சூரிக உபநிடதம்

சூரிக உபநிடதம் என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 33 வது உபநிஷத்து. உபநிடத வகைகளில் இது யோக உபநிடதங்கள் என்ற பகுப்பைச்சேர்ந்தது.அறிவு என்ற கத்தியால் கருமத்தளையை வெட்டி வீடு பெற வழி காட்டுவதால், இது 'கத்தி' என்ற பொருளுடைய 'சூரிக' என்ற பெயருடன் விளங்குகிறது.

முக்கிய கருத்து

தொகு

ஒரே ஒரு கருத்துதான், ஆனால் ஆழமாக உபதேசிக்கப்படும் கருத்து. யோகசித்தியில் நிலைபெற்று மீண்டும் பிறவாநிலையை அடைவதற்கு, கூர்மையான மனதைக் கொண்டு இடைவிடாது யோகத்தைப் பயிற்சி செய்து கீழிருந்து மேலாக ஒவ்வொரு மர்மஸ்தானத்திலும் பிராண சக்தியை விடுவிக்கவேண்டும். கழுத்துப் பக்கத்தில் சேரும் நூற்றொரு நாடிகளையும் அடைந்து, அவற்றின் மத்தியில் உள்ள இடை, பிங்களை, சுஷும்னை முதலிய நாடிகளைக் காண்பவனே ரகசியமறிந்தவனாவன். ஜாதி மலருடன் சேர்ந்த எண்ணெய் எப்படி அதன் மணத்தை அடைகிறதோ அப்படியே நல்ல எண்ணங்களாலும் தீய எண்ணங்களாலும் அந்த நாடி மணமுடையதாகிறது. இவ்விதம் யோகத்தை உணர்ந்தவன் கடுமையான பிராணாயாமத்தினாலும் ஓம்கார தியானத்தினாலும் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுகிறான்.

பொன்மொழி

தொகு

சித்தத்தை வென்றவன் சந்தடியில்லாத இடத்தில் வீற்றிருந்து பற்றற்றவனாய் தத்துவ யோகத்தை உணர்ந்து, ஆசையற்றவனாய் மெதுவாக, மெதுவாக, ஒரு எரியும் விளக்கு எரிந்துவிட்டு எப்படி ஒடுங்குகிறதோ அப்படி ஒடுங்கவேண்டும்.

துணைநூல்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிக_உபநிடதம்&oldid=4054401" இலிருந்து மீள்விக்கப்பட்டது