சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்

ரோமில் உள்ள ஒரு தேவாலயம்

புனித பவுல் பேராலயம் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க பேராலயங்களுள் ஒன்றாகும்[1]. இது அதிகாரப்பூர்வமாக Papal Basilica of St. Paul Outside the Walls (இலத்தீன்: Basilica Sancti Pauli extra moenia; இத்தாலியம்: Basilica Papale di San Paolo fuori le Mura) என்று அழைக்கப்படுகிறது. உரோமை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பண்டைய நான்கு உயர் பேராலயங்களுள் இதுவும் ஒன்றாகும்[2]. பிற உயர் பேராலயங்கள்: புனித பேதுரு, புனித இலாத்தரன் யோவான், புனித மரியா ஆகிய பெருங்கோவில்கள் ஆகும்.

சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்
(Papal Basilica of St Paul Outside the Walls)
உரோமை நகரின் சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் - முகப்புத் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்உரோமை (வத்திக்கான் நகர்-நாடு ஆளுகைக்குட்பட்டது)
புவியியல் ஆள்கூறுகள்41°51′31″N 12°28′38″E / 41.85861°N 12.47722°E / 41.85861; 12.47722
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன்
மாகாணம்லாத்சியோ
மாவட்டம்உரோமை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுகி.பி. 4ஆம் நூற்றாண்டு
நிலைஉயர் பேராலயம்
தலைமைபிரான்செஸ்கோ மோந்தெரீசி - தலைமைக் குரு (2009-)
இணையத்
தளம்
Official Website

தொடக்க வரலாறு

தொகு

உரோமைப் பேரரசன் நீரோ என்பவரின் ஆட்சியில் கி.பி. 65-67 அளவில் கொல்லப்பட்ட திருத்தூதர் பவுலின் கல்லறைமேல் கிறித்தவர்கள் ஒரு "நினைவு மண்டபம்" கட்டி அவருக்கு வணக்கம் செலுத்திவந்தார்கள். அம்மண்டபம் உரோமை நகரின் அவுரேலியன் சுவர்களிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலையில் ஓஸ்தியா நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது.

கி.பி. நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் ஓரளவு நின்ற காலத்தில் உரோமைப் பேரரசன் காண்ஸ்டண்டைன் கிறித்தவ மதத்தைக் கடைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை அகற்றினார். அவரே புனித பவுலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவு மண்டபத்தின் கீழ் அகழ்வு நிகழ்த்தப் பணித்தார். புனித பவுலின் கல்லறைமீது ஒரு கோவில் கட்டி எழுப்பினார். அக்கோவில் கி.பி. 324ஆம் ஆண்டு, நவம்பர் 18ஆம் நாள் திருத்தந்தை சில்வெஸ்டர் என்பவரால் நேர்ந்தளிக்கப்பட்டது.

விரிவாக்கம்

தொகு

உரோமைப் பேரரசர்களாகிய தியோடோசியஸ், இரண்டாம் வாலண்டீனியன், அர்க்கேடியஸ் ஆகியோரின் ஆட்சியில் புனித பவுல் கோவில் விரிவாக்கப்பட்டு, எழிலுற அமைக்கப்பட்டது. கி.பி. 384-395 காலகட்டத்தில் நடந்த விரிவாக்கத்தின்படி, கோவிலுக்கு ஐந்து உள் நீள்வாக்குப் பகுதிகள் அமைக்கப்பட்டன; அவை நான்கு பிரிவுடைய ஒரு முற்றத்தைச் சென்றடையும் விதத்தில் இருந்தன. கோவில் முற்றத்தில் நான்கு வரிசையாகத் தூண்கள் எழுப்பப்பட்டன.

பல திருத்தந்தையர் ஆட்சிக் காலத்தில் புனித பவுல் கோவில் இன்னும் அதிகமாக அழகுபடுத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக, கோவிலைச் சுற்றுயுள்ள அகன்ற காப்புச் சுவர்கள் 9ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டன. வெளியிலிருந்து எதிரிகள் தாக்காமல் இச்சுவர்கள் கட்டப்பட்டன. உயர்ந்தெழுகின்ற மணிக்கூண்டும் பிசான்சியக் கலையில் அமைந்த எழில்மிகு பெருங்கதவும் 11ஆம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டன.

பிற விரிவாக்கங்களுள் குறிப்பிடத்தக்கவை: கோவில் முகப்பில் ஓவியர் பியேத்ரோ கவால்லீனி என்பவரால் அமைக்கப்பட்ட பதிகைக் கல் ஓவியங்கள்; வாஸ்ஸலேத்தோ குடும்பத்தினர் உருவாக்கிய முற்றத் தோட்டம்; கோதிக் பாணியில் அமைந்த விரிமேடை; பாஸ்கா மெழுகுதிரியைத் தாங்க 13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கலையழகு மிக்க உயர்ந்த விளக்குத் தண்டு.

இவ்வாறு பல விதங்களில் அணிசெய்யப்பட்ட புனித பவுல் பேராலயம், 1626இல் புனித பேதுரு பேராலயம் புதிதாகக் கட்டப்பட்டு நேர்ந்தளிக்கப்படும் ஆண்டுவரையிலும் உரோமை நகரிலேயே புகழ்மிக்க மாபெரும் பேராலயமாகத் திகழ்ந்தது.

