சைபீரிய பனி இளவரசி

சைபீரியப் பனி இளவரசி அல்லது சைபீரிய பனிக் கன்னி (Siberian Ice Maiden or Siberian Ice Princess) (உருசியம்: Принце́сса Уко́ка), உருசிய மொழியில் அல்தாய் இளவரசி என்பர். கிமு 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் மம்மியை, 1993-இல் ருசியா நாட்டின் அல்த்தாய் குடியரசின் குர்கான் பகுதியில் பசிரிக் தொல்லியல் மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மம்மியானது இருபதாம் நூற்றாண்டில் இறுதியில், ருசியாவின் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் ஆகும். இப்பெண்ணின் மம்மியை 2012-இல் ருசியாவின் உகோக் பீடபூமியில் அமைந்த[1] அல்த்தாய் குடியரசின் தலைநகரான கோர்னோ அல்தாயிஸ்க் நகரத்தின் [2] அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

சைபீரிய பனி இளவரசியின் மம்மி

அறிமுகம்

தொகு

யுரேசியப் புல்வெளியில் கிமு 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சைபீரியச் சிதிய இனப் பெண்ணின் மம்மியை ஓரு கல்லறை மேட்டிலிருந்து நடாலியா போலோஸ்மாக் மற்றும் அவரது குழுவினரால் 1993-ஆம் ஆண்டின் கோடைக்காலத்தின் போது தெற்கு சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.[3] இந்த சைபீரிய பனி இளவரசின் மம்மியானது, கிமு 6-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 2-ஆம் நூற்றாண்டு வரை யுரேசியப் புல்வெளியில் விளங்கிய பசிரிக் பண்பாட்டுக் காலத்தை எடுத்துரைக்கிறது.[4]

இந்த சைபீரிய பனி இளவரசியின் மம்மி, ருசியாவின் தெற்கு எல்லைக்கும், சீனாவின் வடக்கு எல்லைக்கும் இடையே அமைந்த உகோக் பீடபூமியில் அமைந்த அல்த்தாய் குடியரசின், யுரேசியப் புல்வெளியில் உள்ள குர்கன் பகுதியில் பசிரிக் தொல்லியல் மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மம்மி கண்டெடுக்கப்பட்ட பிரதேசம் கடுமையான பனியும், குளிரும் மிக்கது. இப்பகுதியை உள்ளூர் மக்கள் இரண்டாவது சொர்க்கம் என அழைப்பர்.[5]தற்கால அல்த்தாயின் உறைபனி காலத்தின் போது, கால்நடைமேய்ப்பவர்கள், தங்களது கால்நடைகளை உகோக் பீடபூமியில் அழைத்துச் செல்வர்.

கண்டுபிடிப்பு மற்றும் அகழ்வராய்ச்சி

தொகு
 
சைபீரியாவின் உகோக் பீடபூமி

நதாலியா போலோஸ்மாக் மற்றும் அவரது குழுவினர், ருசியாவிற்கும், சீனாவிற்கும் சர்ச்சைக்குரிய அல்த்தாய் குடியரசின் குர்கன் பகுதியில் [6] உள்ள தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கல்லறைக் குழியில் தோண்டிய போது, மரப்பெட்டியில் இருந்த ஒரு பெண்ணின் மம்மியை கண்டுபிடித்தனர். இந்த பெண் மம்மியுடன் சில மரணச் சடங்குகளுக்குரிய 3 குதிரைகளின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. [7]கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புப் படி, இந்தப் பெண்ணின் மம்மி, கிமு 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கண்டுபிடித்தனர். [8]

கல்லறை

தொகு

சைபீரிய பனி இளவரசியின் சவப்பெட்டியானது உறுதியான மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. சவப்பெட்டியில் உணவு மற்றும் குடிநீர் வைப்பதற்கான இரண்டு சிறிய மேஜைகளும், மேஜையின் மீது குதிரை மற்றும் ஆட்டு இறைச்சியும் வைக்கப்பட்டிருந்தது. மேலும் விலங்கின் தோலில் மான் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தது. மேலும் குடுவைகளில் பால் பொருட்கள் இருந்தன. கொம்பு போன்ற பாத்திரத்தில், மம்மியின் குடிநீர் தேவைக்கு பானங்கள் வைக்கப்பட்டிருந்தது. [3]

