சுக்கிரநீதி

சுக்கிரநீதி என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நீதி நூல்களுள் ஒன்றாகும். இதை உண்மையில் எழுதியவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் தன்னைக் காணவந்த அசுரர்களுக்குக் கூறுவதாகவே இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் தொடக்கத்தில், பிரம்ம தேவனால் உலகம் நலம்பெற நூறு இலட்சம் சுலோகங்கள் நீதி மொழிகளாக அருளப்பட்டதாகவும், வசிட்டர் முதலியவர்களும், தானும் (சுக்கிராச்சாரியார்), அவற்றை, அரசர் முதலானோர் பயன்பெறச் சுருக்கி அளித்துள்ளதாகவும், சுக்கிராச்சாரியாரின் வாய் மொழியாகத் தரப்பட்டுள்ளது.[1] இந்நூலின் காலம் பத்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.[1]

நூலின் அமைப்பு

தொகு

இந்த நூலில் ஐந்து அத்தியாயங்கள் உள்ளன. இவற்றுள் முதல் அத்தியாயத்தில் 35 தலைப்புக்களில் விடயங்கள் கையாளப்பட்டுள்ளன. இரண்டாம் அத்தியாயத்தில் 20 தலைப்புக்களும், மூன்றாம் அத்தியாயத்தில் 12 தலைப்புக்களும் உள்ளன. நான்காம் அத்தியாயம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தமாக 88 தலைப்புக்களில் பல்வேறு விடயங்கள் பேசப்படுகின்றன. ஐந்தாம் அத்தியாயத்தில் பொதுநீதி என்னும் ஒரேயொரு தலைப்புக் காணப்படுகின்றது.

முதலாம் அத்தியாயம் தொடக்கம் ஐந்தாம் அத்தியாயம் வரையில் முறையே 387, 433, 322, 1229, 88 ஆகிய எண்ணிக்கையில், மொத்தமாக 2459 சுலோகங்களால் சுக்கிரநீதி ஆக்கப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

தொகு

பொதுவான நீதி நெறிகளைப் பற்றிக் கூறுகின்ற இந்நூலில், நிர்வாக முறைகள், நீதிபரிபாலனம், போர் முறைகள், கட்டிடக்கலை, சிற்பம், அரசன், அமைச்சன் மற்றும் பலவகைப்பட்ட அதிகாரிகளினதும், பணியாட்களினதும் குணநலன்கள் என்பன போன்ற ஏராளமான விடயங்கள் பற்றியும் சுக்கிரநீதியில் விவரிக்கப்படுகின்றன.

பல்வேறு விடயங்கள் தொடர்பாகத் தற்காலத்திலும் வழக்கிலுள்ள கருத்துருக்கள் பல சுக்கிர நீதியிலும் காணக்கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டாம் அத்தியாயத்தில், கூலி அளவு என்னும் தலைப்பில் எடுத்தாளப்பட்டுள்ளவற்றில் தற்கால நடைமுறைகளின் கருத்துருக்களை அடையாளம் காணமுடிகின்றது. இப் பகுதியில் பணியாட்களுக்குக் கொடுக்கும் வேதனம் மூன்று வகையாகப் பிரித்து நோக்கப்படுகின்றது:

  1. காரியமானம்: ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் சுமந்து செல்வது போன்றதொரு வேலையைச் செய்வதற்கான ஊதியம்.
  2. காலமானம்: தொடர்ச்சியாகச் செய்யப்படும் வேலைக்காகக் கால அடிப்படையில் (வாரம் ஒன்றுக்கு, மாதம் ஒன்றுக்கு அல்லது ஆண்டொன்றுக்கு) வழங்கப்படும் தொகை.
  3. காரிய காலமானம்: ஒரு குறிப்பிட்ட காலத்துள், ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிப்பதற்குத் தருவதாக ஏற்பாடு செய்துகொண்ட கூலி. இது ஒப்பந்த அடிப்படையிலான வேலை போன்றது.

நோய் வாய்ப்பட்டிருக்கும் பணியாட்களுக்கான ஊதியம் தொடர்பாகப் பின்வரும் நடைமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:

  1. சில மாதங்களுக்கு நோயுற்றிருக்கும் பணியாளுக்கு முக்கால் பங்கு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும்.
  2. ஓரு ஆண்டு வரை நோயுற்றிருப்பவனுக்கு மூன்று மாதத்துக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  3. ஐந்து ஆண்டுகள் வேலை செய்தபின் நோய்வாய்ப்பட்ட ஒருவனுக்கு அவன் வேலை செய்த கால அளவுக்கு ஏற்ப ஊதியத்தின் அளவைக் கூட்டிக் கொடுக்கலாம்.
  4. ஒரு பணியாள் நீண்ட காலத்துக்கு நோயுற்றிருந்தால், கூடிய அளவு, மொத்தமாக ஆறு மாதத்துக்குரிய ஊதியம் வரை கொடுக்கலாம்.
  5. ஒரு வாரம் வரை நோயுற்றிருக்கும் பணியாளர்களுடைய ஊதியம் கழிவு எதுவும் இன்றி வழங்கப்பட வேண்டும்.
  6. ஓரு ஆண்டுக்கு மேலாக நோயுற்றிருக்கும் பணியாளுக்குப் பதிலாக இன்னொரு பணியாளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம். ஆனால், நோயுற்றவனின் குணநலன்கள், நாணயம் ஆகியவற்றைக் கருத்தில் எடுத்து அவனுக்கு அரைப்பங்கு ஊதியம் வழங்கலாம்.
  7. ஆண்டொன்றுக்குப் பதினைந்து நாட்களுக்குரிய ஊதியம் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படலாம் (இன்றைய போனஸ் போல).

இது தவிர அரசனிடம் நாற்பது ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவனுக்குச் செய்யவேண்டியவை தொடர்பாகப் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன:

  1. அவனுக்கு அரைப் பங்கு ஊதியத்துடன், அவன் வாழும் காலம் வரை உதவி செய்துவரல் வேண்டும்.
  2. அவனுடைய மகன் இயலாமை உள்ளவனாக இருந்தால் அவனது வாழ்நாள் முழுவதும் அவனது தந்தை பெற்ற ஊதியத்தின் கால் பங்கு வழங்கி வரல் வேண்டும்.
  3. அம் மகன் வேலை செய்யக் கூடிய தகுதி உள்ளவனாயிருந்தால் அதற்குரிய வயதை அடையும் வரையில் மேற் குறித்த காற்பங்கு ஊதியம் வழங்க வேண்டும்.
  4. கற்பு நெறியில் ஒழுகும் மனைவிக்கும் அதேயளவு தொகை வழங்க வேண்டும்.
  5. கன்னியான அவனது மகளுக்கும், அவள் மணம் செய்து கொள்ளும்வரை இதே தொகையைக் கொடுத்து வரல் வேண்டும்.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 மாணிக்கவாசகன், ஞா., 1998.

உசாத்துணைகள்

தொகு
  • மாணிக்கவாசகன், ஞா., (தொகுப்பாளர்), சுக்கிரநீதி, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 1998. (தமிழில்)
  • கௌர், நிகேதன் ஆனந்த், (தொகுப்பாளர்), ஸ்தபத்ய வேத்-வாஸ்து சாஸ்திரா, நியூ ஏஜ் புக்ஸ், புது டில்லி, 2002. (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்கிரநீதி&oldid=2938182" இலிருந்து மீள்விக்கப்பட்டது