சின்னச் சின்ன ஆசை (திரைப் பாடல்)
சின்னச் சின்ன ஆசை என்று தொடங்கும் பாடல் மணிரத்தினத்தின், ரோஜா (திரைப்படம்) படத்தில் இடம்பெற்ற ஒரு திரைப்பாடல் ஆகும். வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் ஏ. ஆர். ரஹ்மான். பாடலைப் பாடியவர் பின்னணிப் பாடகி மின்மினி . இப்பாடலை எழுதியமைக்காக 1992 இன் சிறந்த பாடலாசிரியருக்கான இந்தியாவின் தேசிய திரைப்பட விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது.[1] இப்பாடலையும் உள்ளடக்கிய இப்படத்தின் இசையமைப்புக்காக ஏ. ஆர். ரஹ்மானுக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய திரைப்பட விருது கிடைத்தது.[2]
பாடல் சூழ்நிலை
தொகுஅக்காவைப் பெண் பார்க்க வரும் நாயகன் அவளது தங்கையான கதாநாயகியைத் திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. இதற்கு நாயகனே காரணம் என்று கருதும்போது அவனை வெறுத்து உறுதியான எதிர்ப்பைக் காட்டும் ஒரு பெண்ணாகவும், பின்னர் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்படும் தனது கணவனை மீட்பதில் தனி ஒருத்தியாக அதிகாரிகளுடன் வாதிட்டு வெற்றி பெறும் ஒரு பெண்ணாகவும் கதாநாயகி உருவாக்கப்பட்டுள்ளாள். இளமைக் காலத்தில் எல்லாப் பெண்களையும் போல் விதவிதமான கனவுகளுடன் சுறுசுறுப்பாகத் துள்ளித்திரியும் ஒரு பெண்ணாக இவளை அறிமுகப்படுத்துவதற்காக இயக்குநர் இப்பாடல் காட்சியைப் பயன்படுத்துகிறார். உலகில் படைக்கப்பட்டவை அனைத்துமே தனது மகிழ்ச்சிக்காகவே என்னும் மனப்போக்குடன் ஆடிப் பாடித் திரிகின்ற நாயகியின் மனப்போக்கைப் பாடல்வரிகளும், இசையும், பாடும் குரலும் தெளிவாகவே உணர்த்துகின்றன.
பாடல் வரிகளின் சிறப்பு
தொகு- "சின்னச் சின்ன ஆசை
- சிறகடிக்கும் ஆசை
- முத்து முத்து ஆசை
- முடிந்து வைத்த ஆசை"
எனச் சிறுவர்களும் புரிந்து கொண்டு பாடும்படியான சொற்களைக் கொண்டு இப்பாடல் தொடங்குகிறது. இவ்வாறான இதன் எளிமை இப்பாடலின் முக்கியமான சிறப்பியல்புகளுள் ஒன்று. "தமிழ்நாட்டின் ஒவ்வொரு குழந்தையின் உதடுகளிலும் தவழும் புதிய குழந்தைப் பாடலாக அழகுடனும், எளிமையுடனும் இப்பாடல் விளங்குகிறது" என்று தேசிய திரைப்பட விருதுக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.[1]
பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஆசைகளாக இருந்தாலும்,
- "வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை"
- "என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை"
- "வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை"
- "பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை"
- "மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை"
- "கார்குழலில் உலகை கட்டிவிடஆசை"
போன்ற வரிகள் மூலம் தேவதைக் கதைகளிலும், கனவுகளிலும் இடம் பெறக்கூடிய படிமங்களைப் பயன்படுத்திக் குழந்தைத் தனமானதும், குறும்புத் தனமானதுமான விடுதலை உணர்வின் வெளிப்பாட்டைப் பாடலில் காட்டியிருக்கிறார் பாடலாசிரியர்.