சினிமா பண்டி

2021 தெலுங்கு திரைப்படம்

சினிமா பண்டி (பொருள்: திரைப்பட வண்டி ) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு நகைச்சுவை நாடகப் படமாகும், இதை வசந்த் மரிங்கந்தி எழுத, அறிமுக இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். ராஜ் நிடிமோரு, டி. கே. கிருஷ்ணா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் பல அறிமுக நடிகர்கள் நடித்துள்ளனர். ஆந்திர - கர்நாடக எல்லைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடப்பபதாக கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பில் ஆர்வம் கொண்ட இளைஞர் குழுவானது அவர்களுக்கு கிடைத்த ஒளிப்படமி மூலம் திரைப்படம் தயாரிக்க முயற்சிப்பதைப் பற்றியதாக இப்படம் உள்ளது. [1] இந்த படம் 2021 மே 14 அன்று நெட்ஃபிக்சில் வெளியானது.[2]

சினிமா பண்டி
இயக்கம்பிரவீன் காண்ட்ரேகுலா
தயாரிப்புராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே.
கதைவசந்த் மரிங்கந்தி
திரைக்கதைகிருஷ்ணா பிரத்யுஷா
வசந்த் மரிங்கந்தி
பிரவீன் காண்ட்ரேகுலா
இசைசத்யவோலு சிரிஷ்
வருண் ரெட்டி
நடிப்புவிகாஸ் வசிஷ்டா
சந்தீப் வாரணாசி
ஒளிப்பதிவுஅபூர்வா ஷாலிகிராம்
சாகர் ஒய். வி. வி
படத்தொகுப்புககர்லா தர்மேந்திரா
கிரிஜலா ரவிதேஜா
கலையகம்டி2ஆர் இந்தியா
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடு14 மே 2021 (2021-05-14)
ஓட்டம்98 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

கதை தொகு

தானி ஒட்டுநரான வீரபாபு தனது தானியில் ஒரு விலையுயர்ந்த ஒளிப்படமியைக் கண்டெடுக்கிறார். அவர் முதலில் அதை விற்றுவிடவோ அல்லது வாடகைக்கு விடவோ முயற்சிக்கிறார். அதில் வரும் பணத்தைக் கொண்டு அவர் தனது தானியின் மீதான கடனை அடைக்க எண்ணுகிறார். ஆனால், இலாபகரமான குறைந்த செலவில் எடுக்கபட்ட படங்களைப் பற்றிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, ஒளிப்படமியைப் பயன்படுத்தி தானே ஒரு திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்கிறார். ஒரு முதியவர் சொன்ன காதல் கதையை படத்திற்கான கதையாக முடிவு செய்கிறார். பகுதி நேர ஓளிப்படக் கலைஞராக உள்ள தனது நண்பரான கணபதியை படத்தின் ஒளிப்பதிவாளராக இணைத்துக் கொள்கிறார். நடிகர்களுக்கான நீண்ட தேடலுக்குப் பிறகு, முடிதிருத்துநரான மரிதய்யாவையும் (மரிதேஷ் பாபு என்ற திரைப் பெயரை சூட்டிக்கொள்கிறார்), பள்ளி மாணவியான திவ்யாவையும் முதன்மை பாத்திரங்களுக்கு தேர்வு செய்கிறார்கள். படப்பிடிப்பையும் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களின் அனுபவமின்மை, சக கிராமவாசிகளின் குறுக்கீடுகள் காரணமாக ஒரு போராட்டத்தையே எதிர்கொள்கின்றனர். மேலும் திவ்யாவுக்கு கட்டாய திருமணம் செய்ய அவளது தந்தை ஏற்பாடு செய்கிறார். இதனால் அவள் தன் காதலனுடன் ஓடிப்போகிறாள். வீராபாபுவுக்கு கிராம மக்கள் மத்தியிலுத், குடும்பத்தாரிடமும் கடும் எதிர்ப்பு ஏற்படுகிறது. ஊரின் பிரச்சினைகளை களையவும் இந்த இந்த திரைப்பட வருமானம் உதவும் என்ற படக்குழுவினரின் பொது நோக்கம் அறிந்த பிறகு ஊரார் குழுவிற்கு ஒத்துழைப்பு அளிக்க முன்வருகின்றனர். மரிதேஷின் காதலியான மங்காவை நாயகி வேடத்தில் நடிக்கவைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்குகின்றனர். திரை மொழி, காட்சிகளின் தொடர்ச்சி, உள்ளிட்ட அடிப்படை தொழில் நுட்பங்கள் ஏதும் அறியாத இளைஞர்களான இவர்கள், தங்கள் தவறுகளில் இருந்தே பாடம் கற்கின்றனர். வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலிருந்து சக நடிகர்களை தேர்ந்தெடுக்கின்றனர். படிப்படியாக தாங்கள் முடிவு செய்த கதையை ஒளிப்படமியில் பதிந்து திருப்தி அடைகின்றனர்.

