குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்

(சாரதாச் சட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். இது 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது சார்தா சட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இதன்படி, திருமணம் செய்வதற்கு பெண்ணுக்கு பதினான்கு வயதும், ஆணுக்கு பதினெட்டு வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும்.[1] 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஆங்கிலேய அரசு முயன்றது. 1880 குஜராத்தைச் சேர்ந்த, பி.எம்.மலபாரி என்பவர் ஆங்கில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஐந்து வயது பெண் குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் செய்யும் கொடுமையை அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மலபாரி குறிப்பிட்டிருந்தார். இது லண்டன் வரை சென்று, பல விவாதங்களுக்கு உள்ளாகி, இறுதியில் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக அரசினால் முன்வைக்கப்பட்டது. இச்சட்டம் 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.[2][3] தற்போது பெண்ணின் திருமண வயது 18 எனவும், ஆணின் திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டுள்ளது.[4]12 வயது நிறைவடைந்த பின்பே பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், பருவமடைந்த பின்பே உடலுறவுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டம் முன்மொழிந்தது.புதிய திருப்பம் பேகுவ சட்டம் இயற்றபட்டது.

ஆதரவான கருத்துகள்

தொகு

இந்தச் சட்டத்தை மராட்டியத்தைச் சேர்ந்த முனைவர் (டாக்டர்) பண்டார்க்கர் போன்றவர்கள் ஆதரித்து கருத்து வெளியிட்டனர். நீதிபதி ராணடே, இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஆதரவாகத் தன்னுடைய சர்வஜன சபாவில் தீர்மானமே நிறைவேற்றினார். இவர்கள் சமூகச் சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். இவர்களையும் திலகர் கடுமையாக விமர்சித்தார்.

சுவாமி விவேகானந்தர்

தொகு

சுவாமி விவேகானந்தர் இந்த சட்டத்திற்கு ஆதரவான சீர்திருத்தக் கருத்தைக் கொண்டிருந்தார். தமது கடிதங்களில் உறுதியான தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

  • 28 டிசம்பர் 1893

பெண்களுக்கு பதினொரு வயது ஆனதும் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் அவர்கள் கெட்டுப் போவார்களாம். நண்பா, நாம் என்ன மனிதர்களா? மனு என்ன சொல்கிறார்? ’கன்யாப்யேவம் பாலனீயா சிக்ஷணீயாதியத்னத:’ [-பெண்களையும் மிகுந்த முயற்சியுடன் வளர்க்க வேண்டும், கல்வியளிக்க வேண்டும்.]ஆண்கள் எப்படி முப்பது வயது வரையில் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கிறார்களோ கல்வி பெறுகிறார்களோ, அதேபோல் பெண்களுக்கும் செய்விக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? உங்கள் பெண்களின் நிலையை உயர்த்த முடியுமா? அப்படியானால் நம்பிக்கை உண்டு. இல்லாவிட்டால் மிருக நிலையில் அப்படியேதான் இருப்பீர்கள். [5]

  • 5 செப்டம்பர் 1894

...பெண்களுக்கு 9 வயதிலேயே திருமணம் செய்கின்ற வெட்கக்கேட்டை நிறுத்த வேண்டும். எல்லா பாவங்களுக்கும் இதுதான் ஆணிவேர். நண்பரே, இது ஒரு மாபெரும் பாவம். சிறுவயது திருமணத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் ஒரு சட்டம்போட முனைந்தவுடன் நமது உதவாக்கரை மக்கள் எழுப்பிய கூச்சலை நினைத்துப் பாருங்கள், என்ன கேவலம்! நாமாக அதை நிறுத்தாவிட்டால் அரசாங்கம் தலையிடவே செய்யும், அதைத்தான் அரசாங்கம் விரும்பவும் செய்கிறது...10 வயது பெண்ணிற்கு, தொப்பை பெருத்த, வயதான ஒரு கணவனைப் பார்த்து, பெற்றோரே அவனது கையில் பிடித்துக் கொடுத்து விடுகிறார்கள். என்ன பயங்கரம்!.. [5]

  • 1895

...எட்டு வயது சிறுமி முப்பது வயதான ஒருவனுக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்; சிறுமியின் தாய்தந்தையர் ஆனந்தத்தில் மூழ்குகின்றனர். இதை எதிர்த்து யாராவது வாய் திறந்தால் போதும், ’ஆ, நமது மதம் போய்விட்டது’ என்று கூக்குரலிடுகின்றனர். 8 வயது சிறுமியைத் தாயாக்கி, அதற்கு விஞ்ஞான விளக்கமும் கூற முற்படுவோரிடம் என்ன மதத்தை எதிர்பார்க்க முடியும்? [5]

