சுவசுத்திக்கா
சுவஸ்திக் அல்லது சுவஸ்திகா என்பது ஒன்றையொன்று அவற்றின் நடுப்பகுதியில் செங்குத்தாக வெட்டும் ஒரேயளவான இரண்டு கோடுகள், அவற்றின் எல்லா நுனிப்பகுதிகளும் ஒரே திசையில் வளைந்து இருக்குமாறு அமைந்த ஒரு வடிவத்தைக் குறிக்கும். இது நுனிகள் வலப்பக்கம் வளைந்தவையாகவோ (卐), இடப்பக்கம் வளைந்தவையாகவோ (卍) இருக்கலாம். இந்த வடிவம் பண்டை இந்தியாவின், சிந்துவெளி நாகரிகக் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததாகத் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது. இது இந்தியச் சமயங்களான இந்து, பௌத்தம், சமணம் ஆகியவற்றில் புனிதச் சின்னமாக பயன்பட்டது.
மேற்கத்திய பண்பாட்டில் குறிகிய காலம் இவ்வடிவம் பெரு வழக்கில் இருந்ததைத் தொடர்ந்து, 1920 ஆம் ஆண்டில் தேசிய சமூகவுடமைச் செருமன் தொழிலாளர் கட்சியினர் (நாசிக் கட்சி) இவ்வடிவத்தைத் தமது சின்னமாக ஆக்கினர். 1933 ஆம் ஆண்டில் அடோல்ஃப் இட்லர் செருமனியின் ஆட்சியைப் பிடித்த பின்னர், சுவசுத்திக்கா நாசி செருமனியில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சின்னம் ஆனது. 1935 ஆம் ஆண்டில் சுவசுத்திக்காவைக் கொண்டிருந்த நாசிக் கட்சியின் கொடி, செருமனியின் கொடி ஆக்கப்பட்டது. இதனால் 1930களில், சுவசுத்திக்காவை நாசிசம், பாசிசம், வெள்ளையின உயர்வுக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்றாகவே மேற்குலகம் பார்த்தது. தற்காலத்தில் மேற்கு நாடுகளில் இது இகழ்ச்சிக்கு உரிய ஒரு சின்னமாகவே உள்ளது. நாசிசத்தின் சின்னமாக இது பயன்படுத்தப்படுவதை செருமனி தடை செய்துள்ளது. நாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட பல தற்கால தீவிரவாத அரசியல் கட்சிகள் சற்று மாற்றியமைக்கப்பட்ட சுவசுத்திக்காவைத் தமது சின்னமாகக் கொண்டுள்ளன.
பெயர்
தொகுசுவசுதிக்கா என்னும் பெயர் சமசுக்கிருத மூலம் கொண்டது. இது அதிட்டத்தைத் தரக்கூடிய அல்லது மங்களமான பொருட்களைக் குறிக்கிறது. இச்சொல்லில் முதலில் வரும் சு நல்ல என்பதைக் குறிக்கும். ஆகவே சுவசுதி" நலமாக இருத்தலைக் குறிக்கிறது."[1]
பௌத்த சமயத்தவர்கள் பயன்படுத்திய இக் குறியீடு சமயத்தினூடாகச் சீன மொழியில் எழுத்தாக நிலை பெற்றுள்ளது. அம் மொழியில் இருந்து சப்பான் மொழி உட்பட்ட பல கிழக்காசிய மொழிகளுக்கும் இது பரவி உள்ளது. சீன மொழிக்கான ஒருங்குறி வரி வடிவங்களில் இடது புறம் நோக்கும் சுவசுத்திக்கா வடிவம் U+534D என்பதினாலும், வலது புறம் நோக்கும் வடிவம் U+5350 என்பதினாலும் குறிக்கப்படுகிறது. திபெத்திய மொழிக்கான ஒருங்குறியிலும் நான்கு வகையான சுவசுத்திக்கா வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.
வடிவம்
தொகுவடிவவியல் அடிப்படையில் சுவசுத்திக்காவை ஒரு இருபதுகோணி அல்லது 20 பக்கப் பல்கோணி எனக் கொள்ளலாம். இது 90 பாகை சுழற்சிச் சமச்சீர் கொண்ட ஒரு வடிவம். ஆனால், இது தெறிப்புச் சமச்சீர்த் தன்மை உடையது அல்ல. இதன் வலப்புறம் நோக்கியதும், இடப்புறம் நோக்கியதுமான இரு வடிவங்களும் ஒன்றுக்கொன்று தெறிப்பு வடிவங்களாக அமைந்துள்ளன. இவ்விரு சுவசுத்திக்கா வடிவங்களையும் பின்வரும் வழிகளில் வேறுபடுத்திக் குறிப்பிடுவது உண்டு.
- மணிக்கூட்டுத்திசை வடிவம் - எதிர் மணிக்கூட்டுத்திசை வடிவம்
- இடம் நோக்கிய வடிவம் - வலம் நோக்கிய வடிவம்
- இடக்கை வடிவம் - வலக்கை வடிவம்
கோடுகள் கிடையாகவும், நிலைக்குத்தாகவும் அமைய இருக்கும் சுவசுத்திக்கா வடிவம் ஒன்றில், மேலே இருக்கும் கிடைக்கோடு நோக்கும் திசையின் அடிப்படையிலேயே வலம் நோக்கு, இடம் நோக்கு என்பன தீர்மானிக்கப்படுகின்றன. இக்கோடு பார்ப்பவர்களின் வலப்பக்கம் நோக்கியிருந்தால் அது வலம் நோக்கிய சுவசுத்திக்கா. இடப்புறம் நோக்கியிருந்தால் அது இடம் நோக்கிய சுவசுத்திக்கா. சுவசுத்திக்காவின் சுழற்சித்திசை என குறுக்குக்கோடுநோக்கும் திசையைக் கொள்வதா அல்லது அக்கோடு பின்தொடர்ந்து செல்லும் திசையைக் கொள்வதா என்பதில் குழப்பம் உள்ளது. பெரும்பாலும், நுனிகளில் அமையும் குறுக்குக் கோடுகள் நோக்கும் திசையில் சுழற்சி ஏற்படுவதாகக் கொண்டே மணிக்கூட்டுத்திசை அடிப்படையில் வேறுபாடு விளக்கப்படுகிறது. இதன்படி வலம் நோக்கிய சுவசுத்திக்கா மணிக்கூட்டுத்திசை வடிவம் ஆகும். இடம் நோக்கிய வடிவம் எதிர்மணிக்கூட்டுத்திசை வடிவம் ஆகும்.
குறிப்புகள்
தொகு- ↑ "The Swastika பரணிடப்பட்டது 2009-12-30 at the வந்தவழி இயந்திரம்." Northvegr Foundation. Notes on the etymology and meaning of Swastika.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- History of the Swastika (US Holocaust Memorial Museum)
- The Origins of the Swastika பிபிசி செய்திகள்
- A Swastika Pictorial Atlas
- Swastika is pre-Aryan, dates back 11,000 years