திருக்குறள் பரிமேலழகர் உரை
திருக்குறள் பழைய உரைகள் பத்தில் காலத்தால் பிந்தியது திருக்குறள் பரிமேலழகர் உரை.[1] திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை மிகவும் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. திருக்குறள் வைப்புமுறையில் பரிமேலழகர் குறட்பாக்களை ஒவ்வொரு அதிகாரத்திலும் அடுக்கி வைத்துள்ள முறைமையே இன்று அனைவராலும் பின்பற்றப்படுகிறது.
உரைச் சிறப்பு
தொகுஇந்த உரையின் சிறப்புகளை இந்த உரைநூலுக்கு எழுதப்பட்டுள்ள சிறப்புப் பாயிரம் தெளிவுபடுத்துகிறது.[2]
- ஒன்பது உரைகளுக்குப் பின்னர் பத்தாவதாக எழுந்த உரை இது
- வள்ளுவனே மீண்டும் பிறந்து வந்து தன் கருத்தினை வெளிப்படுத்தியது போல் உள்ளது.[3]
- பொழிப்புரையாகவும், அகல-உரையாகவும் உள்ளது. நுட்பமான விழுமிய பொருள்களும், சொல்லாமல் புலப்படுத்திய எஞ்சிய விழுமிய பொருள்களும் தோன்றுமாறு எழுதப்பட்டுள்ளது.
- பரிமேலழகர் வடமொழியையும் தென்-தமிழையும் முறையாகப் பயின்றவர். தவ முனிவர்.
உரை - எடுத்துக்காட்டு
தொகு- "இறந்த மூப்பினராய இருமுது குரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவும் செய்தாயினும் புறதருக" என்னும் அறநூல் பொதுவிதி. பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியர் ஆதலும் நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமை பற்றி இவ்வாறு கூறினார்.[4]
பரிமேலழகர் உரை சிறப்படையக் காரணங்கள்
தொகுதிருக்குறளுக்கு எழுதப்பட்ட பழைய உரைகள் பத்து என்பது மரபு. அந்தப் பத்து உரைகளில் காலத்தால் முற்பட்டது மணக்குடவர் உரை என்றும் அது 10ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது என்றும் அறிஞர் கூறுவர். திருக்குறளின் பாடம் முதன்முதலில் நமக்குத் தெரிய வருவது மணக்குடவர் உரை வழியாகவே.
பரிமேலழகரின் உரை மணக்குடவரின் உரைக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழிந்தே எழுதப்பட்டது. ஆயினும் மணக்குடவரின் உரையைப் பரிமேலழகர் பல இடங்களில் திருத்தி அமைக்கின்றார். திருக்குறளின் அமைப்பு முறையிலும் மாற்றம் செய்துள்ளார்.
பரிமேலழகர் உரை சிறப்படைந்ததற்கு காரணமாகக் கூறப்படுவன இவை:
- பரிமேலழகர் உரையில் மிக நுட்பமான ஆழ்ந்த புலமை விளங்குகிறது.
- பரிமேலழகர் உரை சிறப்பான உரை நுட்பம் கொண்டுள்ளது.
- பரிமேலழகர் உரையில் அரிய இலக்கண நுட்பம் பளிச்சிடுகிறது.
இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட திருக்குறள் உரை பழைய உரைகள் எல்லாவற்றிலும் சிறப்பானதாகக் கருதப்பட்டதில் வியப்பில்லை.
இத்தகைய இலக்கியப் பண்புகளை உள்ளடக்கிய பரிமேலழகர் உரையைத் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பதிப்பகங்கள் வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளன. இதுவரை பரிமேலழகர் உரைக்கு 200க்கு மேற்பட்ட பதிப்புகள், பல வடிவங்களில் 30க்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.[5]
மேலும், பரிமேலழகர் உரைக்கு வேறு உரைகள் எழுதப்பட்டுள்ளன என்பதிலிருந்து, அந்த உரை அறிஞர்கள் நடுவிலும் மக்கள் நடுவிலும் உயரிய இடம் பெற்றுள்ளதை அறியலாம்.
தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான உரை நூல்கள் பரிமேலழகர் உரையைத் தழுவியே வெளிவந்துள்ளன என்பதும் அதன் சிறப்பினைப் புலப்படுத்தும். இந்த உரை ஒன்றுதான் மிகுதியான விளக்க உரைகளையும் உரை விளக்க உரைகளையும் தழுவல் உரைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பரிமேலழகர் உரை சிறப்புப் பெற்றமைக்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் அந்த உரையே முதன்முதலாக அச்சேறியதும், அவ்வகையில் பொது மக்களைச் சென்றடைந்ததும், மீண்டும் மீண்டும் பதிப்புகள் பெற்று திருக்குறளின் செம்பதிப்புப் போல ஏற்றுக் கொள்ளப்பட்டதும் ஆகும்.
இன்றும் கூட, ஒரு குறிப்பிட்ட திருக்குறள் எந்தப் பாலில் (அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்), எந்த இயலில், எந்த அதிகாரத்தில், எந்த வரிசையில் வருகிறது என்பதைக் குறிப்பதற்கு, திருக்குறளுக்கு முதன்முதல் எழுதப்பட்ட மணக்குடவர் உரையில் வரும் வரிசை முறை பின்பற்றப்படவில்லை; மாறாக, பரிமேலழகரின் வரிசைமுறையே பின்பற்றப்படுகின்றது. இந்த வகையில் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற விதத்தில் ஒரு குறிப்பிட்ட குறளின் இடத்தைத் துல்லியமாகக் கணிக்க பரிமேலழகர் வரிசை முறையே பயன்படுத்தப்படுகிறது. இதுவும் பரிமேலழகர் உரை சிறப்படைய முக்கிய காரணம் ஆயிற்று.
பரிமேலழகரின் குறள் வைப்பு முறை ஆங்காங்கே சரியாக அமையவில்லை என்று குறை காண்போரும் கூட, தாம் அளிக்கின்ற புதிய வரிசை முறையை வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காகப் பரிமேலழகரின் குறள் வரிசை முறையையும் இணைத்தே வழங்குகின்றனர்.
அதுபோலவே, திருக்குறளில் வருகின்ற இயல்களின் பெயர்கள் பரிமேலழகர் அமைப்பில் சரியாக அமையவில்லை என்று குறை கண்டு, அந்த இயல்களுக்குப் புதிய பெயர்கள் தருவோரும் பரிமேலழகர் தந்த பெயர்களையும் அருகே குறிக்கவே செய்கின்றனர். இவ்வாறு, பரிமேலழகரின் உரையையும் குறள் அமைப்பையும் ஒப்பிட்டு நோக்குவதற்கு வழி செய்கின்றனர்.
மேற்கூறிய அனைத்தும் பரிமேலழகரின் உரை சிறப்படைந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆகும். சிலர் "பரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது" என்பதோடு, "பரிமேலழகரின்றி வள்ளுவம் இல்லை" என்றுகூடக் கூறுவதிலிருந்து (இந்திரா பார்த்தசாரதி)[6] இந்த உரை எத்துணை உயர்வாகக் கருதப்பட்டு வந்துள்ளது என்பதை நன்கு அறியலாம்.
பரிமேலழகர் உரை பற்றிய விமரிசனங்கள்
தொகு1840இல் முதன்முதலாக பரிமேலழகரின் திருக்குறள் உரை அச்சேறியது. அதிலிருந்து சுமார் நூறாண்டுகளாக அந்த உரையே மீண்டும் மீண்டும் பதிக்கப்பட்டது. திருக்குறளுக்கு முதன்முதல் உரை எழுதிய மணக்குடவர் உரை முழுவதும் 1925இல் தான் முதன்முறையாக அச்சிடப்பட்டது.
பரிமேலழகர் உரையை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்னும் நிலையிலிருந்து மாறி, திருக்குறளுக்கு அணுக்க உரை காண வேண்டும் என்னும் உந்துதலும் ஆய்வுலகில் இக்கால கட்டத்தில் எழுந்துள்ளது. அரசஞ்சண்முகனார் 1921இல் எழுதிய முதற்குறள் விருத்தி என்னும் நூல் இதற்குச் சான்றுபகர்கிறது.
பரிமேலழகர் உரைத்திறனைக் கண்டு ஈர்க்கப்பட்டோர் சிலர்; திருக்குறள் வடமொழி சார்ந்து இயற்றப்பட்ட நூலே என்ற எண்ணத்தில் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும் நோக்குடன் பரிமேலழகர்பால் பற்றுக்கொண்டோர் வேறுசிலர் என்ற நிலை 1920களில் எழுந்தது.
