பூஞ்சையியல்

பூஞ்சைகளைப் பற்றி விளக்கும் உயிரியலின் ஒரு பிரிவு

பூஞ்சையியல் (Mycology) என்பது பூஞ்சைகளைப் பற்றி விளக்கும் உயிரியலின் ஒரு பிரிவாகும். பூஞ்சைகளின் மரபியல், உயிர்வேதியியல், நச்சுத்தன்மை, மனிதர்களுக்கான இவற்றின் பயன்கள், தீங்குகள் உட்பட்ட பண்புக்கூறுகள் அனைத்தும் இப்பிரிவில் ஆராயப்படுகின்றன. இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் பூஞ்சையியல் அறிஞர் எனப்படுகின்றார்.

காளான்களின் இனப்பெருக்கக் கட்டமைப்பு

பூஞ்சையியல் என்ற துறையிலிருந்து தாவர நோயியல் என்ற ஒரு உயிரியல் துறை உருவானது. தாவர நோய்களையும் அவற்றைக் கட்டுபடுத்துகின்ற நுறைகளையும் விளக்குகின்ற அறிவியல் துறைக்கு தாவர நோயியல் என்று பெயராகும். இரண்டு துறைகளும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையனவாக இருக்கின்றன. ஏனெனில், தாவரங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் பெரும்பாலான நோய்க்கிருமிகள் பூஞ்சைகளாக இருக்கின்றன. பரிணாம வளர்ச்சியில் பூஞ்சைகள் தாவரங்களைக் காட்டிலும் விலங்குகளுடன் மிக நெருக்கமான தொடர்புடையனவாக இருந்தாலும், வரலாற்றில் பூஞ்சையியல் தாவரவியலின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு கூட இது அங்கீகரிக்கப்படவில்லை. எலியாசு மக்னசு பிரைசு, கிறிசுடியன் என்றிக் பெர்சூன், அன்டன் டி பாரி, இலூயிசு டேவிட் வொன் சுவின்டிட்சு உள்ளிட்ட முன்னோடி பூஞ்சையியல் அறிஞர்களாக கருதப்படுகின்றனர்.

நச்சுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மற்றும் இரண்டாம் நிலை வளர்சிதைப் பொருட்களை பல பூஞ்சைகள் உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக, உலகளாவிய இனமாக விளங்கும் பியூசரியம் என்ற காளான் இழை பூஞ்சையைப் பற்றியும், மனிதர்களிடத்தில் ஏற்படுத்தும் அபாயகரமான திடீர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அவற்றின் நச்சுத்தன்மை பற்றியும் ஆபிரகாம் யோஃபி என்பவர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். பூமியில் வாழ்வதற்கு பூஞ்சைகள் அடிப்படையானவையாகும். ஏனெனில் இவற்றின் பங்கு ஒரு கூட்டுயிர் இணைத்தாவரம் ஆகும். உதாரணம்: வேர்பூஞ்சைகள், பூச்சி இணையுயிர்கள், லைகென்கள். பல பூஞ்சைகள் சிக்கலான கரிம மூலக்கூறுகளை சிதைக்கும் சக்தியைப் பெற்றுள்ளன. நீடித்து உழைக்கும் மரத்தின் பகுதிப்பொருளான இலிக்னின், மாசுக்களான அயலுயிரிகள், பெட்ரோலியம், பல்வளைய அரோமாட்டிக் கார்பன்கள் போன்றவை சிக்கலான கரிம மூலக்கூறுகளில் அடங்கும். உலக கார்பன் சுழற்சியில் பூஞ்சைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பூஞ்சைகளும் பாரம்பரியமாக பூஞ்சைகள் என்று கருதப்படுகின்ற பிற உயிரினங்களும் பெரும்பாலும் பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. இவற்றில் பல தாவரங்களிலும் விலங்குகளிலும் நோய்களை உண்டாக்குபவையாகவும் உள்ளன.

