சிதம்பரம் வெள்ளந்தாங்கி அம்மன் கோயில்

சிதம்பரம் வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ஒரு அம்மன் கோயிலாகும்.[1] இந்த அம்மன் சிதம்பரம் நடராசர் கோயிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் அமைந்துள்ள நான்கு காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் தெற்கில் அமைந்துள்ள காவல் தெய்வம் ஆவார்.

சிதம்பரம் வெள்ளந்தாங்கி அம்மன் கோயி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:சபாநாயகர் தெரு, சிதம்பரம்
சட்டமன்றத் தொகுதி:சிதம்பரம்
மக்களவைத் தொகுதி:சிதம்பரம்
கோயில் தகவல்
தாயார்:வெள்ளந்தாங்கி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடி உற்சவம்

செவிவழிக் கதை

தொகு

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த ஒரு பெருமழையில் சிதம்பரம் நகரம் பெரும் வெள்ளக்காடாக ஆனது. அப்போது ஒரு பெண் வெள்ளத்தில் நீந்தி வந்தாள். அவளை நோக்கியபடி யானை ஒன்று பிளிறியபடி சென்றது. அது அப்பெண்ணை தன் துதிக்கையால் தூக்கிச் சென்று தில்லை நடராசர் கோயிலின் தெற்குப் பகுதியில் விட்டுச் சென்றது. ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அப்பெண் அங்கு இல்லை. ஆனால் யானையின் துதிக்கையில் ஒரு பெண் இருப்பதுபோன்ற சிலை ஒன்று இருந்தது. வெள்ளம் வடிந்த பிறகு ஊர் மக்கள் தில்லை அந்தணர்களிடம் நடந்த விசயத்தைக் கூறினர். அவர்களின் ஆலோசனையின்படி அச் சிலையை அங்கேயே பிரதிட்டை செய்து வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயரைச் சூட்டி வழிபடத் தொடங்கினர்.[2]

கோயில் அமைப்பு

தொகு

இது ஒரு சிறிய கோயிலாகும். கோயிலின் மகா மண்டபத்தில் பிள்ளையார், முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. மகாமண்டபத்தை அடுத்து கருவறை அமைந்துள்ளது. கருவறையில் வெள்ளந்தாங்கி அம்மன் மேற்கு நோக்கி உள்ளார். யானையின் துதிக்கையில் அவரணைத்து இருப்பதுபோல் அம்மனின் உருவம் உள்ளது. கருறையில் அம்மனின் வலப்பக்கம் சிவலிங்கமும், இடப்பக்கம் சபரி சாஸ்தாவும் உள்ளனர்.[2]

பிரகாரத்தில் சிரசு வடிவில் உள்ள வீரனாரும், நவக்கிரக சந்தியும் உள்ளது. கோயிலின் இடதுபுறம் நின்ற நிலையில் உள்ள எல்லையம்மன்னின் பிரம்மாண்ட சுதைச் சிற்பகம் காணப்படுகிறது.

வழிபாடு

தொகு

வார நாட்களில் வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்படும். ஆடி மாதம் பத்து நாள் உற்சவமும் முநல் நாள் காப்புக்கட்டும் நடக்கிறது. பத்து நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடத்தப்படுகிறது. ஒன்பதாம் நாள் பாலமான் ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு முன்னே வர பலவகையான காவடிகள் பின்னே எடுத்து வரப்படுகின்றன. அதனுடன் பக்தர்கள் பலர் பால் குடம் எடுத்து வருவர். பின்னர் அம்மனுக்கு அபிசேகம் செய்து தங்கள் பிராத்தனையை நிறைவேற்றுவர். விழாவின் பத்தாம் நாள் விடையாற்றி உற்சவம் நடைபெறும். அது முடிந்த பிறகு திருஊஞ்சல் வைபவம் நடக்கும்.[2] கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஆடித் திருவிழா". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. 2.0 2.1 2.2 "வேண்டிய வரம் தரும் வெள்ளந்தாங்கி அம்மன்!". 2023-08-17. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)