இப்பின்னணியில்தான் தமிழ் எழுச்சி உருவாகி, பரிமேலழகர் உரைக்கு மாற்றாக மணக்குடவர் உரையை அச்சிட்டுக் கொண்டுவர வேண்டும் என்னும் உந்துதல் எழுந்தது. செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் முதன்முதல் மணக்குடவர் உரையில் ஒரு பகுதியாகிய அறத்துப்பால் உரையை வெளியிட்டார். இந்த உரை 1917இல் வெளிவந்தது. 1925இல் மணக்குடவர் உரை முழுவதையும் கா. பொன்னுசாமி நாட்டார் வெளியிட்டார்.
பரிமேலழகரை உயர்த்தி திருக்குறளைத் தாழ்த்தும் எண்ணம் சிலர் கொண்டிருந்ததால் அதற்கு எதிர்வினையாக பரிமேலழகரின் உரைக்கு எதிர்ப்பு எழுந்து, அவ்வுரையின் நிறைகுறைகளை ஆராயும் போக்கு தோன்றியதோடு, தனித்தமிழ் உணர்வும் கால்கொள்ளத் தொடங்கியது.
திராவிட இயக்கமும் தனித் தமிழ் இயக்கமும்
தொகுபரிமேலழகரின் உரை சிறந்த இலக்கிய, இலக்கண நுட்பங்களைக் கொண்டிருந்ததை அறிஞர்கள் ஏற்றுக்கொண்டாலும், சில அறிஞர்கள் பரிமேலழகர் உரையில் அடங்கியிருந்த கருத்தியல் முற்கோள்களையும், பரிமேலழகர் தமது கருத்தியலை வள்ளுவர்மீது வலிந்து திணித்ததையும் கேள்விக்கு உள்ளாக்கினார்கள்.
இவ்வாறு பரிமேலழகரின் திருக்குறள் உரை கேள்விக்கு உட்படுத்தப்பட்டதின் சில அம்சங்கள் கீழ்வருவன:
- பரிமேலழகர் திருக்குறளைத் தமிழ்ப் பண்பாட்டு நூலாகக் கருதாமல், அதன்மீது ஆரியப் பண்பாட்டையும் கருத்தியலையும் திணித்தார் என்னும் குற்றச்சாட்டு. முப்பால் என்னும் பெயர் கொண்ட திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பால்களை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தாலும், அது "வீடு" பற்றியும் பேசுகிறது என்னும் கருத்தியல்.
- வள்ளுவர் கூறுகின்ற அந்த நான்கு உறுதிப்பொருள்களும் ஆரியப் பண்பாட்டு விளக்கமான தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நான்கு புருடார்த்தங்களின் தமிழாக்கமே என்றும், வள்ளுவர் மனுநீதி சாத்திரத்தைத் தான் தமிழில் தருகிறார் என்றும் ஒரு கருத்தியலைப் பரிமேலழகர் திருக்குறளுக்குள் புகுத்தினார் என்ற விமரிசனம் எழுந்தது.
- வள்ளுவர் நால்வகை வர்ணங்களையோ, அந்தந்த வர்ணத்தாருக்கு உரிய சிறப்பு ஒழுக்கத்தையோ பற்றிப் பேசாமல் அனைத்து மனிதருக்கும் பொதுவான அறநெறியை உரைத்திருக்க, பரிமேலழகர் தமது உரையில் வள்ளுவர் வர்ணாசிரம முறையை ஆதரிப்பதாகக் காட்டுகிறார் என்னும் விமரிசனமும் எழுந்தது.
- எனவே, பரிமேலழகர் உரையில் அடங்கியிருக்கின்ற ஆரியக் கருத்தியலை மறுத்து, தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப திருக்குறளுக்கு விளக்கம் தர வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.
