செதுபா தீவு

மியான்மரின் தீவு

செதுபா தீவு (ஆங்கிலம் : Cheduba Island ) மனாங் தீவு என்றும் அழைக்கப்படுகிறது) இது வங்காள விரிகுடாவில் "ராம்ரீ தீவுக்கு" அருகில் உள்ள ஒரு தீவு ஆகும், இது மியான்மருக்கு சொந்தமானது. இதன் அதிகபட்ச நீளம் 33 கி.மீ, இது சுமார் 523 கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு நிலவரப்படி செதுபாவின் மக்கள் தொகை 63,761 ஆகும், இங்கு முக்கியமாக பர்மிய மற்றும் அரக்கானிய மக்கள் வசிக்கின்றனர். தீவின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பதாகும்.

நிலவியல் தொகு

செதுபா தீவு ராம்ரீ தீவின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து சுமார் 10 கி.மீ (6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது 18 ° 40 ′ மற்றும் 18 ° 56 ′ N. lat., மற்றும் 93 ° 31 ′ மற்றும் 93 ° 50 ′ E. இடையே அமைந்துள்ளது. தீவின் நிலப்பரப்பு சிதறிய மிதமான உயரங்களுடன் மிகவும் தட்டையானது. 205 மீட்டர் (673 அடி) உள்ள மிக உயரமான இடம் ஒன்று தீவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு மலைப்பாதையில் உள்ளது.

தீவைச் சுற்றியுள்ள ஒரு சாலையால் 5 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன: ஓவா, திட்பன், மனாங், புடாங்வே, சச்செட் மற்றும் மெய்ன்மாங்க்வே ஆகியன. வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள செதுபாவின் முக்கிய கிராமமான மனாங்கிற்கு மேற்கே ஒரு விமானநிலையம் உள்ளது. மனாங் அருகிலுள்ள ராம்ரீ தீவில் உள்ள கியுக்பியு கிராமம் நீராவிக் கப்பல் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான தாவரங்கள் வெப்பமண்டல மழைக்காடுகள்.[1] தீவில் நீராவி மற்றும் கந்தக புகைகளை வெளியிடும் மண் கூம்புகள் உள்ளன, அவற்றில் சில எரிமலையாகவும் உள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் நீரோட்டங்களும் உள்ளன.[2]

அருகிலுள்ள தீவுகள் தொகு

இத்தீவைச்சுற்றி ஏராளமான சிறு தீவுகள் அமைந்துள்ளன. தைக் கியுன் என்பது கிழக்கு கடற்கரையிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ள 1.4 கிமீ அகலம் கொண்ட சுற்று தீவு ஆகும். இயே கியுன் என்பது 6.8 கிமீ நீளமும், 2.4 கிமீ அகலமும் கொண்ட தீவு ஆகும், இது செதுபா தீவின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ளது, அதிலிருந்து 7.8 கிமீ தூரத்தில் அகலமான நீரிணைப்பால் பிரிக்கப்பட்ட ஏராளமான பாறைகள் உள்ளன.[3] ஆங் கியுன் என்பது இயே கியூனின் தெற்கு முனையிலிருந்து 1.8 கிமீ தொலைவில் அமைந்துள்ள 0.4 கிமீ நீளமுள்ள சிறிய தீவு ஆகும்.

அருகிலுள்ள பிற தீவுகள் தொகு

  • அங்குவான் 1 கிமீ நீளமும் 0.4 கிமீ அகலமும் கொண்ட தீவு ஆகும், இது செதுபாவின் தெற்கு முனையின் தென்கிழக்கில் 33 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
  • நந்தா கியுன் சுமார் 2 கிமீ அகலம் கொண்ட சுற்று தீவாகும், இது பிரதான கடற்கரையிலிருந்து 36 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

செதுபா தீவு வங்காளத்திலிருந்து கடலோர வர்த்தக பாதையில் ஒரு நிறுத்தமாக இருந்தது, இதன் மூலம் இந்திய நாகரிகம் மியான்மருக்கு குடிபெயர்ந்தது.[2]

ஏப்ரல் 1762 இல் மியான்மரின் மேற்கு கடற்கரையில் 8.5 ரிக்டர் முதல் 9.0 ரிக்டர் அளவு வரை நிலநடுக்கம் ஏற்பட்டதாக வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன, மேலும் சுனாமியால் மியான்மர் மற்றும் வங்க தேசத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்திருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 1881 ஆம் ஆண்டில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தீவில் "பரந்த பாரிய தீப்பிழம்புகளை" வெளியேற்றியது. 1780 களில், பர்மியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், சேதுபா அரக்கன் மாகாணமாக மாறியது. சேதுபா 1824 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. 1826 ஆம் ஆண்டில் யாந்தபு ஒப்பந்தத்தால் பர்மியர்களுடன் இணைந்தது. இந்த தீவு மற்றும் இப்பகுதியில் உள்ள பல தீவுகள், இரண்டாம் உலகப் போரின்போது சப்பானியர்களால் கைப்பற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. "Cheduba - MSN Encarta". encarta.msn.com. Archived from the original on 31 October 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-06-22.
  2. 2.0 2.1 "Cheduba Island -- Britannica Online Encyclopedia". www.britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2008-06-22.
  3. Prostar Sailing Directions 2005 India & Bay of Bengal. Enroute. National Geospatial-intelligence Agency (Feb 1, 2007). p. 169
"https://ta.wikipedia.org/w/index.php?title=செதுபா_தீவு&oldid=2868267" இலிருந்து மீள்விக்கப்பட்டது