செயற்கை நரம்பணுப் பிணையம்

செயற்கை நரம்பணுப் பிணையம் (ஆங்கிலம்: Artificial neural network) என்பது உயிரி நரம்புப் பிணையத்தில் இருந்து ஊக்கம்பெறப்பெற்ற ஒரு கணிமை அல்லது கணித மாதிரி. இது பிணையப்பட்ட செயற்கை நரம்பணுக்களைக் கொண்டது. இதன் அடிப்படை அணிக் கணிதம் ஆகும்.

ஒரு மறைநிலை அடுக்கைக்கொண்ட செயற்கை நரம்பணுப்பிணைய மாதிரி

கணினி துணையுடன் நிகழும் பிற பணிகள் நிரலாளரொருவர் குறிப்பிட்டு எந்தெந்த சூழலில் என்னென்ன செய்யவேண்டுமென நிரல்வழியாக வகுத்ததுபோலவே நிகழும். அவற்றிலிருந்து வேறுபட்டு செயற்கை நரம்பணுப்பிணையங்கள் துணையுடன் நிகழும் பணிகள் முற்காட்டுகளில் இருந்து கற்றுக்கொண்டதன் அடிப்படையில் நிகழும் தன்மையுடையவை. இதனால் இவை தன்னியக்கமாக பல பணிகளை ஏற்றுச்செய்யும் ஆற்றல் கொண்டவை.

செயற்கைக் கற்றலின் அடிப்படை உருவகம்

தொகு
 
ஆடுபுலியாட்டம்

உயிரற்ற, மாந்த மூளை போன்றதோர் உறுப்பெதுவுமில்லாத ஒரு பொறிக்கோ கணிதமாதிரிக்கோ முற்காட்டுதல்களில் இருந்து கற்கும் ஆற்றல் எவ்வழி வருமென்பதை ஒரு சிறு உருவகத்தின் வழியாகப் பார்க்கலாம்.

  1. ஆடுபுலியாட்டம் போன்ற ஏதாவதோர் ஆட்டத்தை எடுத்துக்கொள்ளலாம்.
  2. அவ்விளையாட்டின் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பெட்டி என அமைக்கவும்.
  3. அந்தக்கட்டத்தில் ஆடுபவர் என்னென்ன நகர்வுகளைச்செய்ய முடியுமோ அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நூல்பிடித்து அவை இட்டுச்செல்லும் நிலைகளுக்கான பெட்டியுடன் இணைக்க வேண்டும்.
  4. ஒவ்வொரு பெட்டியிலும் ஆட்டக்காரர் எத்தனைவிதமான நகர்வுகளை மேற்கொள்ளமுடியுமோ அத்தனை நிறங்களில் குறிப்பில்வழியல்லாமல் பாசிமணிகளைப் போட்டுவைக்க வேண்டும்.
  5. ஆட்டத்தைத்துவங்கும்போது தொடக்கநிலைக்கான பெட்டியிலிருந்து ஒரு பாசிமணியை எடுத்து அதன்படி நகர்வை மேற்கொள்ள வேண்டும்.
  6. அதேபோல ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்துக்கான பெட்டியிலிருந்து பாசிமணியை எடுத்து அதன்படி நகர்த்திவரவேண்டும்.
  7. ஆட்டத்தின் இறுதியில் தோல்வி ஏற்பட்டால் எந்தெந்த பெட்டிகளில் எந்தெந்த பாசிகளை எடுத்தோமோ அவற்றை நீக்கிவிடவேண்டும்.
  8. வெற்றிபெற்றால் முறையே அந்தந்த நிறத்துப்பாசிமணியொன்றை அந்தந்த பெட்டிகளில் சேர்க்கவேண்டும்.
  9. பலமுறை இதேபோல விளையாடிவந்தால் அந்தப்பெட்டிகளிலுள்ள பாசிகள் வெற்றியை நோக்கிய நிறவிகிதத்தை அடைந்துவிடும்.

மேலேயுள்ள உருவகத்தையொத்து செயற்கை நரம்பணுக்களை பெட்டிகளாகவும், நூலை இணைப்பாகவும், பாசிநிறவிகிதத்தை கணித்த புள்ளிகளாகவும் கொண்டால் இப்பிணையங்கள் எவ்வாறு இயங்குகின்றன என விளங்கிக்கொள்ளலாம்.

ஆழமான கற்றல்

தொகு

சிக்கலான பணிகளில் மேலேயுள்ளதுபோன்ற எளிய மாதிரி பொருந்தாது. வெறும் புள்ளியியல் எடைகளை வைத்துக்கூட்டுவதைத் தாண்டிய சில கணிதச்சார்புகளைக் கொண்டு எத்தகைய உள்ளீட்டு-வெளியீட்டு உறவையும் அண்மிக்கும் வரைவை கற்கலாமென நிறுவியுள்ளனர். இதன்வழியாக தக்க முற்காட்டுதல்களைத் தந்தால் எத்தகைய சிக்கலான வகைப்பாட்டுப்பணியையும் இப்பிணையங்களால் செய்யமுடிகிறது. [1]

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு