செவ்வெண் என்பது தமிழில் காணப்படும் இலக்கணக் குறியீடுகளில் ஒன்று. தொல்காப்பியம் இதனைச் 'செவ்வெண் இறுதி' எனக் குறிப்பிட்டு மொழியில் எவ்வாறு அமையும் என்பதை விளக்குகிறது.[1]

பொருள்களை எண்ணிக் கணக்கிடும்போது தமிழில் பல்வேறு இடைச்சொற்களைப் பயன்படுத்தி எண்ணித் தொகைப்படுத்துவது வழக்கம்.

  • 'உம்' இடைச்சொல்லைப் பயன்படுத்துதல் - எடுத்துக்காட்டு - கண்ணும் கருத்துமாய் இரு.
  • 'என' இடைச்சொல்லைப் பயன்படுத்துதல்[2] - எடுத்துக்காட்டு - உயிர் என மெய் என எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்.
  • 'ஏ' இடைச்சொல்லைப் பயன்படுத்துதல் [3] - எடுத்துக்காட்டு - பூவே காயே பழம் என மூன்றும் நல்லவை.
  • உம் என்னும் இடைச்சொல் உருபு மறைந்து நிற்கும் உம்மைத்தொகை - எடுத்துக்காட்டு - சேர சோழ பாண்டியர்

செவ்வெண் என்பது இவற்றிலிருந்து வேறுபட்டது. செம்மை+எண் என்பது செவ்வெண் என வரும். செம்மை என்பது ஒழுங்கு-முறை. பொருள்களை எண்ணும்போது கைடைப்பிடிக்கப்படும் ஒழுங்குமுறைமையைச் செவ்வெண் என்றனர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் இளம்பூரணர் செவ்வெண்ணுக்குத் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இவை.

'சாத்தன், கொற்றன், பூதன் என மூவரும் வந்தார்' என வரும் செவ்வெண்.

செவ்வெண் முறைமையில் எண்ணும்போது எத்தனை என எண்ணிக்கைத் தொகைச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது மரபு.

அடிக்குறிப்பு

தொகு
  1. எண்ணின் இறுதியும்
    பெயர்க்குரி மரபிஇன் செவ்வெண் இறுதியும்
    ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும்
    யாவயின் வரினும் தொகை இன்று அமையா (தொல்காப்பியம் இடையியல் 42
  2. 'என என் எண்' (தொல்காப்பியம் இடையியல் 39)
  3. 'எண் ஏகாரம்' (தொல்காப்பியம் இடையியல் 40)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வெண்&oldid=4069486" இலிருந்து மீள்விக்கப்பட்டது