தீ விபத்தில் நிகழ்ந்த சேதம்

தொகு

1823ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள் இரவில் திடீரெனப் பற்றிய தீயில் புனித பவுல் பெருங்கோவில் பெரும் சேதமுற்றது. பண்டைய கிறித்தவக் கலைக்கும், பிசான்சியக் கலைக்கும், மறுமலர்ச்சிக் கலைக்கும், பரோக்கு கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய கோவில் சேதமடைந்ததால் கிறித்தவ உலகமே துயருற்றது.

புதிய கோவில் கட்டப்படுதல்

தொகு

தீ விபத்து நிகழ்ந்த குறுகிய காலத்திலேயே கோவிலை மீண்டும் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தீக்குத் தப்பிய கட்டடப் பகுதிகளும் கலைப் பொருள்களும் புதிய கட்டடத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னர் கோவில் எவ்வடிவத்தில் இருந்ததோ அதே வடிவத்தில் அது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டது. 1840இல் திருத்தந்தை பதினாறாம் கிரகோரி கோவிலின் பீடத்தை அர்ச்சித்தார்.

கோவில் சீரமைக்கப்பட்ட பிறகு வேறு கலைவேலைகளும் சேர்க்கப்பட்டன. 146 பெரும் தூண்களைக் கொண்ட முன்வாயிற் பகுதி 1928இல் இணைக்கப்பட்டது. அண்மைக் காலத்தில் கோவிலின் கீழ் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் பயனாக புனித பவுல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

திருத்தந்தையர்களின் முகச் சாயல்கள் வரிசை

தொகு
 
பளிங்குத் தரை கொண்ட கோவிலில் நீள்வாக்காக அமைந்த உள் நடுப்பகுதி

5ஆம் நூற்றாண்டில், திருத்தந்தை பெரிய லியோ என்பவரின் ஆட்சிக்காலத்தில் புனித பவுல் பெருங்கோவிலின் உள்ளே நடு நீள்வாக்குப் பகுதியின் இரு புறங்களிலும் தூண்களின் மேற்பகுதியில் திருத்தந்தையர்களின் முகச் சாயல்கள் தனித்தனியாகவும் இயல்பான தோற்றத்திலும் வரிசையாக வரையப்பட்டன. அந்த வரிசை தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுகிறது.

பண்டைய உரோமை நகரின் சுவர்களுக்கு வெளியே இவ்வாலயம் அமைந்திருந்ததால் இதற்கு "சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்" என்னும் பெயர் வந்தது. இப்போது இக்கோவில் உரோமை நகரின் எல்லைக்குள்தான் இருக்கின்றது. ஆயினும் இது வத்திக்கான் நகர்-நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது[3].

பிற சிறப்புகள்

தொகு
 
புனித பவுல் பெருங்கோவிலோடு இணைந்த முற்றத் தோட்டம்

புனித பவுல் பேராலயத்தை ஒட்டி, மிகப் பழைய துறவியர் இல்லம் உள்ளது. இது புனித பெனடிக்ட் துறவியர் இல்லம் ஆகும். இந்தத் துறவியர் இல்லம் க்ளூனி ஓடோன் என்பவரால் 936இல் சீரமைக்கப்பட்டது. இன்றுவரை அது துறவியர் இல்லமாகவே செயல்பட்டுவருகிறது. எட்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை இரண்டாம் கிரகோரியின் ஆட்சியில் உருவான இத்துறவியர் இல்லம் புனித பவுலின் கல்லறை அருகே அமைந்துள்ளது. அங்கு வதிகின்ற துறவியர் புனித பவுல் ஆலயத்தில் பாவ மன்னிப்பு வழிபாடுகள் நடத்தவும், கிறித்தவ ஒன்றிப்புக் கூட்டங்கள் நிகழ்த்தவும் பொறுப்புக் கொண்டுள்ளனர்.

 
பீடத்தின் மேற்கூரை. பதிகைக்கல் ஓவியம்: இயேசுவைச் சூழ்ந்து பேதுரு, பவுல், லூக்கா, அந்திரேயா. ஆண்டு:1220.

கிறித்தவ ஒன்றிப்பும் புனித பவுல் ஆலயமும்

தொகு

புனித பவுல் மனமாற்றம் அடைந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25ஆம் நாள் இந்த ஆலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்த நாளில் "கிறித்தவ ஒன்றிப்பு வாரம்" தொடங்கும். அதைத் தொடங்கிவைக்க திருத்தந்தை புனித பவுல் கோவிலுக்குச் செல்வார்.

2007, சூன் மாதம் 28ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிட்க் புனித பவுல் பேராலயத்துக்குச் சென்று, 2008ஆம் ஆண்டு "புனித பவுல் ஆண்டு" எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார். புனித பவுல் பிறந்த 2000 ஆண்டு நினைவாக அக்கொண்டாட்டம் 2008 சூன் 28இலிருந்து 2009 சூன் 29 வரை (புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா) நிகழ்ந்தது.

ஆதாரங்கள்

தொகு