சூழல்சார் உளவியல்

சூழல்சார் உளவியல் (Environmental psychology) என்பது, மனிதனுக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய பல்துறைச் சார்பு கொண்ட ஒரு துறையாகும்.[1] இத் துறையில், சூழல் என்பது இயற்கைச் சூழல், சமுதாயச் சூழல், கட்டிடச் சூழல், கற்றற்சூழல், தகவல்சார் சூழல் போன்றவற்றை உள்ளடக்கும். உலகம் தழுவிய அல்லது ஒரு குறிப்பிட்ட இடம் சார்ந்து அமையக்கூடிய, மனிதனுக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்புகளைச் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க முயலும்போது, மனித இயல்புகளைக் குறித்த ஒரு "மாதிரி" தேவைப்படுகிறது. இம் "மாதிரி" மனிதனது நடத்தைகள் ஆக்கத்தன்மை கொண்டனவாகவும், நன்னடத்தைகளின் அடிப்படையில் அமைந்தனவாகவும் உருவாவதற்கான சூழலின் தன்மைகளை எதிர்வு கூறத்தக்க வகையிலும் அமைதல் வேண்டும்.

இவ்வாறான ஒரு மாதிரியைப் பயன்படுத்தி, மனித நடத்தைகளை மேம்படுத்தும் வகையில் சூழல்களை வடிவமைக்கவும், அதனை மேலாண்மை செய்யவும், பேணிப் பாதுகாக்க அல்லது மீள்விக்கவும் கூடியதாக இருக்கும். அத்துடன், இத்தகைய நிலைமைகள் இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்வு கூறவும், பிரச்சினைக்குரிய நிலைமைகளை அறிந்து கொள்ளவும் இந்த "மாதிரி" பயன்படும். சூழல்சார் உளவியல் துறையில் இத்தகைய "மனித இயல்பு" பற்றிய ஒரு மாதிரியை உருவாக்கும்போது, இத்துறைக்கே இயல்பாக அமைந்த பல்துறை நோக்கு பேணப்படுகின்றது.

இத்துறையின் ஆய்வுப் பரப்பு பல்வேறு தன்மைகளைக் கொண்டு பரந்து விரிந்த விடயங்களை உள்ளடக்குகிறது. மனிதனின் செயல்பாடுகளின்மீது சூழல் அழுத்தங்களின் தாக்கம், நலத்தை மீள்விக்கக்கூடிய சூழல்களின் இயல்புகள், மனிதத் தகவல் நெறியாக்கம், சிக்கலான நிலைமைகளில் வழிகாணல், பொதுச் சொத்து வழங்களின் மேலாண்மை போன்ற விடயங்கள் இத்துறையில் ஆய்வுப் பரப்புக்குள் அடங்குவன.

சூழல் உளவியல் என்ற பெயரே பரவலாக அறியப்பட்டும், இத் துறை பற்றிய முழுமையான விளக்கத்தைத் தருவதாகவும் இருப்பினும், மனிதக் காரணிகள் அறிவியல், அறிதிறன் பணிச்சூழலியல், சூழல்சார் சமூக அறிவியல், கட்டிடக்கலைசார் உளவியல், சமூகக் கட்டிடக்கலை, நடத்தைப் புவியியல், சூழல் நடத்தையியல், மனித-சூழல் ஆய்வுகள், சூழற் சமூகவியல், சமூகச் சூழலியல், சூழல் வடிவமைப்பு ஆய்வு போன்ற பெயர்களிலும் இது அழைக்கப்படுவது உண்டு.

மேற்கோள்கள்

தொகு
  1. "Environment | Psychology Today". www.psychologytoday.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழல்சார்_உளவியல்&oldid=4042343" இலிருந்து மீள்விக்கப்பட்டது