சுழற்சிக் காலம்
வானியலில், சுழற்சிக் காலம் என்பது ஒரு விண்பொருள் தன் அச்சில் தன்னைத்தானே சுற்ற ஆகும் கால அளவாகும். இது அப்பொருளின் விண்மீன் பின்னணியை சார்ந்து அளக்கப்படுகின்றது. பூமியை பொறுத்தவரை இதுவே அதன் மெய் நாளாகும், இது சூரியனை சார்ந்து, சூரியன் பூமியின் முதல்நெடுவரையை கடக்கவாகும் காலளவாய், அளக்கப்படும் பகலவ நாளிலிருந்து மாறுபடும்.
பொதுவில் (ஆனால், முறையற்றதாய்), சுழற்சிக் காலம் என்பதை அவ்விண்பொருளில் உணரப்படும் நாள்பொழுதாகக் கருதலாம் (எடுத்துக்காட்டாய், சூரியனை சுற்றிவரும் ஒரு கோளின் சூரிய நாள்பொழுது).
சுழற்சியை அளத்தல்
தொகுதிடப் (விண்)பொருள்களுக்கு, பாறையாலான கோள்கள் மற்றும் விண்கற்கள் போன்றவற்றிர்க்கு, சுழற்சிக் காலம் என்பது மாறா மதிப்பைத்தான் பெற்றிருக்கும். வளிம/பாய்மக் கூற்றினாலான பொருள்களின், விண்மீன்கள் பெரும் வாயுக்கோள்கள் போன்றவற்றின், சுழற்சிக் காலம் முனையிடையிலிருந்து நடுவரை வரை இடதிற்கிடம் மாறுபடும், இம்மாற்றம் வகையீட்டுச் சுழற்சியென்ற தோற்றப்பாட்டின் வினையாகும்.
வழக்கில், ஒரு பெரும் வாயுக்கோளின் (எ-டு., வியாழன்) சுழற்சிக் காலம் எனத்தரப்படும் மதிப்பு அதன் அகச்சுழற்சிக் காலமாகும், அஃதாவது, அக்கோளின் காந்தக் களத்தின் சுழற்சிக் காலமாகும்.
பொதுவில், சமச்சீர் கோளவடிவம் பெற்றிராத (விண்)பொருள்களின் சுழற்சிக் காலம், ஈர்ப்பு மற்றும் பேரலை விசைகள் இல்லாதிருப்பினும், நிலையான மதிப்புடையதல்ல. இதன் காரணம், அப்பொருளின் சுழற்சி அச்சு (அண்ட)வெளியில் நிலைபெற்றிருந்தாலும் (கோண உந்தக் காப்பாண்மைக்கு படிந்து), அப்பொருளோடே நிலைபெற்றிருக்க வேண்டிய கட்டாயமின்மையே யாகும்.
இதனால், சுழற்சி அச்சை சுற்றிலும் அப்பொருளின் நிலைமாறு உந்தமும் அதனால் அப்பொருளின் சுழற்சி வீதமும் மாறுபடலாம் (காரணம், நிலைமாறு உந்தம் மற்றும் சுழற்சி வீதம் இவற்றின் பெருக்கலே கோண உந்தமாகும், இஃது நிலையானது). ஹைப்பெரியன் என்ற சனிக்கிரகத்தின் துணைக்கோள் இத்திகழ்வை கொண்டுள்ளது, அதனின் அதன் சுழற்சிக் காலம் ஒழுங்கிலி எனக் கூறப்பெற்றது.
சுழற்சிக் காலம் என்பது, ஒரு விண்பொருள் பிறிதொரு (பெரிய) விண்பொருளை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலளவான சுற்றுக்காலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆதலின், பூமி தன் சுழற்சிக் காலமாய் 24 மணி நேரத்தையும்(ஒரு நாள்), தன் சுற்றுக்காலமாய் 365 நாட்களையும் கொண்டுள்ளது. மற்றொருபுரம், பூமியின் துணைக்கோளான நிலவின் சுழற்சிக்காலம் அது பூமியை சுற்றிவர ஆகும் காலமான சுற்றுக்காலத்தை துள்ளியமாய் ஒத்திருக்கின்றது, நிலவின் ஒரேப் பக்கம்தான் பூமியை எப்பொழுதும் நோக்கியிருகின்றது என்பதனால் இவ்வாறு அமைந்துள்ளது. இஃது ஒத்தகால சுழற்சியென அழைக்கப்படுகின்றது.
