கருப்பு வயிற்று ஆலா

பறவை இனம்
கருப்பு வயிற்று ஆலா
Black-naped tern
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
லேரிடே
பேரினம்:
இனம்:
இசு. acuticauda
இருசொற் பெயரீடு
இசு அக்குட்டிகுடா
(கிரே, 1832)

கருப்பு வயிற்று ஆலா (Black – bellied Tern, Sterna acuticauda) என்பது இந்திய துணைகண்டதில் பெரிய ஆறுகளின் அருகே காணப்படும் ஆலா வகை பறவை ஆகும். இப்பறவை பாக்கிஸ்தான், தென் சீனா, நேபாளம், தாய்லாந்து ,கம்போடியா, லாவோஸ், வியட்னாம் வரை பரந்து காணப்படுகிறது. இதன் வாழிட எல்லையின் கிழக்குப் பகுதியில் இது மிகவும் அரிதாகிவிட்டது. மேலும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் இப்பறவையை அருகிய இனம் என மதிப்பிட்டுள்ளது.

விளக்கம் தொகு

இப்பறவை காக்கையைவிட அளவில் சற்று சிறியதாக இருக்கும். இது சுமார் 32 முதல் 35 செமீ (13 முதல் 14 அங்குலம்) நீளம் வரை இருக்கும். அலகு ஆரஞ்சு நிறத்திலும், விழிப்படலம் கரும்பழுப்பு நிறத்திலும், கால்கள் நல்ல சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

இனப்பெருக்க காலமான கோடைக்காலத்தில் இதன் உடலின் மேற்பகுதி கருஞ் சாம்பல் நிறமாகவும், வயிறும் மார்பும் கருப்பாக இருக்கும். நெற்றி, உச்சி, பிடரி, கொண்ணை ஆகியன பளபளப்பாக கரிய நிறத்தில் இருக்கும். கண்ணின் முன்னிட்டம், கன்னம், மோவாய், தொண்டை ஆகியன நல்ல வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் தோற்றம் மீசை ஆலாவுடன் ஒத்து இருக்கும் என்றாலும், வால் நன்கு நீண்டு பிளவு பட்டிருப்பது இதனை மீசை ஆலாவில் இருந்து வேறுபடுத்தி அறிய உதவும்.

இனப்பெருக்க காலம் முடிந்த குளிர்காலத்தில் இதன் நிறத்தில் மாறுபாடுகள் தோன்றும். அதன்படி இதன் கருப்பு நிற மார்பும் வயிறும் சாம்பல் நிறமாக மாறும். வெண்மையான தலையில் சிறு கருப்புக் கோடுகள் இருக்கும். மார்பும் கழுத்தும் வெண்மை தோய்ந்த சாம்பல் நிறமாக மாறி இருக்கும். இக்காலத்தில் இதன் மெளிந்த தோற்றம் கொண்டும், சிவப்பான சிறுத்த அலகு கொண்டும் ஆற்று ஆலா

 
கருப்பு வயிற்று ஆலா

விலிருந்து வேறுபடுத்தி அறியலாம்.

காணப்படும் பகுதிகள் ,உணவு தொகு

ஆற்று ஆலாவைப்போல இது பரவலாகக் காணப்படுவதில்லை. நன்னீர் பரப்பிலே ஆறுகளின் மேலும் ஏரிகளின் மீதும் காற்றை எதிர்த்துப் பறந்து கொஞ்ச தூரம் சென்றதும் மீண்டும் திருப்பிப் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும். இவ்வாறு பறக்கும் இதன் பழக்கமே ஒன்றைப்பெற அலைபவனைப்பற்றிக் குறிப்பிடும் போது ஆலாய்ப் பறக்கிறான் என்ற வழக்கு பிறக்கக் காரணம். நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்கி மீனைப் பிடிப்பதோடு நீர்ப்பரப்பை ஒட்டிப் பறந்தும் மீனைப் பிடிக்கும். பறக்கும் போது கொக்கொக் எனக் குரல் கொடுக்கும். [1]

இனப்பெருக்கம் தொகு

பிப்ரவரி முதல் ஏப்ரல் முடிய ஆற்றில் மணல் மேடுகளில் சிறிதே மணலைப் பறித்து குழியை உண்டாக்கி 3 முட்டைகளை இடும். வெய்யிலிருந்து முட்டைகளையும் குஞ்சுகளையும் காக்கப் பெற்றோர் இறக்கை விரித்து நிழல் செய்தும் மார்பைத் தண்ணீரில் நனைத்து வந்து முட்டைகளை ஈரப்படுத்தியும் பாதுகாக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:59
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_வயிற்று_ஆலா&oldid=3772477" இலிருந்து மீள்விக்கப்பட்டது