சிரியாவின் வரலாறு
சிரியாவின் வரலாறு, தற்போதைய சிரிய அரபுக் குடியரசு, சிரியப் பிரதேசம் ஆகியவற்றில் நிகழ்ந்த நிகழ்வுகளை உள்ளடக்குகின்றது. தற்போதைய சிரிய அரபுக் குடியரசு, பொகாமு 10 ஆம் நூற்றாண்டில் ஒன்றிணைக்கப்பட்ட புது அசிரியப் பேரரசின் கீழிருந்த ஆட்சிப் பகுதிகளை உள்ளடக்குகின்றது. புது அசிரியப் பேரரசின் தலைநகரம் அசுர். இப்பெயரில் இருந்தே சிரியா என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது.
இந்த ஆட்சிப் பகுதி பின்னர் பல ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதுடன், பல்வேறுபட்ட மக்களும் இங்கே குடியேறினர். 1919க்குப் பின்னர் சிரியா, பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1925 இல் சிரியாவில் பிரான்சுக்கு எதிரான புரட்சி வெடித்தது ஆனாலும் 1927 இல் அது அடக்கப்பட்டது. 1936 இல் சிரியாவும், பிரான்சும் சுதந்திரத்துக்கான உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டன. இதன் மூலம் பிரான்சு சிரியாவின் விடுதலையைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும் பிரான்சு தனது இராணுவத்தைத் தொடர்ந்து அங்கே வைத்திருந்தது. 1941 இல் சிரியா மீண்டும் விடுதலை அறிவிப்பை வெளியிட்டது. எனினும் 1944 சனவரியிலேயே சிரியா ஒரு சுதந்திரக் குடியரசாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் சிரியாவில் இருந்து பிரெஞ்சுப் படைகளை விலக்கிக்கொள்வது மிக மெதுவாகவே இடம்பெற்றது. இது தொடர்பில் பெரும் எதிர்ப்புக்கள் ஏற்பட்டன. இறுதியாக 1946 ஏப்ரலில் பிரான்சு சிரியாவை விட்டு முழுமையாக வெளியேறியது.
1958 பெப்ரவரி 21 ஆம் தேதி பொது வாக்கெடுப்பின் மூலம் இரு நாட்டு மக்களினதும் ஆணையுடன் எகிப்தும், சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசு என்னும் ஒரு நாட்டை உருவாக்கின. 1961 இல் இது மீண்டும் பிரிக்கப்பட்டு சிரியா தனியான சுதந்திர நாடானது. 1963 இல் இருந்து சிரிய அரபுக் குடியரசு பாத் கட்சியினால் ஆலப்படு வருகிறது. 1970 இலிருந்து இக்கட்சி அசாத் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. தபோது இடம்பெறும் உள்நாட்டுப் போரினால், சிரியா பல்வேறு பகுதிகளாகத் துண்டாடப்பட்டுப் பல்வேறு போட்டிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
வரலாற்றுக்கு முந்திய காலம்
தொகுசிரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மனிதர் வாழ்ந்ததற்கான மிகப் பழைய சான்றுகள் பழைய கற்காலத்துக்கு உரியவை (பொகாமு 800,000). 1993 ஆகத்து 23 இல் ஒரு சப்பான் - சிரிய அகழ்வாய்வுக் குழு, பழைய கற்கால மனிதனின் புதைபடிவ எச்சங்களை, டமாசுக்கசுவில் இருந்து 400 கிலோமீட்டர் வடக்கில் உள்ள டெடெரியாக் குகையில் கண்டுபிடித்தது. இப்பெரும் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் ஒரு நியன்டர்தால் குழந்தையுடையது. இக்குழந்தைக்கு இரண்டு வயது இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இக்குழந்தை நடுப் பழைய கற்காலத்தைச் (200,000 தொடக்கம் 40,000 ஆண்டுகள் வரையான காலம்) சேர்ந்தது. பல நியன்டர்தால் எலும்புகள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருப்பினும், அது முன்னர் புதைக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட முழுமையாகக் கிடைத்த குழந்தை ஒன்றின் எலும்புக்கூடு இதுவே.[1]
உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் சிரிய நாகரிகமும் ஒன்று எனத் தொல்லியலாளர்கள் எடுத்துக்காட்டி உள்ளனர். ஏறத்தாழ பொகாமு 10,000 இலிருந்தே இது புதியகற்காலப் பண்பாட்டின் மையமாக இருந்துள்ளது. வேளாண்மையும், விலங்கு வளர்ப்பும் உலகில் முதன் முதலாக இப்பகுதியிலேயே தொடங்கினன. செவ்வக வடிவான வீடுகள் முரேபெட் நாகரிகத்தில் இருந்துள்ளன. தொடக்கப் புதியகற்காலத்தில் மக்கள், கல், சிப்சம், சுட்ட சுண்ணாம்பு போன்றவற்றாலான பாத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அனத்தோலியாவில் இருந்து வந்த எரிமலைக் கண்ணாடிக் கருவிகள் முற்காலத்தில் இருந்த வணிகத் தொடர்புகளுக்குச் சான்றாக உள்ளன. அமூக்கர், இமார் ஆகிய நகரங்கள் புதியகற்காலத்திலும், வெங்கலக் காலத்திலும் செழித்திருந்தன.
பண்டைய அண்மைக் கிழக்கு
தொகுவடக்கு சிரியாவில் இட்லிப்புக்கு அண்மையில் உள்ள எப்லாவின் அழிபாடுகள் 1975 இல் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டது. எப்லா, பொகாமு கிமு 3000 அளவில் நிறுவப்பட்ட கிழக்கு செமிட்டிக் பேசும் ஒரு நகர நாடு எனத் தெரிகிறது. இதன் உச்சத்தில், ஏறத்தாழ பொகாமு 2500 இலிருந்து 2000 வரை, இது வடக்கில் அனதோலியா, கிழக்கில் மெசொப்பொத்தேமியா, தெற்கில் டமாஸ்கஸ் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பகுதி இதன் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்கக்கூடும்.