ஏ. ஐ. செயற்கை அறிவுத்திறன்

ஏ. ஐ. செயற்கை அறிவுத்திறன் அல்லது ஏ. ஐ. ஆட்டிபிசல் இன்ரெலிஜன்ஸ், 2001இல் வெளிவந்த ஓர் ஆங்கில அறிவியல் புனைவு நாடகத் திரைப்படம் ஆகும். இதனைப் பிரபல இயக்குனரான ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கியிருந்தார். இதன் திரைக்கதை 1969இல் பிரையன் அல்டிசு எழுதிய 'மீத்திறன் பொம்மைகள் கோடைகாலம் முழுதும் நீடிக்கும் (Supertoys Last All Summer Long)' என்ற அறிவியல் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, ஸ்பீல்பேர்க் மற்றும் இயன் வற்சன் ஆகியோரால் ஆக்கப்பட்டது. இத்திரைப்படம் கேத்லீன் கென்னடி, ஸ்பீல்பேர்க் மற்றும் பொனீ கேட்டிசு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இதில் ஹேலி ஜொல் ஒஸ்மென்ற், ஜூட் லோ, பிரான்சிஸ் ஓ'கொன்னர் மற்றும் வில்லியம் ஹேர்ற் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்[1]. இத்திரைப்படம் அன்பு செலுத்தும் திறனுடன் வடிவமைக்கப்பட்ட டேவிட் எனும் ஓர் இயந்திர மனிதன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது.

கதை தொகு

22ஆம் நூற்றாண்டில் புவி வெப்பமாதல் காரணமாக கடல் மட்ட உயர்வால் பல கரையோர நகரங்கள் கடலில் மூழ்கி, உலக மக்கள்தொகை வெகுவாகக் குறைந்தது. மெச்சா என அழைக்கப்படும் செயற்கை அறிவுத்திறன் மிக்க இயந்திர மனிதர்கள் உருவாக்கப்பட்டனர். ஹென்றி மற்றும் மோனிக்கா தம்பதியினரின் மகன் மார்ட்டின் ஒரு நோயால் பீடிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் காலத்தில் அவர்கள் டேவில் எனும் மெச்சா மனிதனைத் தம் பிள்ளையாக வளர்க்கின்றனர். ரெடி எனும் தானியங்கி கரடி பொம்மையுடன் டேவிட் நட்பாக உள்ளான். மார்ட்டின் குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் டேவிட் மீது பொறாமை கொள்கிறான். அவன் டேவிட்டை மோனிக்கா தூங்கும்போது அவளது முடியின் ஒரு பகுதியை வெட்டச்செய்கிறான். இதனால் ஹென்றி அது ஓர் ஆயுதம் என எண்ணி அச்சமடைகிறான்.

நீச்சல்தடாக விருந்தொன்றில் மார்ட்டினுடைய நண்பன் ஒருவன் டேவிட்டைக் கத்தியால் குத்த டேவிட்டினது தற்காப்பு முறை தொழிற்பட ஆரம்பிக்கிறது. அவன் மார்ட்டினைப் பிடிக்க இருவரும் தடாகத்தினுள் விழுகின்றனர். பின்னர் அவர்கள் காப்பாற்றப்படுகின்றனர். டேவிட்டை அவனை உருவாக்கியவரிடமே கொடுத்து அழிக்கும்படி ஹென்றி மோனிக்காவைக் கேட்கிறான். ஆனால் மோனிக்கா அவனையும் ரெடியையும் காட்டில் விடுகிறாள்.

அங்கிருந்து பிடிக்கப்பட்ட டேவிட், காலங்கடந்த மற்றும் அனுமதியற்ற மெச்சாக்களை மக்கள் கூட்டத்தின் முன் வெட்டும் சதைச் சந்தை எனும் ஒரு நிகழ்வில் வெட்டப்பட்டுக் கிட்டத்தட்டக் கொல்லப்படும் நிலையில் கிகோலோ ஜோ எனும் ஒரு மெச்சாவுடன் தப்பியோடுகிறான். டேவிட் மனிதனாக மாறினால் மோனிக்கா டேவிட் மீது காதல் கொண்டு வீட்டிற்கு அழைத்துச்செல்வாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருவரும் டேவிட்டை மனிதனாக மாற்றக்கூடியது என நம்பும் நீலத்தேவதை எனும் தேவதையைத் தேடிச் செல்கின்றனர்.