- ஆரிய எதிர்ப்பும் கடவுள் மறுப்புச் சிந்தனைகளும் வேர்விட்டு வந்த காலத்தில் - திராவிட இயக்கத் தந்தை பெரியார் திருக்குறளுக்கு ஏற்றம் தந்து, அதற்கான முதல் மாநாடும் நடத்தி, அதனைப் பொது மக்களிடையே கொண்டுசெல்லத் தம் தொண்டர்களை ஆற்றுப்படுத்திய காலத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு திருக்குறள் உரை வெளிவந்தது. அதை எழுதியவர் புலவர் குழந்தை. அந்த உரையின் பெயர் "திருக்குறள் புலவர் குழந்தை உரை" என்பதாகும். அது 1949இல் வெளியானது.[7]
- திருக்குறள் புலவர் குழந்தை உரை திருவள்ளுவரை ஒரு கடவுள் மறுப்பாளராகக் காட்டியது. மேலும், திருக்குறளில் ஆரியக் கருத்துகளுக்கு இடமில்லை என்பதும், ஆரியக் கருத்துகளுக்கு எதிர்ப்பான கருத்துகளே இடம்பெற்றுள்ளன என்பதும் இந்நூலின் கருதுகோள்கள் ஆகும். இதைத் தொடர்ந்து மேலும் பல திராவிட இயக்கச் சார்புரைகள் வெளிவந்தன. அவற்றிற்குக் குழந்தை உரை வழிகாட்டியாக அமைந்தது.[8]
பரிமேலழகர் பிற்கால உரையாசிரியர்களுக்கு வழிகாட்டி
தொகுஇலக்கியம், இலக்கணம், சமய நூல்கள் போன்றவற்றிற்கு உரை எழுதும் மரபு இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்துள்ளது. உபநிடதங்களுக்கும் பிரம்மசூத்திரத்திற்கும் சங்கராச்சாரியார் எழுதிய உரைகள், பகவத் கீதைக்கு காந்தியடிகள், அரவிந்தர் போன்றோர் எழுதிய உரைகள் அறிஞர்களின் பாராட்டுதலைப் பெற்றவை ஆகும். அதுபோலவே, திருக்குறள் அறிவு மக்களிடையே பரவுவதற்கு பரிமேலழகர் உரை வழிவகுத்தது என்பதில் ஐயமில்லை.
பரிமேலழகர் தாம் வாழ்ந்த 13ஆம் நூற்றாண்டு சிந்தனையையும் கருத்தியலையும் தமது திருக்குறள் உரையில் எண்பிக்கின்றார் என்றால், அதை இனம் கண்டு எடுத்துரைப்பது இக்கால ஆய்வியலாளர்களின் பொறுப்பு என்பதையும் மறுத்தலாகாது. ஆனால், இலக்கிய உரை வரலாற்றில் பரிமேலழகர் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகின்றார் என்பதையும் மறுப்பதற்கில்லை.
திருக்குறள் பல சமய உண்மைகளைத் தன்னுள் கொண்டுள்ளது என்போரும், சமய நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என்போரும், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டுள்ளது என்போரும் அதற்கு உரை வகுத்துள்ளனர். திருக்குறள் மனித நேயத்தையே மையமாகக் கொண்டு மக்களுக்கு நன்னெறி புகட்டுகிறது என்னும் கருத்தியலோடு அதற்கு உரை எழுதியோரும் உண்டு.
இவர்களுக்கும் கூட பரிமேலழகர் வழிகாட்டியிருக்கின்றார். அதாவது, திருக்குறளைப் பால், இயல், அதிகாரம், குறள் வரிசை அமைப்பு என்று பிரித்துக் காண்பதிலும், ஒவ்வொரு பிரிவும் பிற பிரிவுகளோடு எவ்வாறு தொடர்புகொண்டுள்ளது என்பதைக் காட்டுவதிலும், நூல் முழுவதும் எச்செய்தியை வழங்குகிறது என்று விளக்குவதிலும் உரையாசிரியர் ஆற்றும் பங்கு மிகப் பெரிது.
மேலும், "இதுவே திருவள்ளுவர் கூறவந்த கருத்து" என்று எடுத்துக் கூறுவதிலும் உரையாசிரியர் பெரும் பங்கு ஆற்றுகின்றார்.