பனி இளவரசி மற்றும் குதிரைகளின் தலைகளும் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த பெண் மம்மி இறக்கும் போது 20 முதல் முப்பது வயது இருக்கலாம். இப்பெண்ணின் இறப்பின் காரணம் அறியப்படவில்லை.[9] 2014-இல் புதிய தொல்லியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளின் படி, இப்பெண் மார்பக புற்று நோயாலும், சதியாளர்கள் கீழே தள்ளியதால் ஏற்பட்ட காயத்தாலும் இறந்திருக்கலாம் எனக் கணித்துள்ளனர். மேலும் இந்த பெண் மம்மி அருகே உடல் வலியை மறக்கடிக்கும் கஞ்சா பொட்டலமும் இருந்தது. [10]

மம்மியின் உடலின் தோள்கள், மணிக்கட்டுகள், விரல்களில் மான் வடிவ பச்சை குத்தப்பட்டிருந்தைக் கொண்டும், சவக்குழி மற்றும் சவப்பெட்டியில் இருந்த பொருட்களைக் கொண்டும், இந்தப் பெண் சிதிய சமூத்தின் மதச் சடங்குகள் செய்யும் பூசாரியாக இருந்திருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கணிக்கின்றனர்.[11] இந்தப் பெண்ணின் மம்மியானது மஞ்சள் நிறத்திலான இரவிக்கை அணியப்பட்டு, ஆழ் சிவப்பு மற்றும் வெள்ளி நிறத்தில் கம்பளியால் ஆன இடுப்புக் கச்சை கட்டப்பட்டிருந்தது. மேலும் மம்மியின் சவப்பெட்டியில் மெருகூட்டப்பட்ட உலோகம் மற்றும் மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கண்ணாடி, செதுக்கப்பட்ட மான் உருவங்கள், கிட்டத்தட்ட மூன்று அடி உயரமுள்ள ஒரு தலைக்கவசம் ஆகியவைகள் எட்டு அடி நீளமுள்ள ஒரு சவப்பெட்டியை அலங்கரித்தது. தலைக்கவசம் ஒரு மரத்தாலான கட்டமைப்பைக் கொண்டிருந்தது. மம்மி இளவரசியின் மருத்துவப் பயன்பாட்டிற்காக ஒரு கல் பாத்திரத்தில் மருத்துவ குணம் கொண்ட கொத்தமல்லி விதைகளின் எச்சங்கள் இருந்தன.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ukok Plateau
  2. Gorno-Altaysk
  3. 3.0 3.1 Polosmak, Natalia (October 1994). "A Mummy Unearthed from the Pastures of Heaven". National Geographic: 80–103. 
  4. Pazyryk culture
  5. Polosmak, Natalia (October 1994). "A Mummy Unearthed from the Pastures of Heaven". National Geographic: 80–103.  p. 87.
  6. Polosmak, Natalia (October 1994). "A Mummy Unearthed from the Pastures of Heaven". National Geographic: 80–103.  p. 95.
  7. Polosmak, Natalia (October 1994). "A Mummy Unearthed from the Pastures of Heaven". National Geographic: 80–103. , p. 97.
  8. Polosmak, Natalia (October 1994). "A Mummy Unearthed from the Pastures of Heaven". National Geographic: 80–103. , p. 97.
  9. Transcript of the BBC/NOVA documentary "Ice Mummies: Siberian Ice Maiden", Nov. 24, 1998
  10. 14 October 2014 Siberian Times article by Anna Liesowska on MRI study
  11. "Siberian Princess reveals her 2,500 year old tattoos". Siberian Times. 14 August 2012. பார்க்கப்பட்ட நாள் 11 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபீரிய_பனி_இளவரசி&oldid=3584947" இலிருந்து மீள்விக்கப்பட்டது