செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்

செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் சங்ககாலப் புலவர். அகநானூறு 250, குறுந்தொகை 218, 358, 363, நற்றிணை 30 ஆகிய ஐந்து பாடல்கள் இவரால் பாடப்பட்டுள்ளன. அனைத்தும் அகத்திணைப் பாடல்கள்.

ஊர்: செல்லூர்

தந்தை பெயர்: செல்லூர் கிழார்

பாடல் சொல்லும் செய்தி

தொகு

ஆயமொடு புணர்ந்து விளையாடல்

தொகு

கடற்கானலில் பூத்துக் கிடந்த புன்னையில் வண்டுகள் மொய்த்துக்கொண்டிருந்தன. அதன் அடியில் நாம் ஆயத்தாரோடு கூடி விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது அங்குத் தேரில் வந்த ஒருவன் நாம் இழைத்த சிற்றில் அழகாக உள்ளது என்று பாராட்டிவிட்டு நம்மிடமிருந்து மறுமொழி பெறாமல் சென்றுவிட்டான். அதுமுதல் உன் தோள்வளை கழன்று விழுகிறது. சிறுகுடியிலுள்ள வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்றுகின்றனர். நாமும் தூங்கவில்லை. நம்மோடு சேர்ந்து நாம் விளையாடிய துறையும் இரவில் துஞ்சவில்லை.(அவன் அங்கு வந்திருக்கிறான்) என்கிறாள் தோழி, தலைவியிடம். (அகம் 250)

விறல்கெழு சூலி

தொகு

அவர் நம்மை மறந்து அவர் நாட்டிலேயே உள்ளார். நாமோ நம்மூர்ப் பாலைத்தெய்வம் சூலிக்கு நேர்த்திக்கடனும் செலுத்தவில்லை. அவளது காப்புநூலைக் கையில் கட்டிக்கொள்ளவும் இல்லை. அவர் வரவு நோக்கிப் புள்நிமித்தமும் கேட்கவில்லை. விரிச்சி நிமித்தமும் பார்க்கவில்லை. அவரைப்பற்றி நினைத்தும் பார்க்கவில்லை. அவர் நம் உயிருக்கு உயிர் போன்றவர். நாம் இல்லாமல் அவரால் வாழமுடியாத நிலையினர். (என்ன செய்யலாம்?) - தலைவி தோழியை இவ்வாறு வினவுகிறாள். (குறுந்தொகை 218)

ஆய்கோடு

தொகு

அவர் பிரிந்து சென்ற நாளை எண்ணிக் கணக்கிட்டுப் பார்க்கத் தலைவி காலையில் எழுந்ததும் சுவரில் ஒரு கோடு போட்டு நாள்தோறும் அதனை எண்ணிப் பார்ப்பது அக்கால வழக்கம். இந்தக் கோட்டுக்கு ஆய்கோடு என்று பெயர்.

தோழி! அணிகலன் கழல விம்மிக்கொண்டு ஆய்கோட்டை எண்ணிச் சுவரைத் தடவுகிறாய். கோவலர் அணியும் கார்காலத்து முல்லையும் பூத்துக் கிடக்கிறது. வருவேன் என்று அவர் சொன்ன பருவம் இதுதான். தனியே இருப்பவர்கள் இரங்கி ஏங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதானா? - தோழி தலைவியிடம் கூறுகிறாள். (குறுந்தொகை 358)

  • (ஒப்புநோக்குக) வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற, நாள்ஒற்றித் தேய்ந்த விரல் - திருக்குறள் 1261

உகாய் வரிநிழல்

தொகு

பெரும! சிவந்த காலையுடைய அறுகம்புல்லை மேய்துகொண்டிருக்கும் பெண்மரையா வரட்டும் என்று அதன் ஆண்மரையா, இலை உதிர்ந்த உகாய் மரத்தின் வரிநிழலில் காத்துக்கொண்டிருக்கும் பாலைநில வழியில், நீ மட்டும் உன் துணையை விட்டுவிட்டுப் பிரிந்து செல்வது தகுமோ? - தோழி கிழவனிடம் இவ்வாறு சொல்கிறாள். (குறுந்தொகை 363)

கடல்மரம் கவிழ்ந்தது

தொகு
 
கடல்மரம்
இப்படம் இக்காலக் கடல்மரம்

* கடல்மரம் = கப்பல்

கப்பல் கவிழ்ந்தபோது அதன் சிறு பலகைத்துண்டைப் பலர் பற்றிக்கொள்வது போல பரத்தையர், நடுத் தெருவில், உன்னைப் பற்றிக்கொள்ள, அதற்குத் துணைநிற்கும் பாணன் யாழ் மீட்ட, அந்த யாழ் தேன் உண்ணும் வண்டு போல் ஒலிக்க, நானே என் கண்களால் நேரில் பார்த்தேன். நீ பரத்தையை அறியேன் என்று பொய் சொல்கிறாயே! என்று சொல்லித் தோழி தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள். (நற்றிணை 30)