இவ்வியக்கங்களின் கணிப்பும் பதிவும் நாட்காட்டிகளின் பயன்பாட்டால் எளிமையடைந்தன. ஒரு பூமியாண்டில் (பூமியின் சுற்றுக்காலம்) உள்ள பூமிநாட்களின் (பூமியின் சுழற்சிக் காலம்) எண்னிக்கை முழுவெண் அல்ல, தோராயமாய் 365.24 நாட்கள். பெருமளவில் பயன்பாட்டில் இருக்கும் கிரெகோரியன் காலவரையீட்டில் இம்முரன்பாட்டை ஈடுசெய்ய எச்ச நொடிகள், எச்ச ஆண்டுகள், எச்ச நூற்றாண்டுகள் (400 ஆண்டிற்கு ஒருமுறை தோன்றும் எச்ச ஆண்டு) தேவைப்படுகின்றன.
பிற காலவரையீடுகள் வேறுமாதிரியான முறைகளைக் கொண்டு இதை ஈடுசெய்தோ அல்லது இம்முரன்பாட்டை கருத்தில் கொள்ளாமலோ விடுகின்றன.
சில விண்பொருள்களின் சுழற்சிக் காலங்கள்
தொகுகோள் | சுழற்சிக் காலம் |
---|---|
சூரியன் | 25 நாட்கள் 9 மணிகள் 7 மணித்துளிகள் 13 நொடிகள் (25.38 நாட்கள்) (நடுவரை), உச்சிக்கருகில் ஏறத்தாழ 35 நாட்கள் |
புதன் | 58 நாட்கள் 15.5088 மணிகள் (58.6462 நாட்கள்) |
வெள்ளி | 243.0185 நாட்கள் |
பூமி | 0.997270 நாட்கள் (23.93447 மணிகள் or 86,164 நொடிகள்) |
பூமியின் நிலா | 27.321661 நாட்கள் (ஒத்தகால சுழற்சி) |
செவ்வாய் | 24.622962 மணிகள் (1.025 957 நாட்கள்) |
வியாழன் | 9 மணிகள் 55 மணித்துளிகள் 29.685 நொடிகள் (0.413538021 நாட்கள்) |
சனி | 10 மணிகள் 39 மணித்துளிகள் 22.4 நொடிகள் (0.4440092592 நாட்கள்) |
யுரேனஸ் | 17 மணிகள் 14 மணித்துளிகள் 24 நொடிகள் (0.718333333 நாட்கள்) |
நெப்டியூன் | 16 மணிகள் 6 மணித்துளிகள் 36 நொடிகள் (0.67125000 நாட்கள்) |
புளூட்டோ | 6 நாட்கள் 9 மணிகள் 17.6 மணித்துளிகள் (6.387 நாட்கள்) |
இக்கட்டுரையில் பயன்படுத்தப்பெற்ற கலைச்சொற்கள்
தொகுகலைச்சொல் | ஆங்கில நிகரி |
---|---|
சுழற்சிக் காலம் | Rotation period |
மெய் நாள் | Sidereal day |
பகலவ நாள் | Solar day |
பாய்மம் | Fluid |
முனையிடை | Pole |
நடுவரை | Equator |
பேரலை விசை | Tidal force |
கோண உந்தம் | Angular momentum |
நிலைமாறு உந்தம் | Moment of inertia |
ஒழுங்கிலி | Chaotic value |
ஒத்தகால சுழற்சி | Synchronous rotation |
எச்ச நொடிகள் | Leap seconds |
எச்ச ஆண்டுகள் | Leap year |
எச்ச நூற்றாண்டுகள் | Leap centuries |