செனகம்பியாக் கூட்டமைப்பு

செனகம்பியா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் செனகம்பியாக் கூட்டமைப்பு (Senegambia Confederation) என்பது 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், செனகலுக்கும், செனகலினால் ஏறத்தாழ எல்லாப் பக்கங்களிலும் சூழப்பட்ட கம்பியாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தளர்வான கூட்டமைப்பு ஆகும். இரண்டு நாடுகளுக்கும் இடையே 1981 டிசம்பர் 12ம் தேதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 1982 பெப்ரவரி 1ம் தேதி இக்கூட்டமைப்பு நிறுவப்பட்டது. இரண்டு நாடுகளுக்குமிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இக்கூட்டமைப்பு, ஒரு ஒன்றியமாவதை நோக்கி முன்னேற கம்பியா மறுத்ததனால், செனகலினால் 1989 செப்டெம்பர் 30ம் தேதி கலைக்கப்பட்டது.

செனகம்பியாக் கூட்டமைப்பு
Confédération de Sénégambie
1982–1989
செனகம்பியாஅமைவிடம்
மேற்கு ஆப்பிரிக்காவில் செனகம்பியாவின் அமைவிடம்.
  செனகல்      
தலைநகரம்டாக்கர்
பேசப்படும் மொழிகள்பிரெஞ்சு
ஆங்கிலம்
வோலோஃப்
சேரெர்
மாண்டின்கா
பூலானி
சோலா
அரசாங்கம்கூட்டமைப்பு
வரலாற்று சகாப்தம்பனிப்போர்க் காலம்
• ஒப்பந்தம் கைச்சாத்து
12 டிசம்பர் 1981
• தொடக்கம்
1 பெப்ரவரி 1982
• முடிவு
30 செப்டெம்பர் 1989
முந்தையது
பின்னையது
செனகல்
கம்பியா
செனகல்
கம்பியா

வரலாறு

தொகு

ஒருவரோடொருவர் போட்டியிட்டுக்கொண்டிருந்த பிரெஞ்சு, ஆங்கிலக் குடியேற்றவாத வல்லரசுகளே முதலில் ஒரு அரசியல் அலகாக செனகம்பியாவை உருவாக்கின. பிரான்சும், இங்கிலாந்தும் வணிகநிலைகளை உருவாக்கத் தொடங்கிய 16ம் நூற்றாண்டில் இரு நாடுகளுக்கும் இடையே போட்டி உருவானது. இருநாடுகளினதும் செல்வாக்குப் பகுதிகள் சில இடங்களில் ஒன்றொன்மேலொன்று கவிந்து காணப்பட்டாலும், பிரான்சின் வணிகம் செனகல் ஆறு, கப்-வேர்ட் ஆகிய பகுதிகளிலும், ஆங்கிலேயர் வணிகம் கம்பியா ஆற்றுப் பகுதியிலும் மையங்கொண்டிருந்தன.[1] ஐரோப்பாவுக்கும், இரண்டு நாடுகளினதும் அமெரிக்கக் குடியேற்றங்களுக்கும் இடையே இடைநிலையாக இருந்ததால், மேற்கு ஆப்பிரிக்கா வளர்ந்துவந்த இரு பேரரசுகளுக்கும் முக்கியமாக அமைந்தது. அத்துடன், இப்பகுதி அடிமை வணிகத்துக்கு அடிமைகளை வழங்கியதும் முக்கியமாக இருந்தது.

குடியேற்றவாதம் மேலும் இலாபம் தருவதாக வளர்ந்தபோது, சிறப்பாக, பதின்மூன்று குடியேற்றங்கள், நியூ பிரான்சு, கரிபியனில் கரும்புச் செய்கை என்பன உருவான பின்னர், மேற்கு ஆப்பிரிக்காவில் தமது செல்வாக்குப் பகுதிகளை வரையறுத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டின. 1500இலிருந்து 1758 வரை இரண்டு வல்லரசுகளும் தமது கடற்படைப் பலத்தைப் பயன்படுத்தி மற்றவரை இப்பகுதியில் இருந்து அகற்ற முயற்சிகளை மேற்கொண்டன. 1758ல், ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் நிகழ்ந்த காலத்தில், பிரித்தானியா செனகல் ஆற்றோரம் இருந்த பிரான்சின் வணிக நிலைகளைக் கைப்பற்றி முடிக்குரிய குடியேற்றநாடாக முதல் செனகம்பியாவை உருவாக்கியது.[1] வட அமெரிக்காவில் அமெரிக்கப் புரட்சிப் போர் வெடித்து, பிரித்தானியா அதில் ஈடுபட்டிருந்தபோது, பிரான்சு தனது பகுதிகளை மீளக் கைப்பற்றியதுடன் கம்பியப் பகுதியில் இருந்த பிரித்தானியரின் முக்கியமான நிலைகளையும் எரியூட்டியது. பிரித்தானியரின் தோல்வியையும், ஐக்கிய அமெரிக்காவின் உருவாக்கத்தையும் தொடர்ந்து 1783ல் செனகல் - கம்பியா ஒருங்கிணைப்பு முடிவுக்கு வந்தது.[1]