இதற்கிடையில், ஒளிப்படமியை தொலைத்த சிந்து, அதை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறாள். காணாமல் போன ஒளிப்படமி பற்றி அவள் தனது நண்பருடன் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஒளிப்பட நிலையங்களிலும் விசாரிக்கிறாள். மறுபுறம், படப்பிடிப்பானது கிராமவாசிகளின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடக்கிறது . ஒரு மரத்தின் உச்சியில் இருந்து படமெடுக்கும் போது, ஒளிப்படமி தற்செயலாக முதியவரின் தலையில் விழுந்து உடைந்துபோகிறது. முதியவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஒளிப்படமி சேதமானது குறித்து கணபதி மீது வீரபாபு குற்றம் சாட்டுகிறார். இதன்பிறகு படப்பிடிப்பைத் தொடர்வேண்டி, ஒளிப்படமியை சரிசெய்வதற்கான தொகையை கிராம மக்கள் அளிக்க முடிவு செய்கிறனர். ஒளிப்படமியை பழுது பார்க்க கணபதி ஒரு ஒளிப்பட நிலையத்தக்கு அதை அளிக்கிறார். ஒளிப்பட நிலைய உரிமையாளர் சிந்துவிடம் ஒளிப்படமி குறித்து தெரிவிக்கிறார். அவள் ஆவேசமாக கணபதியிடமிருந்து ஒளிப்படமியை வாங்கிக்கொண்டு கிளம்புகிறாள். வீரபாபுவும் மற்றவர்களும் தங்கள் படம் பாதியில் நின்றுவிட்டதை நினைத்து வேதனையுறுகின்றனர்.

தனது ஒளிப்படமி சேதமடைந்த்தைக் கண்டு சிந்து ஏமாற்றமடைகிறாள். ஆனால் அதில் படம்பிடிக்கப்பட்ட படக் காட்சிகளை அதன் நினைவக அட்டையிலிருந்து பார்த்த பிறகு, அவர்களுடைய பணியால் ஈர்க்கப்படுகிறாள். அவள் படக்காட்சிகளை உரியவாறு படத்தொகுப்பு செய்கிறாள். மேலும் கிராமத்தில் அதை திரையிட ஏற்பாடு செய்கிறாள். திரையில் அதைப் பார்த்து எல்லோரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அவள் மற்றொரு ஒளிப்படமியை கடன் வாங்கி, வீரபாபுக்கும் அவரது குழுவினருக்கும் அவர்களின் படத்தை முடிக்க உதவுகிறாள்.

கடைசியில், சிந்து அந்த முதியவரிடம் உண்மையிலேயே அவர்தான் கதை எழுதினாரா என்று கேட்கிறாள், அவர் தனக்கு எழுத படிக்கத் தெரியாது என்கிறார்.