டேவிட்டும் ஜோவும் வெள்ளத்தால் அழிவுற்ற இடிபாடுகளிடையே மன்ஹாட்டனில் உள்ள ராக்ஃபெல்லர் மையத்தின் உச்சிக்குச் செல்கின்றனர். அங்கு டேவிட் தன்னை ஒத்த ஒரு மெச்சாவைக் கண்டு அதனை அழிக்கிறான். பின்னர் டேவிட்டை உருவாக்கிய பேராசிரியர் ஹொபியைச் சந்திக்கிறான். அவர் டேவிட்டைப் போலவே அதன் பெண் உருவான டார்லின் உட்பட பல மெச்சாக்களையும் உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார். இதனால் மனமுடைந்த டேவிட், ஒரு மலையுச்சியிலிருந்து வீழ்கிறான். ஆனால் ஜோ அவனைக் காப்பாற்றுகிறான்.

டேவிட்டும் ரெடியும் நீலத்தேவதையைத் தேடி கடலடியில் உள்ள கொனி தீவுகளுக்குச் செல்கின்றனர். அங்கு நீலத்தேவதை சிலையாக இருப்பதைக் காண்கின்றனர். அங்குள்ள இராட்சதச் சில்லு அவர்களது வாகனத்தின் மீது வீழ்ந்ததால் அவர்கள் அங்கேயே சிக்கிக்கொள்கின்றனர். டேவிட் தன்னை மனிதனாக மாற்றுமாறு வேண்டிக்கொண்டேயிருக்க கடல் உறைந்து பனியில் அகப்படுகிறான். அவனது சக்தி மூலம் முடிவடைய அவன் செயலிழக்கிறான்.

இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னர், மனித இனம் அழிந்து விட்டிருக்கிறது. மெச்சாக்கள் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றனர். அவர்கள் டேவிட்டையும் ரெடியையும் கண்டெடுக்கின்றனர். அவர்களுக்கு மனிதர்களைத் தெரிந்திருப்பதால் அவர்கள் சிறப்புப் பெறுகின்றனர்.

டேவிட்டை மெச்சா மீட்ட பின் அவன் நடந்து சென்று நீலத்தேவதையைத் தொட அது உடைந்து வீழ்கின்றது. டேவிட்டின் நினைவுகளிலிருந்து மெச்சாக்கள் அவனது பழைய வீட்டை உருவாக்குகின்றனர். அவனை மனிதனாக்க முடியாது என விளக்குகின்றனர். அவன் மோனிக்காவின் தலைமுடியிலிருந்து அவளை உருவாக்குமாறு வேண்டுகிறான். அவ்வாறு உருவாக்கினால் அவள் ஒரு நாள் மட்டுமே இருப்பாள் என்றும் அவளை மீண்டும் உருவாக்க முடியாதென்றும் மெச்சாக்கள் எச்சரிக்கின்றனர். டேவிட்டின் விருப்பத்தின்படி மோனிக்கா உருவாக்கப்படுகிறாள். டேவிட் மோனிக்காவுடன் அடுத்த நாள் பொழுதைக் கழிக்கிறான். மோனிக்கா துயிலும் முன்னர் அவள் டேவிட்டை எப்பொழுதுமே காதலித்ததாகக் கூறுகிறாள். அவர்களிருவரும் அமைதியாகக் கிடப்பதை ரெடி கட்டிலில் ஏறிப்பார்க்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "A.I. (12)". British Board of Film Classification. Archived from the original on ஏப்ரல் 8, 2014. பார்க்கப்பட்ட நாள் April 7, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)