திருக்குறள் தோன்றி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வாழ்கின்ற மக்களுக்கு அந்நூல் பொருளுடைத்ததே என்று அதனை விளக்கியுரைக்கும் செயல் இன்றும் தொடர்கிறது. தமிழ் மக்களின் வாழ்வியலை வள்ளுவம் எவ்வாறு காட்டுகிறது என்பதை எடுத்துரைக்கும் பெரும் பொறுப்பு உரையாசிரியர்களைச் சார்ந்தது. எனவே, வெவ்வேறு வகைகளில் குறளின் செய்தியை இன்றைய மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை ஆற்றுகின்ற உரையாசிரியர்களுக்கு பரிமேலழகர் தலைசிறந்த முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கிறார்[9].
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 46.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑
திருந்திய தமிழில் தெய்வப் புலமை
அருந்திறல் வள்ளுவன் ஆய்ந்து தன் வாக்கால்
அறம் பொருள் இன்பம் வீடு என நான்கின்
திறம் தெரிந்து உரைத்த செவ்வி முப்பாலுக்கு
ஓருரை இன்றி ஒன்பது சென்றும்
ஐயுறவு ஆக நையுறு காலை
வள்ளுவன் மீளவும் வந்து உதித்து உலகோர்க்கு
உள்ளிய பொருளை உரைத்தனன் என்ன
எழுத்து முதல இலக்கண வகையும்
வழுத்து வேதாகம வகையதன் பயனும்
தங்கிய நூற்பா தமிழ்மனு நூலிற்கு
இதுவே உரை என யாவரும் வியப்பப்
பொழிப்பு அகலத்தொடு நுட்ப எச்ச
விழுப்பொருள் தோன்ற விரித்து இனிது உரைத்தனன்
வடநூல் துறையும் தென் திசைத் தமிழும்
விதி முறை பயின்ற நெறி அறி புலவன்
அன்பு அருள் நாண் ஒப்புரவு கண்ணோட்டம்
நன்று அறி வாய்மை நல் தவமுடையோன்
இத்தகை அன்றி ஈசனது அருளால்
உய்த்து உணர்வு உடைய ஓர் உண்மையாளன்
பரிமேலழகன் எனப் பெயர் படைத்துத்
தரைமேல் உதித்த தகைமையோனே. - ↑ இது ஒரு வகைப் புகழுரை. உண்மை அன்று
- ↑
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை - என்னும் 656 ஆம் கிருக்குறள் உரைக்குத் தரப்பட்டுள்ள விளக்கம். - ↑ திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005, பக். 67.
- ↑ பரிமேலழகர் உரை பற்றி இந்திரா பார்த்தசாரதி
- ↑ புலவர் அ.மு. குழந்தை, திருக்குறள் புலவர் குழந்தை உரை, சிவலிங்கப் பதிப்புக் கழகம், ஈரோடு, 1949]
- ↑ திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005, பக். 88.
- ↑ Norman Cutler, Interpreting Tirukkural: The Role of Commentary in the Creation of a Text, Journal of the American Oriental Society, Volume 112, Number 4 (October-December 1992), pp. 549-566.
தொடர் வரிசை எண் | திருக்குறளுக்கு முறை மாறிய உரை வகுத்த ஆசிரியர் | உரையாசிரியர் வாழ்ந்த காலம்/உரை வெளியான ஆண்டு | முறை மாறிய உரையின் தன்மை |
---|---|---|---|
0 | மணக்குடவர் | பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10ஆம் நூற்றாண்டு | மணக்குடவர் உரையில் அமைந்த திருக்குறள் மூலப் பதிவே முதற் பதிவு என்பதாலும், பரிமேலழகர் மணக்குடவருக்கு இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகள் பிற்பட்டவர் என்பதாலும், திருக்குறளில் காணும் பால், இயல், அதிகாரம், குறள்கள் போன்றவற்றிலான வைப்பு முறைகளை மணக்குடவர் அவர்களின் உரையை அடிப்படையாகக் கொண்டு காண்பதுதான் முறை |
1 | காலிங்கர் | பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு | முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 171. |