  • 23 டிசம்பர் 1895

இளமை மணம் என்ற இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை என் வலிமை கொண்டமட்டில் நான் நசுக்கி ஒழிப்பேன்...குழந்தைகளுக்குக் கணவனைத் தேடித் தருவதாகிய இத்தகைய செயல்களில் நான் எவ்வித பங்கும் கொள்ள முடியாது, நிச்சயமாக முடியாது. இறையருளால், நான் அதைச் செய்ததுமில்லை, செய்யப் போவதும் இல்லை...குழந்தைக்குக் கணவனைத் தேடித் தருகின்ற ஒருவனை நான் கொல்லவும் செய்வேன். [5]

எதிர்ப்புகள்

தொகு

அன்றைய கால கட்டத்தில் பாலகங்காதர திலகர் தன்னுடைய கேசரி இதழில் இது குறித்த மிகக் கடுமையான கண்டனங்களையும், கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கினார். இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் தலையிட ஆங்கிலேயர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முழங்கினார். அவருடைய எழுத்துகளுக்கு, அன்று இந்தியாவில் இருந்த இந்துக்களிடையே பேராதரவு கிடைத்தது. இது போன்றதொரு சட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்ற விடமாட்டோம் என்றார் திலகர்.

மலபாரி, பார்சி மதத்தைச் சார்ந்தவர் என்பதால், அவருக்கு இந்துமதப் பண்பாடுகளில் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்ற திலகரின் கூற்றுக்கு மக்களிடையே ஆதரவு இருந்தது. இச்சட்டத்துக்கு ஆதரவு குறைவாகவும், எதிர்ப்பு மிகக் கூடுதலாகவும் ஆகிவிட்ட நிலையில், அச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.

மீண்டும் 1913இல் அதே மாதிரியான இன்னொரு சட்ட முன்வடிவை அரசு கொண்டுவந்தது. அப்போதும் ஆச்சார்யா போன்ற இந்து மதவாதிகள் சட்டமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தனர். 'பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்தால் சிறைத் தண்டனை என்கிறது உங்கள் அரசு. பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை என்றால் நரகத்திற்குப் போவீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம். நாங்கள் என்ன செய்வது?’ என்றார் ஆச்சார்யா. அச்சட்ட முன்வடிவை, மெய்யறம் என்னும் தனது நூலில் வ. உ. சிதம்பரம்பிள்ளை வரவேற்று எழுத, அதே நூலின் முன்னுரையில், சுப்பிரமணிய சிவா அதனைக் கண்டித்து எழுதினார். இப்படிப் பல்வேறு ஆதரவு, எதிர்ப்புகளுக்குப்பின் மீண்டும் அது கிடப்பில் போடப்பட்டது.

தமிழகத்தில் பெண்கள் எழுச்சி

தொகு

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்றோரும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் போன்ற கவிஞர்களும் பெண் விடுதலைக்காக எழுதினர். 1926 அதன் பிறகு இந்தியாவில் பெண் விடுதலை இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்தன.[6] அதன் விளைவாக, பெண்கள் பலர் எழுச்சி பெற்றனர். சிறு வயதுப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் கொடுமையை தடை செய்ய வேண்டும் என்று குரலெழுப்பினர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் அம்முயற்சியில் முன்னின்று பணியாற்றினர்.

சட்டம் நடைமுறையாதல்

தொகு

இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, 1929-இல் மீண்டும் ஒரு முயற்சி நடைபெற்றது. இம்முறை அச்சட்ட முன்வடிவை ' ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா' என்னும் மார்வார்,ராஜஸ்த்தான் பகுதியை சேர்ந்த இந்தியர் முன் மொழிந்தார். அதனால்தான் அச்சட்டம் 'சார்தா சட்டம்' என்று அறியப்பட்டு, காலப்போக்கில் சாரதாச் சட்டம் ஆகிவிட்டது. 1929 செப்டம்பர் 28-ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டு, 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது. இந்த சட்டத்தினால் குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியும். நடைபெற்று முடிந்த திருமணங்களை ரத்து செய்வதற்கான வழிவகை எதுவும் இல்லை.[4]

உசாத்துணைகள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-04-07.
  2. Forbes, Geraldin H., Women in Modern India, Cambridge University Press, 1998
  3. Dhawan, Himanshi (Sep 15, 2006). "Child brides may declare marriage void". Indiatimes (NEW DELHI). http://timesofindia.indiatimes.com/articleshow/1992687.cms. பார்த்த நாள்: 23 June 2011. 
  4. 4.0 4.1 Child brides may declare marriage void – TOI
  5. 5.0 5.1 5.2 5.3 எழுந்திரு! விழித்திரு! சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் எழுதிய தொகுப்புகளும்;பகுதி 9; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 224
  6. Forbes, Geraldin H., Women in Modern India, Cambridge University Press, 1998 pp 83