சிர்சி என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,600 அடி (790 மீ) உயரத்தில் உள்ள ஒரு மலைவாசஸ்தலமாகும். இங்கு யானைகள், புலிகள், சிறுத்தை மற்றும் தனித்துவமான கருஞ் சிறுத்தைகள் என்பன வசிக்கின்றன. சோண்டா வம்சத்தின் போது சிர்சி கல்யாணப்பட்டனா  என்றும் அழைக்கப்பட்டது.[1] இந்த நகரம் அடர்த்தியான பசுமையான காடுகளாலும், பல நீர்வீழ்ச்சிகளாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நகரிற்கு அருகில் ஹூப்லி நகரம் அமைந்திருப்பதால் வணிக வாய்ப்புகள் ஏராளமாக கிடைக்கின்றன. இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் பாக்கு உற்பத்தி ஆகும். சிர்சி வாழ் மக்கள் பெருமளவில் கமுகுப் பண்ணைகள் வைத்துள்ளார்கள். இவற்றினால் இந்திய மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் கோவாவின் தபோலிம் விமான நிலையம் ஆகும்.

புவியியல்

தொகு

சிர்சி 14.62 ° வடக்கு 74.85 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[2] இது கடல் மட்டத்திலிருந்து 1860 அடி முதல் 2600 அடி வரை உயரத்தில் உள்ளது. மேலும் இது மேற்கு தொடர்ச்சி மலையின் மையத்தில் அமைந்துள்ளது . சிர்சி பெங்களூரிலிருந்து சுமார் 425 கிலோமீற்றர் (264 மைல்) தொலைவில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் சிர்சியிலிருந்து 102 கிமீ (63 மைல்) தொலைவில் உள்ள ஹூப்லியில் அமைந்துள்ளது. அகனாசினி நதி சிர்சிக்கு அருகிலுள்ள "டோனிஹல்லா" என்ற இடத்தில் தொடங்கி மேற்கில் அரேபிய கடலை நோக்கி பாய்கிறது. இந்த நதி அதன் பாதையில் பல நீர்வீழ்ச்சிகளையும் உருவாக்குகிறது.

காலநிலை

தொகு

சிர்சி வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. பருவமழை தாக்கத்திற்கு வலுவாக உட்படுகின்றது. மழைக்காலங்களில் இப்பகுதியில் மிக அதிக மழை பெய்யும். இதன் விளைவாக இப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதி காடுகள் இலையுதிர் ஈரக்காடுகளாகும். பெறுமதி வாய்ந்த மரங்கள் இந்த பிராந்தியத்தின் காடுகளில் காணப்படுகிறது. வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காரணமாக, காடழிப்பு மற்றும் வேட்டையாடுதல் சமீபத்திய ஆண்டுகளில் நடைப்பெறுகின்றன. சிர்சியில் குளிர்கால வெப்பநிலை 15 °C (59 °F) இற்கும் குறைகிறது. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 40.2 °C (104.4 °F) ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 2.4 °C (36.3 °F) ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புள்ளிவிபரங்கள்

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி,[3]  நகர எல்லைக்குள் சிர்சியின் மக்கட் தொகை 62,335 ஆக இருந்தது. மக்கட் தொகையில் 51% வீதமானோர் ஆண்களும், 49% வீதமானோர் பெண்களும் ஆவார்கள்.

சிர்சியின் சராசரி கல்வியறிவு விகிதம் 92.82% ஆகும். இது தேசிய சராசரியான 74.05% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 95.26% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 90.43% வீதமாகவும் காணப்படுகின்றது. சனத்தொகையில் சுமார் 12% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

சிர்சியின் ஹவ்யக ​​பிராமணர்கள் கன்னடத்தின் ஹவ்யகா கன்னட பேச்சுவழக்கில் பேசுகிறார்கள். கிறிஸ்தவர்கள் கன்னடம் மற்றும் கொங்கனி ஆகிய இரு மொழிகளையும், சிர்சியின் முஸ்லிம்கள் கன்னடம் மற்றும் உருது ஆகிய இரு மொழிகளையும், பேசுகிறார்கள்.

பொருளாதாரம்

தொகு

நகரத்தைச் சுற்றியுள்ள முக்கிய வணிகங்கள் பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. நகரத்தை சுற்றி வளர்க்கப்படும் முதன்மை பயிர் கமுகு ஆகும். இந்த நகரம் “பாக்கு” இன் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாகும். இங்கு வளர்க்கப்படும் பாக்குகள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏலக்காய் , மிளகு , வெற்றிலை , வென்னிலா போன்ற மசாலாப் பொருட்களுக்கும் இப்பகுதி பெயர் பெற்றது. முக்கிய உணவு பயிர் நெல் ஆகும்.

சான்றுகள்

தொகு
  1. "Kalyanapatta". Archived from the original on 2009-03-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Maps, Weather, and Airports for Sirsi, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.
  3. "Census of India". Archived from the original on 2004-06-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்சி&oldid=3806381" இலிருந்து மீள்விக்கப்பட்டது