சுபா
சுபா என்பது முகலாயப் பேரரசின் மாகாணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும். ஷா ஹுமைரா சுபா என்பதன் சுருக்கமே சுபாவாகும். இச்சொல் அரேபிய மற்றும் பாரசீக மொழியில் இருந்து பெறப்பட்டது. சுபாவின் ஆளுநர் அல்லது ஆட்சியாளர் சுபாதார் என்று அழைக்கப்பட்டார்.[1]) இந்தியத் தரைப்படையில் உள்ள அதிகாரியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லான சுபேதார் இங்கிருந்து தான் பெறப்பட்டது. 1572-1580 ஆம் ஆண்டுகளில் தனது நிர்வாகச் சீர்திருத்தங்களைப் பாட்ஷா (பேரரசர்) அக்பர் கொண்டுவந்தபோது சுபாக்கள் நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் மொத்தம் 12 சுபாக்கள் இருந்தன. ஆனால் அக்பரின் படையெடுப்புகள் அவரின் ஆட்சிக்கால முடிவின் போது சுபாக்களின் எண்ணிக்கையை 15 ஆக உயர்த்தியது. சுபாக்கள் சர்க்கார்கள் அல்லது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. சர்க்கார்கள் மேலும் பர்கனாக்கள் அல்லது மகால்கள் எனப் பிரிக்கப்பட்டன. அக்பருக்குப் பின் வந்தவர்கள், குறிப்பாக ஔரங்கசீப் சுபாக்களின் எண்ணிக்கையைத் தனது படையெடுப்புகள் மூலம் மேலும் அதிகப்படுத்தினார். 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்தபோது பல சுபாக்கள் சுதந்திரமாகச் செயல்பட ஆரம்பித்தன, அல்லது மராத்தியர்கள் அல்லது பிரித்தானியர்களால் வெல்லப்பட்டன.