சான் மக்கள்

சான் மக்கள் (San people), பல்வேறு கோசிய மொழிகளைப் பேசும் வேட்டுவ-சேகர மக்கள் குழு. இவர்கள், பொட்சுவானா, நமீபியா, அங்கோலா, சாம்பியா, சிம்பாப்வே, லெசோத்தோ,[1] தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கிய தெற்கு ஆப்பிரிக்காவின் மூத்த குடிகள் ஆவர். பொட்சுவானாவில் உள்ள ஒக்கவாங்கோ ஆற்றுக்கும், வடமேற்கு நபீயாவில் உள்ள எத்தோசா தேசியப் பூங்காவுக்கும் இடையில் உள்ள வடக்கு மக்களும்; நமீபியா, பொட்சுவானா ஆகிய நாடுகளின் பெரும்பாலான பகிதிகளிலும், சாம்பியா, சிம்பாப்வே ஆகியவற்றின் எல்லைகளுக்குள்ளும் வாழும் ரடு மக்களும்; ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவில் பரவலாக வாழ்ந்த மூத்த குடியினரின் எச்சமாக இருக்கும், மோலோப்போ ஆற்றை நோக்கிய மத்திய கலகாரியில் வாழும் தெற்கு மக்களும் பேசும் மொழிகளிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.[2]

சான் மக்கள்
சான் சிறுவர்கள், நமீபியா.
மொத்த மக்கள்தொகை
~90,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 போட்சுவானா55,000
 நமீபியா27,000
 தென்னாப்பிரிக்கா10,000
 அங்கோலா<5,000
 சிம்பாப்வே1,200
மொழி(கள்)
கோ, கக்சா, தூ குடும்பங்களைச் சேர்ந்த எல்லா மொழிகளும்
சமயங்கள்
சான் மதம், கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கோயிகோயி, பாசுட்டேர்சு, கிரிக்கா, சுவானா

வேட்டுவ-சேகர சான் மக்களின் முன்னோர்களே இன்றைய பொட்சுவானா, தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளின் முதற் குடிகள் எனக் கருதப்படுகின்றது. பொட்சுவானாவில் சான் மக்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் குறிப்பாக, வடக்கு பொட்சுவானாவின் சோடிலோ குன்றுப் பகுதியில் காணப்படுகின்றன. இப்பகுதியில், 70,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கருதப்படும் கற் கருவிகளும், பாறை ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வோவியங்களே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகப் பழமையானவை.[3] மரபுவழியாக சான் மக்கள் அரை நாடோடிக் குழுவாகும். நீர், வேட்டைக்கான விலங்குகள், உண்ணத்தக்க தாவரங்கள் ஆகிய வளங்கள் கிடைப்பதன் அடிப்படையில், அவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் பருவகால இடப்பெயர்வுகளை மேற்கொள்வது உண்டு. 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி பொட்சுவானாவில் உள்ள சான் மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 50,000 க்கும், 60,000 க்கும் இடைப்பட்டதாக உள்ளது.[4]

அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்ட நவீனமயப் படுத்தும் திட்டங்களின் கீழ் 1950 க்கும் 1960 க்கும் இடைப்பட்ட காலத்தில் சான் மக்கள் வேளாண்மைத் தொழிலுக்கு மாறியுள்ளனர். தற்போது வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட போதும், இவர்கள், மானிடவியல், மரபியல் ஆகிய துறைகள் தொடர்பில் ஏராலமான தகவல்களை வழங்கியுள்ளனர். 2009 இல் நிறைவுற்ற ஒரு ஆப்பிரிக்க மரபியற் பல்வகைமை சார்ந்த ஆய்வு ஒன்றின்படி, 121 வேறுபட்ட ஆப்பிரிக்க மக்கள் குழுக்களில் மிக அதிகமான மரபியற் பல்வகைமை மட்டத்தைக் கொண்ட ஐந்து குழுக்களில் சான் குழுவும் அடங்குகின்றது.[5][6][7] சான் குழு, அறியப்பட்ட 14 வாழுகின்ற "மூத்த மக்கள் தொகுதிகளில்" ஒன்று. இது, பொது முன்னோரையும், இனத்துவம், பண்பாடு, மொழி இயல்புகள் ஆகியவற்றைப் பொதுவாகப் பகிர்ந்துகொள்ளும் குழுக்களைக் குறிக்கும்.[6]

