சிந்தி நாட்டுப்புறக் கதைகள்

சிந்தி மக்களின் கலாச்சாரத்தை பற்றிய நாட்டுப்புற கதைகளின் தொகுப்பு ஆகும்.

 

சிந்தி நாட்டுப்புறக் கதைகள் ( சிந்தி மொழி: لوڪ سنڌي ڪهاڻيون‎ ) தெற்கு பாகிஸ்தானின் சிந்தி மக்களின் கலாச்சாரத்தை பற்றிய நாட்டுப்புற கதைகளின் தொகுப்பு ஆகும். பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாரம்பரியமாக நாட்டுப்புறக் கதைகள், தந்திர கதைகள் மற்றும் தேவதை கதைகளை உருவாக்கியுள்ளது. அவர்களின் கலாச்சாரம் முழுவதுமே நாட்டுப்புறக் கதைகளால் நிறைந்துள்ளது. இவற்றில் சில நாட்டுப்புறக் கதைகள் ( قصا ) சிந்தி மொழியின் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை, எவ்வாறென்றால் அவை ஷா அப்துல் லத்தீஃப் பிட்டாய் ஷாவின் கதாநாயகிகள் ( شاه جون سورميون ) என்பவர்களைப்போன்று பல கலைஞர்களால் காலத்தால் அழியாத சிந்துவின் மாயக் கதைகளின் மையத்தை உருவாக்கியுள்ளனர் ,

இவற்றில் பல நாட்டுப்புறக் கதைகள்,சிந்து முழுவதுமே நன்கு அறியப்பட்ட காதல் கதைகள் தொடர்பானவை, அவற்றில், சாசுய் புன்குனின் கதை மிகவும் பிரபலமானது. அதில், பன்பூரில் ஒரு சலவைத் தொழிலாளி குடும்பத்தால் வளர்க்கப்பட்ட சாசுய் என்ற அழகான சிந்துப் பெண், அவள் அழகின் மூலம் பல ஆண்களை ஈர்க்கிறாள். இறுதியாக, கெச்சின் இளவரசனான புன்குன் அவளைக் காதலிக்கிறான். அவர்களது காதலை விரும்பாத புன்குனின் குடும்பத்தார் அவர்களின் திருமணத்திற்கு சம்மதிப்பது போல நடித்து திருமணம் நடக்கும் நாளில் எல்லாருக்கும் மதுவை அதிகமா கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி விட்டு புன்குனை அவனது நகரத்திற்கே தூக்கி சென்றுவிட்டனர். சாசுய் காலையில் எழுந்து பார்க்கும் போது கணவனைக் காணாமல் அவனைத்தேடி கடும் பாலைவனத்தில் வெறும் காலில் பல மைல்கள் நடந்தும் தன் காதலனை தேடுவதைப்பற்றியதே.

தனக்குப் பிடிக்காத ஒருவரை மணந்த சோஹ்னியின் சோகக் கதையும் அந்த தொகுப்பில் உள்ளது. ஒரு தீவில் கால்நடைகளை மேய்க்கும் தன் காதலனான மெஹரைப் பார்க்க ஒவ்வொரு இரவும் அவள் ஆழமான சிந்து நதியின் குறுக்கே களிமண் பானையை துணையாக கொண்டு நீந்திச் செல்கிறாள், ஆனால் அவளது கணவனின் சகோதரி அந்த ரகசியத்தைக் கண்டுபிடித்து, சுட்ட பானைக்கு பதிலாக சுடப்படாத களிமண் பானையை மாற்றி வைத்து விடுகிறாள். அந்த பானையை எடுத்து செல்லும் சோஹ்னி ஆற்று நீரில் மூழ்கி இறந்துவிடுகிறாள்.

லிலன் சானேசரின் கதையோ முற்றிலும் விசித்திரமானது. கதாநாயகி, மந்திர வசீகரத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு பெண்மணி ஆனாலும் ஒரு வைர கழுத்தணிக்காக  தனது கணவருக்கு பதிலாக இன்னொரு நபருடன் ஒரு இரவை கழிக்கிறாள்.அதனை அறிந்த அவளது கணவர், அவளை விவாகரத்து செய்த பின்பே அவள் தனது  மகிழ்ச்சியை அற்பத்தனமாக  ஒரு நகைக்காக விட்டுவிட்டதை உணர்ந்தாள். பல்வேறு  சோதனைகளுக்குப் பிறகு, தம்பதியினர் மீண்டும் சந்தித்தாலும் வாழ முடியாமல்  ஒன்றாகவே இறந்துவிடுகிறார்கள்.

நூரி- ஜாம் தமாச்சியின் கதையானது சம்மா காலத்தின் வரலாற்று நிகழ்வைச் சொல்கிறது, இளவரசரான ஜாம் தமாச்சி ஒரு மீன்பிடிப் பெண்ணான நூரியைக் காதலித்தார், அவளின் காதல், பணிவு மற்றும் மென்மையின் காரணமாக, எவ்வாறு அவருக்கு பிடித்த ராணியாக மாறினார் எனவும் சொல்கிறது

உமர் மாருய்யின் கதையும் பிரபலமானது. அமர்கோட்டின் ஆட்சியாளரான உமர், இளம் மாருயியை காதலித்து திருமணம் செய்கிறார். ஆனால் அவளோ தனது வீட்டிற்கு செல்லவே ஏங்குகிறாள், ஆட்சியாளரின் எந்த மிரட்டலுக்கும் அவதூறுகளுக்கு செவிசாய்க்கவில்லை, ஆனால் மலிர் தார்பார்க்கரின் ஏழை மேய்ப்பர்களான தன் குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கிறாள். இறுதியில், உமருக்கு அவளை வீட்டிற்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தக் கதைகள் யாவும் காலப்போக்கில் இன்னும் இன்னும் செழுமைப்படுத்தப்பட்டு, சிந்தி இலக்கியத்திற்கும், கதைகளை ஆன்மீகமயமாக்கிய சூஃபிகளுக்கும் செழுமையை வழங்குகின்றன.

டோடோ சானேசர் மற்றும் மோரிரோவின் கதைகள் வீரத்தின் உணர்வும் தியாகமும் நிறைந்தவை. இதேபோல், சோரத் ராய் தியாச் தனது தலையை தானே துண்டித்து, பிஜால் என்ற பட்டாளத்திற்கு தானமாக வழங்கிய மன்னன் தியாச்சின் வீரத்தையும் பெருந்தன்மையையும் சிந்தி மக்களுக்கு  வலியுறுத்துகிறார்.

2014 ம் ஆண்டில், இந்த நாட்டுப்புறக் கதைகள் சிந்தி அதாபி வாரியத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் இலக்கியத் திட்டத்தின் கீழ் லோகே கஹானியுன் என்ற தலைப்பில் ஏழு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன. [1] இந்த ஏழு தொகுதிகள் பல்வேறு வகையான நாட்டுப்புறக் கதைகள், புனைவுகள், நாட்டுப்புற கவிதைகள் மற்றும் பிற கதைகளை உள்ளடக்கியது. பாரம்பரிய தன்மையுள்ள மற்றும் பழங்காலத்திலிருந்தே பிரபலமான கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொடர் தொகுதிகள் மூலம் முன்னூறுக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கதைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் பார்க்கவும்

தொகு
  • சிந்தி நாட்டுப்புறவியல்
  • பாகிஸ்தானிய நாட்டுப்புறக் கதைகள்
  • சிந்துவின் கல்லறை ஓவியங்கள்

மேற்கோள்கள்

தொகு