நடிகர்கள் தொகு

  • விகாஸ் வசிஸ்டா வீரபாபாக
  • சந்தீப் வாரணாசி கணபதியாக
  • இராக மயூர் மரிதேஷ் பாபுவாக
  • உமா ஒய். ஜி. மங்காவாக
  • சிந்து ஸ்ரீனிவாச மூர்த்தி சிந்துவாக
  • பூஜாரி ராம் சரண் பாஷாவாக
  • திரிஷாரா திவ்யாவாக
  • தவானி பொட்டியாக
  • சிரிவன்னேலா யானமந்தலா கங்கோத்ரியாக
  • முனிவெங்கடப்பா முதியவராக
  • பிரவீன் காண்ட்ரேகுலா ஒளிப்பட நிலைய உரிமையாளராக (சிறப்புத் தோற்றம்)
  • தானி பயணிகளாக வசந்த் மரிங்கந்தி (சிறப்புத் தோற்றம்)

தயாரிப்பு தொகு

பிரவீன் காண்ட்ரேகுலா 2018 இல் ராஜ் மற்றும் டி. கே ஆகியோரை ஒரு நேர்காணலில் சந்தித்தார். அவரும் பிற எழுத்தாளர்களும் படத்தை உருவாக்கும் யோசனைகள் குறித்து ஒரு சிறு புத்தகத்தை உருவாக்கினர். தயாரிப்பாளர்கள் ராஜ் மற்றும் டி.கே ஆகியோர் பிரவீனிடம் ஒரு கதை கொண்டு ஒரு குறும்படத்தை உருவாக்க கேட்டுக்கொண்டனர். விரைவில் அந்த குறும்படத்தை எடுத்தானர். இதன் பிறகு, படம் தயாரிக்கப்பட்டது. [3]

படமானது 2019 இல் படமாக்கப்பட்டது. [4] படத்தை 2020 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டது. இந்தியாவில் கொரோனா ஊரடங்கின் காரணமாக, இது நெட்ஃபிக்சில் திரையிட திட்டமிடப்பட்டது. பிட்ட கதலுவுக்குப் படத்துக்குப் பிறகு, இது நெட்ஃபிக்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது அசல் தெலுங்கு திரைப்படம் ஆகும். [5]

இசை தொகு

படத்தின் இசையானது மேங்கோ மியூசி்க் லேபிள் மூலம் வெளியிடப்பட்டது. முதல் பாடல் 7 மே 2021 இல் வெளியிடப்பட்டது. [6] இரண்டாவது பாடல் "பாவிலோன கப்பா" பாடல் 12 மே 2021 அன்று வெளியிடப்பட்டது.

# பாடல் நீளம்
# பாடல்பாடகர் (கள்) நீளம்
1. "சினிமா தீஸ்தினாம்"  ரோல் ரிடா, ரதுண் பாஸ்கர் 2:46
2. "பாவிலோன கப்பா"  சிரிஷ் சத்தியவோலு 2:37

வெளியீடு தொகு

இந்த படம் முன்னதாக 2020 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் 14 மே 2021 இல் நெட்ஃபிக்ஸ் இல் வெளியிடப்பட்டது. [7]

குறிப்புகள் தொகு

  1. "Cinema Bandi trailer: Raj and DK present an innocent take on filmmaking". The Indian Express (in ஆங்கிலம்). 2021-04-30. பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.
  2. "Cinema Bandi Trailer: Raj & DK's Telugu Flick Looks Witty and Full of Jugaad; To Stream From May 14 on Netflix (Watch Video)". in.style.yahoo.com (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.
  3. "Cinema Bandi producer Raj Nidimoru, director Praveen Kandregula on bringing to life Andhra, Telengana's obsession with cinema-Entertainment News, Firstpost". Firstpost. 2021-05-13. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  4. "A peek into the genre-breaking movies by filmmaking duo Raj Nidimoru and Krishna DK". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.
  5. Entertainment, Quint (2021-04-30). "Cinema Bandi Trailer: Everyone Is a Filmmaker at Heart". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.
  6. "'Cinema Teesinam' song from 'Cinema Bandi' captivates listeners". www.ragalahari.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  7. Staff, Scroll. "'Cinema Bandi' trailer: An autorickshaw driver and his village set out to make a movie". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினிமா_பண்டி&oldid=3157365" இலிருந்து மீள்விக்கப்பட்டது