2 | பரிதியார் | பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு | முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 20. |
3 | பரிப்பெருமாள் | பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு | முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 16. |
4 | பரிமேலழகர் | பழைய உரையாசிரியர் - பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு | முப்பால் பிரிவை ஏற்கின்றார். ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து பல இடங்களில் வேறுபடுகின்றார். மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 120. |
5 | சுகாத்தியர் | T.M. Scott என்ற ஆங்கில நாட்டு அறிஞர்; தம் பெயரை "சுகாத்தியர்" என்று தமிழ்ப்படுத்திக் கொண்டார் - உரை வெளியீடு: 1889: "திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருதுரயட்டவணையும் பொழிப்புரயும்" | திருக்குறளின் முப்பால்களின் பெயர்களை மாற்றினார். அறத்துப்பாலிலுள்ள பாயிரத்தைத் தனியே பிரித்து அப்பாயிரத்துக்கு "நூன்முகம்" என்று பெயரிட்டு, அந்தப் பாயிரத்தில் வரும் அதிகாரப் பெயர்களையும் மாற்றியமைத்தார். ஒவ்வொரு பாலையும் மூன்று ஆண்மைகளாகவும், ஒவ்வோர் ஆண்மையையும் மூன்று இயல்களாகவும், ஒவ்வோர் இயலையும் மூன்று உடைமைகளாகவும் பிரித்தார். எதுகை மோனை அமைவுகளில் தாம் கருதும் அமைவு கருதிப் பெரும் மாற்றங்களைச் செய்தார். அவரே புதுப்புதுக் குறள்களை உருவாக்குவதுபோல் தெரிகிறது. |
6 | வ. உ. சிதம்பரனார் | உரை வெளியீடு: 1935: "திருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையுடன்" | திருக்குறளில் வரும் முதல் மூன்று அதிகாரங்களை இடைச்செருகல் என்று கருதுகிறார். எனவே, அப்பகுதியை "இடைப்பாயிரம்" என்கிறார். அறத்துப்பால் என்பதை அறப்பால் என்று மாற்றுகிறார். காமத்துப்பாலை இன்பப்பால் என்கிறார். அறத்துப்பாலில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திருக்குறள் பாடத்தைத் திருத்தியுள்ளார். சில வேளைகளில் பரிமேலழகருக்கு முற்பட்ட பழைய உரையாசிரியர்களைப் பின்பற்றி இத்திருத்தங்களைச் செய்துள்ளார். |
7 | திரு. வி. கலியாணசுந்தரனார் | உரை வெளியீடு: 1939: "திருக்குறள் விரிவுரை - பாயிரம்"; 1941: "திருக்குறள் விரிவுரை - அறத்துப்பால்-இல்லறவியல்" | இவர் செய்த முக்கிய மாற்றம், அதிகாரங்களில் வரும் குறள்களின் வைப்பு முறையை மாற்றியது ஆகும். பரிமேலழகரைப் போலவே திரு.வி.க.வும் தம் போக்கிற்கேற்ப குறட்பாக்களின் வைப்புமுறையை மாற்றியுள்ளார். அதற்கான காரணங்களையும் கூறுகின்றார். |
8 | மு. வரதராசன் | உரை வெளியீடு: 1948: "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்" | இவர் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலில் பால் அமைப்பு முறையைக் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்று வரிசை மாற்றி வைத்துள்ளார். ஆனால் 1949இல் மு. வரதராசனார் "திருக்குறள் தெளிவுரை" என்னும் நூலில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்றே வரிசைப்படுத்தியுள்ளார். உரை நூலில் மரபு மாறினால் குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தால் பழைய மரபை அப்படியே பயன்படுத்தியுள்ளார். |
