செனகலின் வரலாறு

செனகலின் வரலாறு பொதுவாக, வரலாற்றுக்கு முந்திய காலம், குடியேற்றவாதத்தூகு முந்திய காலம், குடியேற்றவாதக் காலம், தற்காலம் எனப் பல காலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பழைய கற்காலம்

தொகு

மனிதர் வாழ்ந்ததற்கான மிகப் பழைய சான்று, தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஃபலமே (Falémé) பள்ளத்தாக்கில் கிடைத்துள்ளது.[1] தியடோர் மோனொட்,[2] 1938 இல் காப்-வேர்ட் தீவக்குறையில் பான் முனையில் கண்டுபிடித்த கைக் கோடரிகள் போன்ற தழும்பழி இயல்புகள் கொண்ட கற்கருவிகள் அல்லது தென்கிழக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெட்டுக் கத்திகள், கீழ் பழைய கற்காலத்தில் இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக அமைகின்றன.[3]

வரலாற்றுக்கு முந்திய காலம்

தொகு
 
செனகலில் உள்ள பெருங் கற்காலச் சின்னங்கள்

.

செனகலைப் பொறுத்தவரை வரலாற்றுக்கு முந்திய காலத்தை வரையறுப்பது சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. பொதுவாக இது பொதுவாக இது உலோகக் காலத்தில் இருந்து தொடங்குவதாகக் கொள்ளப்படுகின்றது. இதனால் இக்காலம் முதல் உலோக வேலை அறிமுகத்தில் இருந்து எழுத்தின் தோற்றம் வரையான காலப்பகுதியாகும்.

இராச்சியங்களும் பேரரசுகளும்

தொகு

தற்கால செனகல் ஐரோப்பிய வணிகர்களால் மேல் கினியா என்று அழைக்கப்பட்ட பெரிய பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. எழுத்து மூல ஆவணங்களும், பழைய கட்டிடங்கள் அல்லது அவற்றின் அழிபாடுகளும் இப்பகுதியில் இல்லாத நிலையில், நவீன காலத்தில் தொடக்க நூற்றாண்டுகளின் வரலாறு தொல்லியல் அகழ்வாய்வுகள் தொடக்ககாலப் புவியியலாளர்கள் பயணிகளின் எழுத்துக்கள், வாய்மொழி மரபுகளிலிருந்து பெறப்படும் தரவுகள் என்பவற்றையே அடிப்படையாகக் கொள்ளவேண்டி உள்ளது. இவ்வாறான சான்றுகளின் அடிப்படையில், வடக்கிலும், கிழக்கிலும் இருந்து பல அலைகளாக ஏற்பட்ட புலப் பெயர்வுகளாலேயே முதலில் செனகலில் மக்கள் குடியேற்றங்கள் ஏற்பட்டன. இறுதியாக வந்தோர் வொலொஃப், ஃபுலானி, செரெர் ஆகிய இனத்தவராவர். செனகம்பிய இடப்பெயர்கள், பைனுங்க், காசங்கா, பியாபாடா ஆகிய உறவுடைய குழுக்களுள் ஒன்றே இப்பகுதியில் முதலில் குடியேறி இருக்கக்கூடும் எனவும், இவர்களுடன், செனகல் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து கிபி முதலாம் ஆயிரவாண்டுக் காலத்தில் தெற்கு நோக்கி வந்த செரெர் இனத்தவரையும், கிழக்கில் இருந்து வந்த மாண்டே மொழிகளைப் பேசும் மக்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் ஆப்பிரிக்கான வரலாற்றாளர் டொனால்டு ஆர். ரைட் கருதுகின்றார்.[4] பாஃப்பொர்களின் வழிவந்தோர் எனக் கருதப்படக்கூடியோரை அல்மோராவிட் வம்சத்தைச் சேர்ந்த பேர்பர்கள் தெற்கு நோக்கித் தள்ளினர் எனலாம்.

