செயல்திட்ட முறை

செயல்திட்ட முறை (Project method) என்பது 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் படிக்கும் பள்ளி மாணவர்களிடத்து அறிமுகப்படுத்தப்பட்ட கற்பித்தல் வழிமுறை ஆகும். இந்த முறையானது பட்டம் பயிலும் மாணவர்கள் தங்கள் பயிற்சிக் காலத்திலேயே அவரவர் வணிகங்களில் தாங்கள் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகளுக்கு, உதாரணமாக ஒரு நினைவுச் சின்னத்தை வடிவமைத்தல், நீராவிப் பொறியை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளின் போது தாம் பெற்ற அறிவு மற்றும் திறனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைச் செயல்முறையாகக் கற்றறியும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.[1] 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வில்லியம் கில்பாட்ரிக் [2] என்பவர் இச்செயல்திட்ட முறையை கல்வியியலின் ஒரு மெய்யியலாக நீட்டித்தார். இவர் வடிவமைத்த இம்முறையானது நடைமுறைவாதக் கோட்பாட்டின் அடிப்படையிலான குழந்தை மையக் கற்றல் அணுகுமுறையாகும். இந்த இரு அணுகுமுறைகளும் உலகெங்கும் உள்ள ஆசிரியர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.[3] மரபுசார் கல்வியைப் போலல்லாமல், செயல்திட்ட முறையின் முன்னோடிகள் மாணவர்களை மிகச்சிறிய அளவிலான ஆசிரியர் வழிகாட்டுதலுடன் தாங்களாகவே பிரச்சனைக்கான தீர்வினைக் காண முயற்சியெடுக்க அனுமதித்தனர். இம்முறையில் ஆசிரியர் அறிவு மற்றும் தகவல்களைத் தரும் நபராக அல்லாமல் ஒரு ஏதுவாளராகவே பார்க்கப்பட்டார்.

செயல்திட்ட முறையில் மாணவர்கள் தங்களது சுற்றுப்புறத்தில் உள்ள சாத்தியமான வாய்ப்புகளைத் தங்கள் புலன்கள் வழியாகக் கண்டறியவும், அனுபவித்து உணரவும் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் தங்களின் சொந்த விருப்பார்வங்களின் அடிப்படையில் தங்களது கற்றலை வழிநடத்தவும் வேண்டும். பாடநூல்களின் வழியாக மிகச்சிறிதளவே கற்றுத்தரப்பட வேண்டும். மனனம் செய்து கற்றலுக்கு மாற்றாக அனுபவ வழிக் கற்றலுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். செயல்திட்ட வகுப்பறையானது மக்களாட்சிப் பண்புகளையும் கூட்டுழைப்பையும் கொண்டு நோக்கம் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும்.

கில்பாட்ரிக் தனது செயல்திட்ட முறைக்காக நான்கு வகுப்பறைகளை வடிவமைத்தார். அவை: கட்டமைப்பு (நாடகs எழுத்து), அனுபவிப்பு (ஒரு இசைக்கச்சேரியை அனுபவிப்பது போன்றது), பிரச்சனை (உதாரணத்திற்கு வறுமை போன்ற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி கலந்துரையாடுவது), மற்றும் குறிப்பிட்ட ஒன்றைக் கற்றறிதல் (நீச்சல் போன்ற திறன் சார்ந்த ஒன்றை கற்றல்).

உசாத்துணை தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயல்திட்ட_முறை&oldid=3894159" இலிருந்து மீள்விக்கப்பட்டது