சேய்வழிப் பெயரீடு

சேய்வழிப் பெயரீடு (teknonymy) என்பது பிள்ளை பிறந்தபின், அப்பிள்ளையின் பெயர்க அடிப்படையில் பெற்றோர் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளும் ஒரு நடைமுறையாகும். இது உலகின் பல பகுதிகளிலும் வாழும் பல்வேறு சமுதாயத்தினரின் மத்தியில் காணப்படுகின்றது. சில சமுதாயங்களில் இது முறைசார்ந்த, சமுதாய நிறுவனத்தின் பல்வேறு அம்சங்களிலும் தாக்கத்தைக் கொண்டுள்ள ஒரு நடைமுறையாக இருக்கின்ற அதேவேளை வேறு சிலவற்றில் அந்தளவுக்கு முக்கியத்துவம் அற்ற ஒரு வழக்காக இருந்ந்து வருகின்றது.

சேய்வழிப் பெயரீட்டின் அடிப்படைகள் தொகு

இது பற்றி ஆய்வுகள் செய்த டைலர் என்பவர் இது தாய்த்தலைமைக் குடும்ப முறைமையின் எச்சமாக இருக்கலாம் எனக் கருதுகிறார். ஒரு காலத்தில் தாய்த்தலைமைக் குடும்ப முறைமை பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இம் முறையின் கீழ் மணம் செய்யும் ஆண்கள் தங்கள் மனைவியரின் குடும்பத்துடனேயே வாழ்ந்து வந்தனர். இத்தகைய குடும்பங்களிலே, பெண்களும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுமே குடும்பத்துடன் நெருங்கியவர்களாக இருந்த சமயத்தில், அக் குடும்பத்துள் மணம்முடித்து வரும் ஆண்களுக்கு முன்னுரிமைகள் கிடையாது. இதனால் அவ்வாறான ஆண்களை அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் மூலமே அடையாளம் காட்டும் மரபு ஏற்பட்டது என்பது அவர் வாதம்.

எனினும், இத்தகைய ஒரு கருத்துருவுக்கும் அப்பால் சமுதாக நடைமுறைகளிலும், அதன் நிறுவனங்களிலும் தாக்கங்களைக் கொண்ட அம்சமாகப் பல சமுதாயங்களிலே இம்முறை இருந்து வருவதைக் காணலாம்.

இந்தியாவில் சேய்வழிப் பெயரீடு தொகு

சமுதாயத்தில் மிக ஆழமான தாக்கங்களைக் கொண்டிராவிட்டாலும், இந்தியாவில் கிராமப் பகுதிகளிலும், சில பழங்குடியினர் மத்தியிலும் இத்தகைய ஒரு நடைமுறை இருந்து வருகிறது. சிறப்பாக இந்துப் பெண்கள் தங்கள் கணவன்மாரின் பெயர்களைக் கூறுவதில்லை. இதனால் கணவனைப் பற்றிப் பிறர் மத்தியில் குறிப்பிட வேண்டி ஏற்படுகின்ற போது தங்கள் பிள்ளையின் (ஆண் அல்லது பெண்) தந்தை என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. எடுத்துக்காட்டாக, பிள்ளையின் பெயர் சிவா எனின், தந்தையை சிவாவின் அப்பா' என்பார்கள்.

பலவகையான சேய்வழிப் பெயரீட்டு நடைமுறைகள் தொகு

முறைசாராத இவ்வாறான வழக்குகள் பலநிலைகளிலும் நவீன சமுதாயங்களில்கூடக் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாகப் பாடசாலைகள் தொடர்பில் பெற்றோர்களின் உறவு நிலைகள் பிள்ளைகளை முதன்மைப்படுத்தியே இருப்பதன் காரணமாகப் பெற்றோர்கள் ஒருவரையொருவர் அவர்கள் பிள்ளைகளின் அம்மா என்றோ அப்பா என்றோ குறிப்பிட்டுக்கொள்ளும் வழக்கம் உண்டு.

சில சமுதாயங்களில் இது ஒரு முறை சார்ந்த நடைமுறையாக வழக்கில் இருப்பதைக் காண முடியும். முற்காலத்தில் அராபியர்கள் பரவலாக இந்த நடைமுறையைக் கைக்கொண்டிருந்தனர். அபு அலி, அபு ஹசன் போன்ற பெயர்கள் இதனை உணர்த்துவனவாக இருக்கின்றன. அரபி மொழியில் அபு என்பது தந்தை என்பதைக் குறிக்கும்.

பாலித்தீவிலுள்ள ஒரு சமூகத்தவரிடையே இவ்வழக்கமானது மிக விரிவான முறையிலே கைக்கொள்ளப்படுகின்றது. இங்கே முதற் குழந்தை பிறந்தவுடன் தாய் தந்தையரின் பெயர்கள் முறைப்படி மாற்றம் அடைகின்றன. அது மட்டுமன்றி, ஒரு தலைமுறையுடன் மட்டும் நின்றுவிடாது, பேரன், பேத்தி, பாட்டன், பாட்டி எனப்பல தலைமுறையினர் மத்தியிலும் இது தாக்கத்தைக் கொண்டுள்ளது. அதாவது, குழந்தையொன்று பிறக்கும்போது அதன் தாய் தந்தையர்கள் பெயர்கள் மட்டும் மாறுவதில்லை. அக் குழந்தையின் பேரன், பேத்தி பெயர்களும், பாட்டன், பாட்டி பெயர்களும் கூட மாறுகின்றன. இதன்படி ஒருவரின் பெயர் அவர் வாழ்க்கைக் காலத்தில் 4 முறை மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இந்த முறைமையின் கீழ் தலைமுறைகள் ஊடாகப் பெயர்கள் மாறுகின்ற விதத்தைக் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.

தலைமுறை-1 தலைமுறை-2 தலைமுறை-3 தலைமுறை-4
கந்தன் --> முருகனின் தந்தை --> வேலனின் பேரன் --> குமரனின் பாட்டன்
முருகன் --> வேலனின் தந்தை --> குமரனின் பேரன்
வேலன் --> குமரனின் தந்தை
குமரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேய்வழிப்_பெயரீடு&oldid=2500331" இலிருந்து மீள்விக்கப்பட்டது