ஐரோப்பியக் குடியேறிகள் வருவதற்கு முன்னர், சகாராப் பகுதியின் வரலாறு, குடியேற்றங்கள், கானாப் பேரரசு, மாலிப் பேரரசு, சோங்காய்ப் பேரரசு போன்ற பெரிய அரச அமைப்புக்களாக உருவாகும் தன்மையைக் காட்டின. இந்தப் பேரரசுகளின் மையம் இன்றைய மாலிக் குடியரசின் அட்சிப்பகுதிக்குள் அமைந்திருந்தன. எனவே தற்கால செனகல், இவற்றின் விளிம்புப் பகுதிகளிலேயே காணப்பட்டது. இவற்ருள் மிகப் பழையது கானாப் பேரரசு. இது முதலாம் ஆயிரவாண்டுக் காலத்தில் சோனின்கேயால் நிறுவப்பட்டிருக்கலாம். இப்பேரரசின் மக்களின் வாழ்வாதாரம் வேளாண்மையிலும், தங்கம், உப்பு, துணி ஆகியவற்றின் சகாரா ஊடான வணிகத்திலும்[5] தங்கியிருந்தது. இதன் செல்வாக்குப் பகுதி, மெதுவாக விரிவாகி செனகல், நைஜர் ஆகிய ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு இடைப்பட்ட பகுதியையும் உள்ளடக்கியது. இக்காலத்தில் இருந்த தெக்ரூர் இராச்சியம் கானாப் பேரரசுக்குக் கீழ்ப்பட்டிருந்தது.

கானாவும், தெக்ரூருமே இசுலாம்மயமாக்கத்துக்கு முன்னர் இப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குழுக்களாக இருந்தன. தெக்ரூரின் ஆட்சிப்பகுதி ஏறத்தாழத் தற்கால ஃபூட்டா தோரோவின் அளவுக்குச் சமமானது. 9 ஆம் நூற்றாண்டில் இது இருந்ததற்கு அரபு மொழி ஆவணங்களில் சான்றுகள் உள்ளன. கிழக்கில் இருந்து பெருமளவில் புலம்பெயர்ந்த புலானி இன மக்கள் செனகல் பள்ளத்தாக்கில் குடியேறியபோது இந்த அரசு தோற்றம் பெற்றிருக்கலாம்.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. Unless otherwise stated, the material in this part is based on Ndiouga Benga and on Mandiomé Thiam, "prehistory prehistory and history", in Atlas du Sénégal, op. cit., p. 74
  2. (பிரெஞ்சு) Théodore Monod, « Sur la découverte du Paléolithique ancien à Dakar », Bulletin du Comité d'études historiques et scientifiques de l'AOF, t. XXI, 1938, pp. 518–519
  3. (பிரெஞ்சு) Abdoulaye Camara et Bertrand Duboscq, La préhistoire dans le Sud-Est du Sénégal, Actes du 2e Colloque de Kédougou, 18–22 fév. 1985, Doc. du CRA du Musée de l'Homme (Paris), n° 11, 1987, pp. 19-48
  4. Wright, Donald (2010). The World and a Very Small Place in Africa: A History of Globalization in Niumi, the Gambia (3rd ed.). M.E. Sharpe. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0765624840.
  5. (பிரெஞ்சு) Mahamadou Maiga, Le bassin du fleuve Sénégal – De la traite négrière au développement sous-régional autocentré, Paris: L’Harmattan, 1995, p. 20.
  6. Hrbek, I. (1992). volume 3: Africa from the 7th to the 11th Century: (abridged). General History of Africa. James Carey. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0852550939.
  7. Creevey, Lucy (August 1996). "Islam, Women and the Role of the State in Senegal". Journal of Religion in Africa 26 (3): 268–307. doi:10.1163/157006696x00299. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனகலின்_வரலாறு&oldid=2545693" இலிருந்து மீள்விக்கப்பட்டது