்டலின்படி இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர். [4]

விழா நிகழ்வு

தொகு

விழா நடைபெறுவதற்கு முன்பாக கிராமத்தில் உள்ள அனைத்து பசு மாட்டின் சாணங்களும் சேகரிக்கப்பட்டுக் கோயிலின் பின்புறம் குவித்துவைக்கப்படுகிறது. பின்னர் ஊர் குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமியை ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். ஊரின் தெய்வமாகக் கருதப்படுகின்ற பீரேஸ்வரருக்கு சிறப்பு பூசைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. ஆண்கள் வெற்றுடம்புடன் கோயிலுக்குள் சென்று சிறப்பு பூசைகள் செய்கின்றனர். கொட்டி வைக்கப்பட்டுள்ள சாணத்தை உருண்டையாக வடிவமைத்து, பங்கேற்ற பக்தர்கள் ஒருவர்மீது ஒருவர் வீசி மகிழ்கின்றனர். பெண்களும், ஊர் மக்களும் இதனை ஆர்வமாகக் கண்டுகளித்தனர். [1] பூசை செய்வதற்கு முன்பாக குளத்தில் குளித்துவிட்டுச் செல்கின்றனர். [5]

உரம்

தொகு

விழா நிறைவிற்குப் பின்னர் அங்கிருந்த சாணத்தை விவசாய நிலங்களில் உரமாக இடுகின்றனர். [1] விவசாய நிலத்தில் பயிர்கள் அதனை இடும்போது பயிர்கள் நன்றாக வளரும் என்று விவசாயிகள் நம்புகின்றனர். [3]

கொரோனா

தொகு

வழக்கமாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் இதில் கலந்துகொள்வார்கள். கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு (2020) அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் குறைந்த அளவிலான பக்தர்களே கலந்துகொண்டுள்ளனர். சாணம் கிருமி நாசினி என்றும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவாது என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 விவசாயம் செழிக்க விநோத வழிபாடு, தினமணி, 17 நவம்பர் 2020
  2. கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயில் சாணி குண்டம் இறங்கும் விநோத திருவிழா!, டாப் தமிழ் நியூஸ், 10 நவம்பர் 2018
  3. 3.0 3.1 ஈரோடு சாணியடி திருவிழா : சாணியை வீசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள், ஒன்இந்தியாதமிழ், 18 நவம்பர் 2020
  4. தீபாவளி திருநாளையொட்டி விநோத சாணியடி திருவிழா, புதிய தலைமுறை, 30 அக்டோபர் 2019
  5. தளவாடி அருகே சாணியடி திருவிழா, பக்தர்களின் பாரம்பரிய வழிபாடு, தினமலர், 18 நவம்பர் 2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாணியடி_விழா&oldid=3062078" இலிருந்து மீள்விக்கப்பட்டது