நோய் உண்டாக்குபவை என்பதைக் கடந்து பல பூஞ்சைகள் தாவர நோய்களைக் கட்டுப்படுத்தும் முக்கிய உயிரினங்களாகவும் விளங்குகின்றன. உதாரணமாக அனைத்து வகையான மண்ணிலும் இருக்கக்கூடிய டிரைகோடெர்மா எனப்படும் இழைப்பூஞ்சைகள் மிகமுக்கியமான உயிரியல் கட்டுப்பாட்டு முகவராகக் கருதப்படுகின்றன. பயிர் நோய் மேலாண்மையில், வேதியியல் சார்ந்த அடிப்படை பொருட்களுக்கு மாற்றாக இவ்விழைப் பூஞ்சைகள் கருதப்படுகின்றன [1]. பூஞ்சைகளின் சுவாரசியமான இனங்களைக் கண்டுபிடிக்க அவ்வப்போது புலக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. 1868 இல் வுல்ஃகோப் இயற்கையாளர்கள் களச் சங்கம் "பூஞ்சைகள் மத்தியில் ஒரு தாக்குதல்" என்ற தலைப்பில் முதல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது[2].

சில பூஞ்சைகள் மனிதர்களிடத்திலும் பிற உயிரினங்களிடத்தும் நோய்களை உருவாக்குகின்றன. இத்தகைய நோய் உருவாக்கும் பூஞ்சைகளை ஆராய்கின்ற அறிவியல் பிரிவு மருத்துவப் பூஞ்சையியல் என்று அழைக்கப்படுகிறது[3]

பூஞ்சைகள் தொகு

தாவரப் பெருந் தொகுதியில் கிரிப்டோகம்கள் எனப்படும் பூவாத்தாவரங்கள் ஒரு தனித்தொகுதியாக அமைகின்றன. இவை தேலோஃபைட்டாக்கள் எனப்படுகின்றன. இத்தொகுதியின் கீழினத் தாவரங்களாக பாசிகளும் பூஞ்சைகளும் அமைகின்றன. வேர், தண்டு, இலைகள் போன்ற பாகங்கள் இவற்றுக்கு இருப்பதில்லை. எனவே இவற்றில் பச்சையமும் இருப்பதில்லை. இலட்சக்கணக்கிலான சிற்றினங்களாக பூஞ்சைகள் பூமியில் காணப்படுகின்றன.

வரலாறு தொகு

மனிதர்கள் வரலாற்றுக் காலங்களில் காளான்களை உணவுக்காக சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. முதன்முதலாக யூரிபீடசின் படைப்புகளில் காளான்கள் தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன. (480-406 கி.மு.). கிரேக்க தத்துவவாதி தியோபிராசுடோசு எயோரசோசு (371-288 கி.மு.) முதன் முதலில் தாவரங்களை ஓர் ஒழுங்குமுறை திட்டத்துடன் வகைப்படுத்தினார். சில உறுப்புகள் காணப்படாத தாவரங்கள் என்ற பிரிவில் காளான்கள் வகைப்படுத்தப்பட்டன. பின்னர் பிளைனி நிலத்தடி காளான்களைப் பற்றி அவருடைய கலைக்களஞ்சியத்தில் எழுதினார். கிரேக்க மொழியில் μύκης என்ற சொல் பூஞ்சையையும் -λογία என்ற சொல் ஆய்வு அல்லது இயல் என்ற பொருளையும் தருகின்றன. இம்முன்,பின் ஒட்டுகளை ஒன்றாகச் சேர்த்து பூஞ்சையியல் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய காலத்தில் பூஞ்சைகள் பற்றிய அறிவு சிறிது முன்னேற்றம் கண்டது. அச்சிடும் பத்திரிகையின் கண்டுபிடிப்பால் பூஞ்சைகள் பற்றிய மூடநம்பிக்கைகளும், சில தவறான கருத்துக்களும் பரப்பப்பட்டன[4].