வெர்சாய் ஒப்பந்தம் (1783), பாரிசு ஒப்பந்தம் (1783) ஆகியவை கைச்சாத்திடப்பட்ட பின்னர், பிரான்சுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் ஒரு சமநிலை உருவானது. செயின்ட் லூயிசு, கோரீ, செனகல் ஆற்றுப் பகுதிகள் என்பன பிரான்சுக்கு வழங்கப்பட்டன. கம்பியாவைப் பிரித்தானியா தக்கவைத்துக்கொண்டது.[1] 1860களிலும் 70களிலும், இப்பகுதியை ஒன்றுபடுத்துவதற்காக நிலங்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு முன்மொழிவு குறித்து இரு நாடுகளும் சிந்திக்க ஆரம்பித்தன. இதன்படி கம்பியாவுக்காக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள இன்னொரு பகுதியை பிரித்தானியாவுக்கு வழங்க வேண்டும். ஆனாலும், இந்தப் பரிமாற்றம் முற்றுப்பெறவில்லை.[2] இப்பகுதி இரண்டு வெவ்வேறு போட்டி நாடுகளால் ஆளப்பட்ட போதிலும், 1889 வரை பிரான்சு, பிரித்தானியப் பகுதிகளிடையே எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. 1889ல் பிரான்சு தற்போதைய எல்லையை ஏற்றுக்கொண்டு தனது எல்லை வணிக நிலைகளை அகற்றியது.[2]

இந்த முடிவு 1960ல் விடுதலை பெற்ற செனகலுக்கும், 1965ல் விடுதலை பெற்ற கம்பியாவுக்கும் இடையே பெரிய பிரச்சினையை உருவாக்கியது. ஒரே பகுதியில், வெவ்வேறு பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட இரண்டு நாடுகளை, ஒரு நாடு இன்னொரு நாட்டினால் முற்றாகச் சூழப்பட்ட நிலையில் எவ்வாறு பராமரிப்பது என்பது முக்கிய பிரச்சினையாக இருந்தது.

எல்லை தொடர்பான பிரச்சினைகள்

தொகு

இரண்டு நாடுகளுக்குமே எல்லை நிலைமைகள், அவற்றின் பன்னாட்டுத் தொடர்புகளில் தனித்துவமான பிரச்சினைகளைக் கொடுத்தன. சிறப்பாக வணிகம், எல்லைப் பகுதிகளின் கட்டுப்பாடு போன்றவை சார்ந்த பிரச்சினைகள் முக்கியமானவை. இரு நாடுகளுக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சினைகளுள் ஒன்று இப்பகுதிகளூடாக வன்முறைகள் இலகுவாகப் பரவக்கூடிய வசதியாகும்.

1981ல் கம்பிய சனாதிபதியை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட சதிப் புரட்சி முயற்சி இந்தப் பயத்தை உண்மையாக்கியது.[3] மேற்கு நாடுகளுக்குச் சார்பான நிலையில் இருந்த செனகலுக்கு இது கவலை தரும் ஒன்றாக இருந்தது. கம்பியாவில் உள்ள பிரிவினைவாதிகளையோ அல்லது அங்குள்ள பிற அதிருப்திக் குழுக்களையோ பயன்படுத்தி அண்டை நாடுகள் செனகல் அரசை நிலைகுலையச் செய்ய முயலலாம் என செனகல் எண்ணியது. கானா, மாலி, கினியா, கினி-பிசாவு, லிபியா ஆகிய நாடுகளிலிருந்து செனகலுக்குக் குறிப்பான பயமுறுத்தல்கள் இருந்தன.[4]

