சுவிசேட புராணம்
சுவிசேட புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை ஆக்கியவர் டி.எம்.ஸ்காட் (T.M. Scott) என்னும் பெயருடைய வெளிநாட்டு கிறித்தவ மறைபரப்பாளர் ஆவார்.[1] தமிழில் ஆர்வம் கொண்ட இவர் தமது பெயரை "ஸ்காட்" என்பதிலிருந்து "சுகாத்தியர்" என்று மாற்றிக் கொண்டார்.
நூல் விவரங்கள்
தொகு"சுவிசேட புராணம்" இயேசு கிறித்துவின் நற்செய்தியை எடுத்துரைக்கிறது. இந்நூலில் காண்டம், மூர்த்தி, படலம் என்னும் பிரிவுகளை சுகாத்தியர் கையாளுகின்றார்.
நூலில் அடங்கியுள்ள பாடல்களின் எண்ணிக்கை 3360 ஆகும். இந்நூல் 1896ஆம் ஆண்டு மதுரை கிளக்ஹார்ன் அச்சகத்தில் பதிப்பாகியது.
தமிழறிஞர் சுகாத்தியர் பற்றிய குறிப்பு
தொகுசுகாத்தியர் என்னும் ஸ்காட் மறைபரப்புவதில் மட்டும் ஈடுபடவில்லை. அவர் தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஔவையார் எழுதிய "மூதுரை" என்னும் நூலை இவர் பதிப்பித்து, அதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிட்டார். சென்னை வேப்பேரியில் அந்நூல் 1860இல் வெளியானது.
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்" எனத் தொடங்கி முப்பது பாக்களால் ஆன மூதுரை நூலில் காணப்படும் அறநெறிக் கருத்துகளை சுகாத்தியர் போற்றுகின்றார்.
சுகாத்தியர் திருக்குறளுக்கும் உரை எழுதியுள்ளார். அவர் வெளியிட்ட உரைநூலின் முழுப்பெயர் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருத்துரையட்டவணையும் பொழிப்புரையும், சுகாத்தியர், லாரன்ஸ் பிரஸ், சென்னை, 1889.
சுகாத்தியர் திருக்குறளில் செய்த மாற்றங்கள்
தொகுதிருக்குறளுக்கு உரை எழுதிய மணக்குடவர், பரிமேலழகர் போன்ற பழைய உரையாசிரியர்கள் திருக்குறளின் உட்பிரிவுகளான இயல், அதிகாரம், அதிகாரத்தில் வரும் குறட்பாக்கள் ஆகிய இவற்றின் வைப்புமுறையை ஆக்கியதில் தமக்குள் வேறுபடுகின்றனர் என்பது வரலாறு.
அவர்களைப் பின்பற்றி, சுகாத்தியரும் திருக்குறளின் கட்டமைப்பில் பால், இயல், அதிகாரங்களை மாற்றியமைத்து வெளியிட்டார். அறத்துப்பாலை "இயன்முறைப்பால்" என்றும், பொருட்பாலை "இயைமுறைப்பால்" என்றும், காமத்துப்பாலை "இறைமுறைப்பால்" என்றும் அவர் பெயர் மாற்றம் செய்தார். அதிகாரம் என்பதைப் பதிகம் என்றும், பாயிரத்தை நூல் முகம் என்றும் மாற்றினார். கடவுள் வாழ்த்து என்ற அதிகாரப் பெயரை முதற்பொருள் வாழ்த்து என்றும், வான்சிறப்பை மழைத்துணை வாழ்த்து என்றும் அறன்வலியுறுத்தலை அறமுறை வாழ்த்து என்றும் மாற்றினார். மேலும் சுகாத்தியர் திருக்குறள் பாக்களிலேயே பற்பல சொற்களை மாற்றினார்.[2]
ஆதாரம்
தொகு- ↑ இர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).
- ↑ திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600108, 2005, பக். 62.