பியர் அண்டோனியோ மைக்கேலியின் 1737 ஆம் வெளியீடு பூஞ்சைகளின் நவீனகாலத் தொடக்கமாகும். புற்கள், பாசிகள் மற்றும் பூஞ்சைகளின் முறையான வகைப்படுத்தலுக்கு இவ்வெளியீடு அடித்தளத்தை அமைத்தது. பூஞ்சையியல் மற்றும் பூஞ்சையியல் அறிஞர்கள் என்ற சொற்பயன்பாட்டை 1836 இல் முதன் முதலில் எம்.யே.பெர்க்லி பயன்படுத்தினார் [5].

பூஞ்சைகளும், நிலத்தடிக் காளான்களும் மூலிகைகளல்ல வேர்களுமல்ல. இவை பழங்கள் அல்ல, பூக்கள் அல்ல விதைகளும் அல்ல. மாறாக வெறும் மிதமிஞ்சிய ஈரப்பதம் அல்லது பூமியில், மரங்களில், அழுகிய மரங்களில், மற்றும் பிற அழுகிய பொருட்களில் காணப்படும் ஓர் உயிரினம் ஆகும். அனைத்து பூஞ்சை மற்றும் நிலத்தடிக் காளான்களும், குறிப்பாக சாப்பிட பயன்படுத்தப்படும் காளான்கள் பொதுவாக ஈரமான வானிலையில் வளர்கின்றன.

—யெரோம் போக் (ஐயிரோனிமசு திராகசு), 1552 [6]

மருத்துவப் பூஞ்சையியல் தொகு

பல நூற்றாண்டுகளாக சீனா, சப்பான், உருசியா போன்ற நாடுகளில் பூஞ்சைகள் நாட்டு மருந்துகளாக[ பயன்படுத்தப்பட்டு வருகின்றன [7]. மத்திய கிழக்கு , போலந்து, பெலாரசு போன்ற நாடுகள் காளான்களை நாட்டுபுற மருந்துகளாகப் பயன்படுத்தி வந்தனர் [8][9]. பாலிபோரசு வகை காளான்கள் பல்வேறு வகையான உடல்நலக் குறைபாடுகளுக்கு மருத்துவம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவின் ஓப் நகரில் உள்ள தேசிய மருத்துவ மையத்தில் மருத்துவப் பூஞ்சைகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன [10][11]. இதேபோல நியூயார்க் நகரிலுள்ள கெட்டரிங் புற்றுநோய் மையத்திலும் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன [12].

