சொ. முருகப்பா

சொ. முருகப்பா (1893 - 1956) தமிழறிஞரும், இதழியலாளரும், பதிப்பாளாரும், தமிழிசை இயக்க முன்னோடிகளில் ஒருவராகவும் இருந்தவர்.[1]

வாழ்க்கை தொகு

1893 ஆம் ஆண்டு காரைக்குடியில் சொக்கலிங்கம் செட்டியார், விசாலாட்சி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தமது தொடக்கக் கல்வியைத் திண்ணைப் பள்ளி வழியே கற்றார். இவர் மலாயாவில் உள்ள ஈப்போ நகரத்தில் 1913 முதல் 1916 வரை பணியாற்றினார்.

இதழ்ப் பணிகள் தொகு

வணிகர் சமூகத்தை உயர்த்தும் நோக்கத்தோடு 1920 ஆம் ஆண்டு தனவைசிய ஊழியன் எனும் வார இதழை நடத்தினார். தமிழின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு 1923 இல் குமரன் எனும் மாத இதழைத் தொடங்கினார். சுய மரியாதை இயக்கத்திற்கு வலிமை சேர்க்க சண்டமாருதம் எனும் தினசரி இதழைத் தொடங்கி நடத்தினார். குமரன் இதழ் பல வகையில் சிறப்பு பெற்றதாகும். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் முதற் கவிதை இவ்விதழில் இடம்பெற்றது இந்த இதழில்தான். தமிழ்ப் பத்திரிக்கை உலகில் முதன்முதலாக ஆண்டு மலர் வெளியிட்டது குமரன் இதழ் என்று அறிஞர் சோமலெ குறிப்பிடுகின்றார்.[2]

சமயப் பணிகள் தொகு

தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் உள்ளிட்ட 20 அறிஞர்களைக் கொண்டு 1917 இல் காரைக்குடியில் இந்து மதாபிமானச் சங்க அமைப்பை உருவாக்கினார். பாதரக்குடி மடாதிபதியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்றிருந்ததால் சமய உணர்வில் தாகம் கொண்டிருந்தார். தமிழிசை இயக்க வளர்ச்சிக்கு முன்னணித் தலைவராக வீற்றிருந்து தமிழிசை விழாவை நடத்தினார்.

இலக்கியப் பணிகள் தொகு

இவர் கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கம்பர் பதிப்பகம் எனும் பதிப்பகத்தை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டார். கம்பன் புகழ் பாடும் விதமாக கம்பன் கழகத்தை உருவாக்கினார். கம்பராமாயணத்தில் பால காண்டத்தைச் சந்தி பிரித்துப் பாமர மக்களும் படிக்கும் எளிய உரை எழுதிப் பதிப்பித்தார். இராமகாதைக்கு ஒரு முன்னுரைப் போன்று 'கம்பர் காவியம் அதன்நிலை விளக்கம்' எனும் நூலை எழுதினார்.

சமூகப் பணிகள் தொகு

1938 இல் காரைக்குடிக்கு அண்மையிலுள்ள அமராவதி புதூரில் மகளிர் இல்லம் ஒன்றினைத் தொடங்கி எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.

மறைவு தொகு

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்குத் தொண்டாற்றிய இவர் 1956 ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு

  • குன்றக்குடி பெரியபெருமாள் ' தமிழ்வளர்த்த நல்லறிஞர்கள்' மதி நிலையம், சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொ._முருகப்பா&oldid=3854068" இலிருந்து மீள்விக்கப்பட்டது