செ. யோகநாதன்
செ. யோகநாதன் (Se. Yoganathan, அக்டோபர் 1, 1941 - சனவரி 28, 2008) ஈழத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பெருமளவு சிறுகதைகளையும் குறும்புதினங்களையும் எழுதியவர். புனைவுகள், கட்டுரைகள், மொழிப்பெயர்ப்புகள், குழந்தை இலக்கியம் என தொன்னூறுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.
செ. யோகநாதன் | |
---|---|
பிறப்பு | கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் | 1 அக்டோபர் 1941
இறப்பு | சனவரி 28, 2008 யாழ்ப்பாணம், இலங்கை | (அகவை 66)
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | பேராதனைப் பல்கலைக்கழகம் |
பணி | அரச அதிபர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | செல்லையா |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுயாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட யோகநாதன் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் கண்டியில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் இலங்கை நிர்வாகச் சேவையில் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். மார்க்சிய சித்தாந்தத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். 1980களில் தமிழ்நாடு சென்று அங்கு பதினாறு ஆண்டுகள் வாழ்ந்து 1996 இல் இலங்கை திரும்பினார். இறுதியாக கொழும்பில் உள்ள எம். டி. குணசேனா நிறுவனம் தமிழ் நூல்கள் வெளியிடத் தொடங்கிய போது அதற்குப் பொறுப்பாளராகப் பதவி ஏற்றார்.[1]
எழுத்துலகில்
தொகுஈழகேசரியின் மாணவர் மலருக்கு கவிதைகள், கட்டுரைகள் எழுதிப் பரிசுகள் பெற்றவர். 1962 இல் சிற்பியின் கலைச்செல்வி இதழில் இவருடைய முதற்கதை வெளியானது. இதனை அடுத்து இவரது "மலர்ந்த நெடு நிலா" என்ற குறும் புதினமும் கலைச்செல்வி வெளியிட்டது.[1]
பேராதனைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்த 1964 ஆம் ஆண்டில் இவரது பத்துச் சிறுகதைகளைக் கொண்ட யோகநாதன் கதைகள் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. அஞ்சலி இதழில் வெளிவந்த ஒளி நமக்கு வேண்டும் குறுநாவல் 1974 இல் நூலாக வெளிவந்து இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. பல மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது.[1] தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்தில் தமிழக இதழ்களில் நிறைய சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எழுதினார்.[2]
விருதுகள்
தொகுசெ. யோகநாதன் இந்திய மத்திய அரசின் பரிசு உட்பட தமிழக அரசின் விருதினை நான்கு தடவைகள் பெற்றுள்ளார்.[2] உயர் இலக்கிய விருதான இலக்கியச் சிந்தனை விருதினையும் நான்கு தடவைகள் பெற்றுள்ளார். இலங்கை சாகித்திய விருது நான்கு தடவை கிடைத்துள்ளது.[1]
1994 இல் இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் என்று ஒவ்வொன்றும் 650 பக்கங்கள் கொண்ட வெள்ளிப் பாதசரம், ஒரு கூடைக் கொழுந்து ஆகிய இரண்டு தொகுதிகளை வெளியிட்டார்.[1]
குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய செ.யோ அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குநராகவும் செயற்பட்டார்.
இவரது நூல்கள் சில
தொகு- யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
- இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும் (குறுநாவல் தொகுதி)
- ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
- காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
- வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
- அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
- கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
- அசோகவனம் (சிறுகதைகள், 1998)
- அன்பான சிறுவர்களே.... (குழந்தைக் கதைகள், 2000)
மறைவு
தொகுசெ. யோகநாதன் 2008, சனவரி 28 திங்கட்கிழமை மாரடைப்பினால் தனது 66-வது அகவையில் காலமானார்.[2]