தற்போதைய ஆராய்ச்சிகள், காளான்கள் மீது தனி கவனம் செலுத்துகின்றன, இரத்தச் சர்க்கரைச் செயல்பாடு, புற்றுநோய்-எதிர்ப்புச் செயல்பாடு, எதிர்ப்பு-நோய்த்தாக்கம், மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துதல் செயல்பாடு ஆகியவற்றைக் காளான்கள் கொண்டிருக்கலாம் என்ற நோக்கில் இவ்வாய்வுகள் நிகழ்கின்றன. ஆயிசுடர் காளான் இயற்கையாகவே கொழுப்புச்சத்தைக் குறைக்கும் இயல்பு கொண்டிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, புற ஊதா (UV) ஒளிக்கு உட்படுத்தும்போது காளான்கள் வைட்டமின் டி உயிர்சத்தை அதிக அளவில் வெளிபடுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன [13].சிலவகை பூஞ்சைகள் எதிர்காலத்தில் புற்றுநோய் மருந்துக்கான ஆதார மூலமாகத் திகழலாம் .[14]. இன்றைய தினம், பென்சிலின், உலோவாசுடாடின், சிக்ளொசுபோரின், கிரிசெயோபல்வின் உள்ளிட்ட மருந்துகள் பூஞ்சைகள் எனப்படும் ஐந்தாவது இராச்சியத்தில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Ruano-Rosa, David; Prieto, Pilar; Rincón, Ana María; Gómez-Rodríguez, María Victoria; Valderrama, Raquel; Barroso, Juan Bautista; Mercado-Blanco, Jesús (2015-11-07). "Fate of Trichoderma harzianum in the olive rhizosphere: time course of the root colonization process and interaction with the fungal pathogen Verticillium dahliae" (in en). BioControl 61 (3): 269–282. doi:10.1007/s10526-015-9706-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:1386-6141. http://link.springer.com/article/10.1007/s10526-015-9706-z. 
  2. Anon (1868). "A foray among the funguses". Transactions of the Woolhope Naturalists' Field Club: 184–192. http://www.biodiversitylibrary.org/item/44662#page/254/mode/1up. 
  3. San-Blas G; Calderone RA (editors). (2008). Pathogenic Fungi. Caister Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-904455-32-5. http://www.horizonpress.com/pat2. 
  4. Ainsworth, p. 13.
  5. Ainsworth, p. 2.
  6. De stirpium maxime earum quae in Germania nostra nascuntur, usitatis nomenclaturis. Strasbourg. In Ainsworth, p. 13, quoting Buller, AHR. (1915). Micheli and the discovery of reproduction in fungi. Transactions of the royal Society of Canada, series 3 9: 1–25.
  7. Smith JE, Rowan NJ, Sullivan R (May 2002). "Medicinal Mushrooms: Their therapeutic properties and current medical usage with special emphasis on cancer treatments". Cancer Research UK. p. 5. Archived from the original on 2011-04-30. பார்க்கப்பட்ட நாள் 2017-05-05.
  8. Sarfaraz Khan Marwat; Mir Ajab Khan; Muhammad Aslam Khan; Mushtaq Ahmad; Muhammad Zafar; Fazal-ur-Rehman and Shazia Sultana (2009). "Aromatic Plant Species Mentioned in the Holy Qura’n and Ahadith and Their Ethnomedicinal Importance". Pakistan Journal of Nutrition 8 (9): 1472–1479. doi:10.3923/pjn.2009.1472.1479. http://www.pjbs.org/pjnonline/fin1498.pdf. பார்த்த நாள்: 2017-05-05.  Sahih Muslim, Book 23, Chapter 27, Hadiths
  9. Shashkina MIa; Shashkin PN; Sergeev AV (October 2006). "[Chemical and medicobiological properties of Chaga (review)]". Farmatsevtychnyĭ zhurnal 40 (10): 560–568. doi:10.1007/s11094-006-0194-4. 
  10. Di Rado, Alicia (July 2008). "A salad fixin' with medical benefits?". EHope (City of Hope National Medical Center) 7 (7). http://www.cityofhope.org/about/publications/eHope/2008-vol-7-num-7-july-29/Pages/a-salad-fixin-with-medical-benefits.aspx. பார்த்த நாள்: 2017-05-05. 
  11. Di Rado, Alicia (November 2008). "Can a mushroom help fight lung cancer?". EHope (City of Hope National Medical Center) 7 (11). http://www.cityofhope.org/about/publications/eHope/2008-vol-7-num-11-november-26/Pages/can-a-mushroom-help-fight-lung-cancer.aspx. பார்த்த நாள்: 2017-05-05. 
  12. "A phase I/II trial of a polysaccharide extract from Grifola frondosa (Maitake mushroom) in breast cancer patients: immunological effects". Journal of Cancer Research and Clinical Oncology 135 (9): 1215–21. September 2009. doi:10.1007/s00432-009-0562-z. பப்மெட்:19253021. 
  13. Bowerman, Susan (March 31, 2008), "If mushrooms see the light", The Los Angeles Times
  14. Ji, Y; Bi; Yan; Zhu (Jan 2006), "Taxol-producing fungi: a new approach to industrial production of taxol" (Free full text), Sheng wu gong cheng xue bao = Chinese journal of biotechnology, 22 (1): 1–6, doi:10.1016/s1872-2075(06)60001-0, ISSN 1000-3061, PMID 16572833
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்சையியல்&oldid=3657914" இலிருந்து மீள்விக்கப்பட்டது