செமிலி என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு மானுடப் பெண் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவர் ஒருவரே மானுடப்பெண்ணாக இருந்து ஒரு கடவுளைப் பெற்றெடுத்தவர் ஆவார். இவர் கட்மசு மற்றும் ஆர்மோனியா ஆகியோரின் மகள் ஆவார். சியுசின் மூலம் செமிலிக்கு டயோனிசசு பிறந்தார்.

சூபிடர் மற்றும் செமிலி

செமிலி மற்றும் சியுசு

தொகு

செமிலியின் மேல் காதல் கொண்ட சியுசு அவரை அடிக்கடி இரகசியமாக சந்தித்து வந்தார். பிறகு அவர் சியசின் கருவை வயிற்றில் சுமப்பது பற்றி அறிந்த எரா கோபம் கொண்டார். அதனால் அவர் ஒரு மூதாட்டி உருவம் கொண்டு[1] செமிலியுடன் பழகி பிறகு அவரது தோழியானார். ஒருநாள் எரா செமிலியிடம் தனக்கு சியுசு மேல் சந்தேகமாக உள்ளதாகவும் அவர் காதல் உண்மையானது என்று நிரூபிக்க அவரது உண்மையான உருவத்தைக் காட்டும்படி கேட்குமாறும் கூறினார். செமிலி சியுசிடம் தனக்காக எதுவும் செய்வீர்களா என்று கேட்டார். அதற்கு சியுசு சிடைசு நதியின் மீது ஆணையிட்டு எதுவும் செய்வேன் என்றார். பிறகு செமிலி சியுசின் உண்மையான உருவைக் காண்பிக்குமாறு கூறினார். ஆனால் சியுசு அவரைத் தடுக்க முயன்றார். ஆனால் செமிலி வற்புறுத்தியதால் வேறு வழியின்றித் தன் சக்தி வாய்ந்த கடவுள் உருவத்தைக் காண்பித்தார். செமிலி ஒரு சாதாரண மனிதராக இருந்ததால் சியுசின் உருவில் இருந்து வெளிப்பட்ட இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.[2]

பிறகு சியுசு செமிலியின் கருவில் இருந்த தன் குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார். அந்த குழந்தையே டயோனிசசு. இதனால் அவர் இருமுறை பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். பிறகு டயோனிசசு வளர்ந்ததும் தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்தார்.[3] அதன் பிறகு செமிலி ஒலிம்பிய மலையில் தையோன் என்ற பெயரில் கடவுளானார் என்று கூறப்படுகிறது.[4]

மற்றொரு கதையில் எரா டைட்டன்களை அனுப்பி சியுசு மற்றும் பெர்சிஃபோனின் குழந்தையான சாக்ரியுசை துண்டு துண்டாக நறுக்கி வீசியதாகவும் அந்தக் குழந்தையின் இதயத்தை மட்டும் சியுசு காப்பாற்றி அதை இறந்து போன செமிலியின் குழந்தை டயோனிசசின் உடலில் பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Or in the guise of Semele's nurse, Beroë, in ஆவிட்'s Metamorphoses III.256ff and Hyginus, Fabulae167.
  2. ஆவிட், Metamorphoses III.308–312; Hyginus, Fabulae 179; Nonnus, Dionysiaca 8.178-406
  3. Hyginus, Astronomy 2.5; Arnobius, Against the Gentiles 5.28 (Dalby 2005, pp. 108–117)
  4. Nonnus, Dionysiaca 8.407-418
"https://ta.wikipedia.org/w/index.php?title=செமிலி&oldid=2900588" இலிருந்து மீள்விக்கப்பட்டது