செட்டிமல்லன்பட்டி துர்க்கை அம்மன் கோயில்

செட்டிமல்லன்பட்டி துர்க்கை அம்மன் கோயில்

செட்டிமல்லன்பட்டி துர்க்கை அம்மன்

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில், திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 26 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தெய்வச்செயல்புரம் எனும் கிராமத்திலிருந்து மீனாட்சிபட்டி எனும் கிராமத்திற்குச் செல்லும் வழியில் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செட்டிமல்லன்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது குலதெய்வமாக வணங்கும் கோயிலாக இங்குள்ள துர்க்கை அம்மன் கோயில் இருக்கிறது.

கோயில் வரலாறு தொகு

கிராமங்களில் முந்தைய நூற்றாண்டில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித் தெருக்கள், தனிக் கோயில் என்று அமைக்கப்பட்டு இருக்கும். இப்படி இந்த ஊரில் வசித்து வந்த இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது வழிபாட்டுக்காக அமைத்துக் கொண்டதுதான் இந்த துர்க்கை அம்மன் கோயில். இந்த துர்க்கை அம்மன் கோயிலுக்கு என்று வரலாற்றுப்பூர்வமான தல வரலாறு எதுவும் இல்லை.

விழாக்கள் தொகு

இந்த துர்க்கை அம்மன் கோயிலில் வருடந்தோறும் மூன்று நாட்கள் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் செய்யப்பட்டு வந்தது. இந்த ஊரில் வசித்து வந்த இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தமாக இங்கிருந்து மும்பை, மதுரை, தேனி, தூத்துக்குடி, விக்கிரமசிங்கபுரம் எனும் பல ஊர்களுக்கு இடம் பெயர்ந்து விட்டதால் இந்த வருடாந்திர வழிபாடுகள் நின்று போய்விட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பிற ஊர்களில் இருக்கும் இந்த ஊரைச் சேர்ந்த இந்த சமூகத்தவர்களை தற்போது ஒருங்கிணைத்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சித்திரை மாதத்தில் கொடை விழா என்கிற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

(திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் நடக்கும் கோவில் விழாவை "கொடை விழா" என்று அழைக்கிறார்கள். இது முன்பு கோடை விழாவாக இருந்து பின்னாளில் கொடை விழாவாக மருவியிருக்கலாம்.)