பொட்சுவானாவின் சில சான், பக்கலகாதி சமூக உறுப்பினர்களின் கருத்துப்படி அரசாங்க வளர்ச்சித் திட்டங்களில் சில நல்ல அம்சங்கள் இருந்தபோதும், அரசாங்கத்தின் முடிவெடுத்தலில் இக்குழுக்களுக்கு இடம் இல்லாதது குறித்துப் பேசப்படுவதுடன், சான், பாக்கலகாதி இன மக்களை அரசாங்கம் பாகுபாடாக நடத்துகிறது என்ற உணர்வும் பரவலாக உள்ளது.[4] 2013 ஆம் ஆண்டின் அக்கிய அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்தின் அறிக்கை, பொட்சுவானாவில் இடம்பெறும் சான் அல்லது பசர்வா இன மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்து விளக்குவதுடன், இதை ஒரு "முதன்மையான மனித உரிமைகள் பிரச்சினை" எனவும் குறிப்பிடுகின்றது.[8]

சமூகம் தொகு

சான் உறவு முறை, மரபு வழியாக அவர்கள் மேய்ச்சல் தேடி அலைந்து திரியும் சிறிய குழுக்கள் என்னும் தனித்தன்மையை வெளிக்காட்டுவதாக உள்ளது. இவர்களது உறவு முறை, ஐரோப்பியப் பண்பாடுகளில் உள்ள அதே உறவு முறைச் சொற் தொகுதிகளுடன் கூடிய "எசுக்கிமோ உறவு முறை"யை ஒத்தது. ஆனால் இவர்கள் ஒரு பெயர் விதியையும், வயது விதியையும் பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Walsham How, Marion (1962). The Mountain Bushmen of Basutoland. Pretoria: J. L. Van Schaik Ltd.. 
  2. Barnard, Alan (2007). Anthropology and the Bushman. Oxford: Berg. பக். 4–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781847883308. https://books.google.com/books?id=e3MihaaJ314C. 
  3. Coulson, Sheila (12 February 2012). Worlds Oldest Ritual Discovered. Worshipped the Python 70,000 Years Ago (Report). Apollon Research Magazine.
  4. 4.0 4.1 Anaya, James (2 June 2010). Addendum – The situation of indigenous peoples in Botswana (PDF) (Report). United Nations Human Rights Council. A/HRC/15/37/Add.2.
  5. Connor, Steve (1 May 2009). "World's most ancient race traced in DNA study". The Independent. https://www.independent.co.uk/news/science/worlds-most-ancient-race-traced-in-dna-study-1677113.html. பார்த்த நாள்: 19 January 2014. 
  6. 6.0 6.1 Gill, Victoria (1 May 2009). "Africa's genetic secrets unlocked" (online edition). BBC World News (பிபிசி) இம் மூலத்தில் இருந்து 1 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. http://news.bbc.co.uk/2/hi/science/nature/8027269.stm. பார்த்த நாள்: 2009-09-03. 
  7. Tishkoff, S. A.; Reed, F. A.; Friedlaender, F. R.; Ehret, C.; Ranciaro, A.; Froment, A.; Hirbo, J. B.; Awomoyi, A. A. et al. (2009). "The Genetic Structure and History of Africans and African Americans". Science 324 (5930): 1035–44. doi:10.1126/science.1172257. பப்மெட்:19407144. 
  8. Bureau of Democracy, Human Rights and Labor. Botswana 2013 Human Rights Report. United States Department of State. https://www.state.gov/documents/organization/220296.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_மக்கள்&oldid=3815061" இலிருந்து மீள்விக்கப்பட்டது