விடுதலை பெற்ற காலத்திலிருந்து, பிரான்சிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வணிகத் தடைகளை செனகல் விதித்திருந்தது. அதேவேளை கம்பியாவில் எவ்வித வணிகத் தடைகளும் இருக்கவில்லை. இவ்வாறான எதிரெதிர் வணிகக் கொள்கைகள் செனகல் - கம்பியா எல்லைகளில் கள்ளச் சந்தைகளை உருவாக்கி மலிவான பொருட்களைச் செனகலுக்குள் கடத்திவர உதவியது.[5] செனகலிலிருந்து கம்பியா ஊடாக ஏற்றுமதிகளும் கள்ளச் சந்தையூடாக நடைபெற்றன. செனகல் அரசு தான் நிலக்கடலை பயிர் செய்வோரிடமிருந்து வாங்கும் நிலக்கடலைக்குத் தாமதமாகப் பணம் வழங்கும் நடைமுறை ஒன்றைப் பயன்படுத்தியது. இதன்படி பயிர் செய்வோர் தமது உற்பத்தியை அரசிடம் விற்கும்போது ஒரு துண்டு மட்டுமே பெறுவர். மூன்று மாதங்களுக்குப் பின் இதற்கான பணம் வழங்கப்படும். இதனால் செனகல் விவசாயிகள் தமது உற்பத்திகளை பஞ்சூலுக்கு எடுத்துச் சென்று கம்பிய அரசிடமிருந்து உடனடியாகப் பணம் பெற்றனர். 1990 அளவில், கம்பியாவின் நிலக்கடலைச் சந்தையின் 20% செனகலில் இருந்து கடத்திவரப்பட்டது.[6]

கூட்டமைப்பின் பிறப்பு

தொகு

செனகம்பியாக் கூட்டமைப்பு நடைமுறைத் தேவைகளுக்காக பாதுகாப்புக் காரணங்களை அடிப்படையாக வைத்து உருவானது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி செனகல் அரசு கம்பியாவில் ஏற்படக்கூடிய எழுச்சிகளினால் தனது நாட்டில் உறுதியற்ற நிலை உருவாகலாம் எனப் பயந்தது. கம்பியாவில் நடந்த சதிப்புரட்சி முயற்சி இந்தப் பயத்துக்கு வலுவூட்டியது. சதிப் புரட்சியை முறியடிக்க கம்பியாவின் வேண்டுகோளுக்கு இணங்க செனகலே தனது படைகளை அனுப்பவேண்டி இருந்தது.[3][7] இந்த நிகழ்வு இரு நாட்டுத் தலைவர்களும் இணைப்புக் குறித்துச் சிந்திக்க வழி வகுத்தது.

1960ல் இரு நாடுகளும், இந்த இணைப்புக்கான திட்டங்கள் குறித்தும் அதனால் விளையக்கூடிய பயன்கள் குறித்தும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஐக்கிய நாடுகளைக் கேட்டுக்கொண்டன.[8] இதன் அடிப்படையில் உருவான கூட்டமைப்பே அக்காலத்தில் ஆப்பிரிக்கக் கூட்டமைப்புக்களில் கூடிய காலமான எட்டு ஆண்டுகள் நிலைத்திருந்த கூட்டமைப்பு ஆகும்.

கூட்டமைப்பின் முடிவு

தொகு

இணைப்பு முயற்சிகளின்போது அதற்கான ஆதரவு அரசாங்கங்களிடமிருந்தும், சமூகத்தின் உயர் குடியினரிடமிருந்துமே கிடைத்தது. இரு நாடுகளினதும் மக்கள் இது குறித்து அக்கறை காட்டவில்லை.[9] அரசியல் உறுதிப்பாடு குறித்த அச்சம் இல்லாமல் போன பின்னர் இரு தரப்பினரும் தமது நிலைப்பாடுகளிலிருந்து பின்வாங்கத் தொடங்கினர். கம்பிய அரசும், மக்களும் தமது பலத்தையும், அடையாளத்தையும் செனகலிடம் இழக்கவேண்டி வரும் எனப் பயந்தனர்.[9] செனகம்பியா குறித்த பகுப்பாய்வில் இயூசும், லூயிசும் கூட்டமைப்புக்கள் தோல்வியடைவதற்கான பல காரணங்களைப் பட்டியல் இட்டுள்ளனர். இதே காரணங்களுக்காகவே செனகம்பியாக் கூட்டமைப்பும் தோல்வியடைந்தது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Richmond, Edmun B. (1993). "Senegambia and the Confederation: History, Expectations, and Disillusions". Journal of Third World Studies 10 (2): 172–194 [p. 176]. 
  2. 2.0 2.1 Richmond p. 177
  3. 3.0 3.1 Richmond p. 182
  4. Hughes, Arnold; Lewis, Janet (1995). "Beyond Francophonie?: The Senegambia Confederation in Retrospect". In Kirk-Greene, Anthony; Bach, Daniel (eds.). State and Society in Francophone Africa since Independence. Oxford, England: St. Martin's Press. p. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-12112-1.
  5. Richmond p. 185
  6. Richmond pp.185-6
  7. Hughes and Lewis p. 228
  8. Hughes and Lewis p. 229; Richmond p.178
  9. 9.0 9.1 Hughes and Lewis p. 236
  10. Hughes and Lewis p.239