9 | புலவர் அ.மு. குழந்தை | உரை வெளியீடு: 1949: "திருக்குறள் குழந்தையுரை" | பரிமேலழகரின் வைதிக உரைக்கு மாற்றாக, திராவிட இயக்கப் பின்னணியில் முதலில் வெளிவந்த உரை "திருக்குறள் புலவர் குழந்தையுரை" ஆகும். இவர் திருக்குறளுக்குப் பகுத்தறிவு நோக்கில் எளிமையாகப் புரியும் வகையில் உரை வழங்குவதையே முதன்மை நோக்காகக் கொண்டுள்ளார். எனவே, இயல், அதிகாரப் பகுப்பு போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தவில்லை; என்றாலும் நடைமுறைக்கு ஏற்ப அதிகார வைப்பு முறையில் சில மாற்றங்களைச் செய்துகொள்கின்றார். |
10 | ரா.ந. கல்யாணசுந்தரம் | உரை வெளியீடு: 1955: "தொகுப்புத் திருக்குறள் (மூலமும் உரையும்)" | இவரது உரை நூலில், திருக்குறளில் வரும் இறுதிச் சீர்களின் அகரவரிசையில் குறள்களை மாற்றி அமைத்து, குறட்பாக்களுக்குப் பரிமேலழகரின் உரையைத் தழுவி உரைகண்டுள்ளார். நினைவாற்றல் பயிற்சிக்கு இது பெரும் துணையாகும். இது முறைமாறிய அமைப்பு ஆயினும் பயனுள்ள ஒன்று. |
11 | டாக்டர் தே. ஆண்டியப்பன் | உரை வெளியீடு: 1978: "குறள் கண்ட நாடும் வீடும்" | இந்நூலில் இவர் பொருட்பாலில் தொடங்கி, 1330 குறள்களையும் அவற்றின் அதிகார உள்ளடக்கத்தைச் சிதைக்காமல், அதிகாரங்களை மாற்றி, நாடும் வீடும் என்பதற்குள் அடக்கி விடுகின்றார். இந்நூல் ஓர் உரைத்தொகுப்பு விளக்க ஆய்வுநூல் என்னும் முறையில் அமைகின்றது. |
12 | கு. ச. ஆனந்தன் | உரை வெளியீடு: 1986: "திருக்குறள் உண்மைப் பொருள்" | இவர் தமது திருக்குறள் உண்மைப் பொருள் என்னும் நூலில், ஒரு புதிய பகுப்பு முறையை உருவாக்கிக் கொண்டு, அறத்துப்பாலையும் பொருட்பாலையும் ஒன்றாக்கி 1080 குறள்களையும் தாம் விரும்பும் வகையில் மாற்றியமைத்து, ஒரு புதிய பார்வையில் தருகின்றார். இவர் பால், இயல், அதிகாரம், அதிகாரத்தில் வரும் குறள்கள் என்னும் அனைத்தையும் மாற்றித் தாமே ஒரு புதுப் பகுப்பை உருவாக்கிக்கொண்டுள்ளார். 108 அதிகாரங்களை 115 தலைப்புகளில் அடக்கியுள்ளார். ஒரு தலைப்பில் ஒன்றுமுதல் 23 வரை குறட்பாக்கள் உள்ளடக்கமாகியுள்ளன. காமத்துப்பாலில் வரும் குறட்பாக்களை ஒரு நாடகப் போக்கில் மாற்றி அமைத்து உரை எழுதி தனி நூலாக 1989இல் "மலரினும் மெல்லிது காமம்" என்னும் பெயரில் வெளியிட்டார். இவருடைய படைப்பை உரைநூல் என்பதைவிட ஆய்வுநூல் எனலாம். |
13 | கவிரத்தின நலங்கிள்ளி | உரை வெளியீடு: 1990: "பொதுமறை அமுது" | இவர் இந்நூலில் திருக்குறள் அதிகார முறையில் சில முக்கிய மாற்றங்கள் செய்துள்ளார். அதற்கான காரணங்களையும் காட்டுகின்றார். |
14 | டாக்டர் ஜனகாசுந்தரம் | உரை வெளியீடு: 1995: "திருக்குறள் தொகுப்புரை" | இந்நூலில் இவர் இறுதிச் சீர் அடிப்படையில் திருக்குறளுக்கு உரைகண்டுள்ளார். குறள் வரும் அதிகார எண், அந்த அதிகாரத்தில் குறள் பெரும் வரிசை எண் போன்றவை தரப்படவில்லை. குறளின் எண் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது. |
