சுண்டா நீரிணை
சுண்டா நீரிணை என்பது, இந்தோனீசியத் தீவுகளான சாவாவுக்கும், சுமாத்திராவுக்கும் இடையே அமைந்துள்ள நீரிணையாகும். இது, ஜாவாக்கடலை, இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. இப்பெயர் மேற்கு சாவாவைக் குறிக்கும் பெயரான பாசுண்டான் என்பதிலிருந்து வந்தது. மேற்கு சாவாவின் தாயக மக்களும் சுண்டானியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.[1]
புவியியல்
தொகுஇந்த நீரிணை, வடகிழக்கு/ தென்மேற்குத் திசையில் அமைந்துள்ளது. இதன் வடகிழக்கு முனையில் சுமாத்திராவில் உள்ள துவா முனைக்கும், சாவாவில் உள்ள புஜாத் முனைக்கும் இடையில் இந்நீரிணையின் மிகக் குறைவான அகலம் காணப்படுகின்றது. இவ்வகலம் 24 கிமீ. மேற்கு முனையில் இது மிகவும் ஆழமானது. ஆனால், கிழக்கு நோக்கி இது ஒடுங்கிச் செல்லும்போது, கிழக்கு முனையின் சில பகுதிகளில் ஆழம் 20 மீ (65 அடி) க்குக் குறைகின்றது. இதனாலும், மணல் மேடுகள், மிக வலுவான அலை நீரோட்டம், எண்ணெய் மேடைகள் போன்ற மனிதர் உருவாக்கிய தடைகள் ஆகியவை இருப்பதனாலும் இந்நீரிணையில் கப்பல்கள் செல்வது கடினமானது. எனினும் பல நூற்றாண்டுகளாக இது ஒரு முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையாக இருந்துள்ளது. குறிப்பாக, மலுக்குத் தீவுகளுக்குச் செல்வதற்கான நுழைவழியாக இதை ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி பயன்படுத்தியது. இருந்தாலும், நீரிணை ஒடுக்கமான இருப்பதாலும், ஆழம் குறைவு என்பதாலும், பதை விபரங்கள் துல்லியமாக இல்லாததாலும், பல பெரிய நவீன கப்பல்களுக்கு இவ்வழி பொருத்தமானது அல்ல. இவ்வகைக் கப்பல்கள் மலாக்கா நீரிணையூடாகவே செல்கின்றன.[2]