சிந்துவெளிக் கட்டிடக்கலை
சிந்துவெளிப் பண்பாடு என்பது சுமார் கி.மு 3500 அளவில் தொடங்கி கி.மு 1500 வரை இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் சிந்து நதிப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் செழித்தோங்கியிருந்த பண்பாட்டைக் குறிக்கும். இது உலகின் பண்டைக்கால நகரப் பண்பாடுகளுள் ஒன்று. இதன் செல்வாக்குப் பிரதேசங்களில் மேற் குறிப்பிட்ட காலப்பகுதியில் வளர்ந்த கட்டிடக்கலையே சிந்துவெளிக் கட்டிடக்கலை என்று குறிப்பிடப்படுகின்றது. மொஹெஞ்சதாரோ, ஹரப்பா என்பன இப் பண்பாட்டின் முக்கிய நகரங்களாகும். இந்த அழிந்துபோன நகரப் பகுதிகளிலும், அவற்றை அண்டிய பிரதேசங்களிலும் நடைபெற்ற அகழ்வாராச்சிகள் இப் பண்பாட்டின் நகர அமைப்பு முறைகள் மற்றும் கட்டிடக்கலை சம்பந்தமான தகவல்களைத் தருகின்றன.