15 | சாலமன் பாப்பையா | உரை வெளியீடு: 1995: "திருக்குறள் - உரையுடன்" | இவர் திருக்குறள் வைப்பு முறையில் பல மாற்றங்கள் செய்து தம் உரை நூலை வெளியிட்டார். பால், இயல் என்னும் பிரிவுகளை விளக்கி, 133 அதிகாரங்களையும் ஏழு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். களவியலில் வரும் சில அதிகாரங்களைத் திருமண வாழ்க்கையில் வருமாறு இணைக்கிறார். திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை சமுதாயம் என்னும் பிரிவின்கீழ் கொண்டுவருகின்றார். |
16 | ஆரூர் தாஸ் | உரை வெளியீடு: 2000: "அய்யன் திருக்குறள் அகரவரிசைக் குறள் அகராதி" | இவர் வெளியிட்ட குறள் அகராதி நூலில் 1330 குறட்பாக்களையும் முதல் சீர்களின் அகர வரிசையில் தொகுத்து, அக்குறள்களுக்கு உரை வரைந்துள்ளார். குறள் எண்ணுக்குப் பரிமேலழகர் முறை வைப்பையே பயன்படுத்துகிறார். முறை மாறிய உரை ஆயினும் பயன் கருதிய மாற்றம் இது. |
17 | இராஜகாந்தீபன் | உரை வெளியீடு: 2000: "ஆளவும் வாழவும்" | இவர் வெளியிட்ட நூல் மரபு சார் உரை நூல் அல்ல என்றாலும், இவர் புதுக்கவிதை நடையில் தந்துள்ள விளக்கங்கள் பல குறள்களுக்கு விளக்கங்களாகவும் அமைந்துள்ளன. இவர் திருக்குறளை ஓர் அரசியல் நூலாகக் கொண்டு, அதில் காமத்துப்பாலுக்கு இடம் இல்லை என்கிறார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால்களில் வரும் 108 அதிகாரங்களையும் 38 பெயர்களாலான பகுப்புகளுள் அடக்க முயன்றுள்ளார். இது திருக்குறளுக்கு முற்றிலும் புதிய வகையிலான முறை வைப்பு. |
18 | புலவர் குடந்தையான் | உரை வெளியீடு: 2001: "திருக்குறள் ஒரு பகுத்தறிவுப் பார்வை" | இவர் வெளியிட்ட திருக்குறள் உரை நூலில் பால் வைப்பு முறை மாற்றங்களும் அதிகார வைப்பு முறை மாற்றங்களும் ஒரு சில குறட்பா மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. மு. வரதராசனைப் போல் இவரும் காமத்துப்பாலில் தொடங்குகின்றார். அதன் பின் பொருட்பால் வருகிறது. இதில் 58 அதிகாரங்களை மட்டுமே கொண்டு, மீதமுள்ள 12 அதிகாரங்களையும் அறத்துப்பாலில் சேர்த்து அறத்துப்பாலை 50 அதிகாரங்களாகக் கொள்கிறார். இவர் அதிகார வைப்பு முறையில் தமது பார்வைக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்துள்ளார். ஆனால், அதிகாரப் பெயர்களை மாற்றவில்லை, குறளில் வரும் சொற்களையும் மாற்றவில்லை. |
19 | அ.மா. சாமி | உரை வெளியீடு: 2003: "திருக்குறள் செம்பதிப்பு (கருத்துரை)" | கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் திருக்குறள் பல முறை சிதைக்கப்பட்டது என்றும், எனவே "செம்பதிப்பு" ஒன்று தேவை என்றும் கருதி, அறிஞர்கள் ஒன்று கூடி அததகைய படைப்பை ஆக்காத நிலையில் தானாகவே அந்த முயற்சியில் இறங்கியதாக இவர் கூறுகிறார். தமது உரைக்கு "திருக்குறள் செம்பதிப்பு" என்றே பெயர் இட்டுள்ளார். பழைய உரைகாரர்களுள் முதல்வராகிய மணக்குடவரின் பாடத்தை மிகுதியாக எடுத்துக்கொண்டதாகக் கூறுகின்றார். அதிகாரங்களை மாற்றியுள்ளார். குறள்களில் சில சொல் மாற்றங்களையும் செய்துள்ளார். அதற்கான காரணங்கள் தரப்படவில்லை. |
20 | க.ப. அறவாணன் | உரை வெளியீடு: 2006: "திருவள்ளுவம்" | இவர் திருக்குறள் முழுமைக்கும் "கருத்துவழிப் பகுப்பு முறை"யில் தெளிவுரை எழுதியுள்ளார். காமத்துப்பால் அதிகார வரிசை மாற்றப்படவில்லை. ஆனால் "இக்காலத் தமிழ் வாசகர் தேவையை முன்னிறுத்தி" அறப்பாலிலும் பொருட்பாலிலும் அதிகார வரிசையை மாற்றியுள்ளார். திருக்குறள் முழுமையையும் 16 இயல்களாக முறைப்படுத்துகின்றார். |