சோமேசுவரா வனவிலங்கு சரணாலயம்

சோமேசுவரா வனவிலங்கு சரணாலயம் (Someshwara Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயமாகும்.

சோமேசுவரா வனவிலங்கு சரணாலயம்
Someshwara Wildlife Sanctuary
Map showing the location of சோமேசுவரா வனவிலங்கு சரணாலயம் Someshwara Wildlife Sanctuary
Map showing the location of சோமேசுவரா வனவிலங்கு சரணாலயம் Someshwara Wildlife Sanctuary
அமைவிடம்உடுப்பி & சிமோகா மாவட்டம், கருநாடகம், இந்தியா
அருகாமை நகரம்ஹெப்ரி, உடுப்பி மாவட்டம்
பரப்பளவு314.25 km2 (121.33 sq mi)
நிறுவப்பட்டது1974
நிருவாக அமைப்புகுத்ரேமுக வனவுயிர் பகுதி, கருநாடக வனத்துறை

தோற்றம் தொகு

சோமேசுவரா வனவிலங்கு சரணாலயம், கருநாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்குள் அமைந்துள்ள புகழ்பெற்ற சோமேசுவரர் கோயிலின் கடவுளரான "சோமேசுவரர்" பெயரிடப்பட்டது. இந்த சரணாலயம் அகும்பேக்கு கீழாகக் கருநாடக மாவட்டங்களான உடுப்பி, சீமக்காவில் பரவியுள்ளது. இந்த சரணாலயத்தில் கர்நாடக வனத்துறையால் நடத்தப்படும் சீதனாடி இயற்கை முகாம் உள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம் வழியாக உடுப்பி முதல் அகும்பே சாலை செல்கிறது. இதன் அருகிலுள்ள நகரம் ஹெப்ரி ஆகும். இந்த சரணாலயம் உடுப்பி, மங்களூரு மற்றும் பெங்களூருக்கு பேருந்து சேவையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் 1974ஆம் ஆண்டு 88.40 km2 (34.13 sq mi) பரப்பளவில் தோற்றுவிக்கப்பட்டது.

பின்னர் 2011ஆம் ஆண்டில் 314.25 km2 (121.33 sq mi) பரப்பளவாக அரசு அறிவிக்கை எண் FEE302 FWL2011- (V), பெங்களூர், தேதியிட்டது: 27-12-2011" மூலம் விரிவாக்கப்பட்டது.[1] விரிவாக்கத்திற்குப் பிறகு இச்சரணாலயம் உடுப்பி, குண்டபுரா, கர்கலா, தீர்த்தகள்ளி வட்டம் (உடுப்பி) மற்றும் சிவமோகா மாவட்டங்களில் பரவியுள்ளது. தற்போதுள்ள சரணாலயத்தில் பலேஹள்ளி பாதுகாக்கப்பட்ட வனச்சரக, அகும்பே மாநில வனம், சோமேசுவரா பாதுகாக்கப்பட்ட வனம் மற்றும் டோம்பட்லு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளைச் சேர்த்து சரணாலயம் விரிவுபடுத்தப்பட்டது. விரிவாக்கப்பட்ட சரணாலயம் மூக்காம்பிகா வனவிலங்கு சரணாலயம், சராவதி வனவிலங்கு சரணாலயம் மற்றும் குத்ரேமுக தேசிய பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாக்கப்பட்ட பகுதியைத் தொடர்ச்சியாக உருவாக்குகிறது. வற்றாத சீதனாடி ஆறு இச்சரணாலயம் வழியாகப் பாய்கிறது.

தாவரங்களும் விலங்குகளும் தொகு

சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில் வெப்பமண்டல ஈரமான பசுமையான காடுகள், மேற்கு கடற்கரை பகுதி பசுமையான காடுகள் மற்றும் தெற்கு இரண்டாம் நிலை ஈரமான கலப்பு இலையுதிர் காடுகளைக் கொண்டுள்ளது.

இச்சரணாலயத்தில் வங்காளப்புலி, இந்தியச் சிறுத்தை, உஸ்ஸூரி செந்நாய், இந்திய யானை, பொன்னிறக் குள்ளநரி, ஆசிய மரநாய், காட்டுப்பூனை, இந்தியக் காட்டுப்பன்றி, இந்திய முகட்டுக் முள்ளம்பன்றி, கடமான், புள்ளிமான், இந்திய முண்ட்ஜக் மான் (கேளையாடு), இந்தியப் புள்ளிச் சருகுமான், இந்தியக் காட்டெருது (இந்தியன் பைசன்), இந்திய குழிமுயல், சோலைமந்தி, குல்லாய் குரங்கு, தென்வெளிச் சாம்பல் குரங்கு, இந்திய பெரும் பறக்கும் அணில், இராச நாகம் போன்ற விலங்குகள் காணப்படுகின்றன.

மலை இருவாட்சி, மலபார் சாம்பல் இருவாச்சி, தீக்காக்கை, இலங்கை ஃபிராக்மவுத், மலபார் வெள்ளை கறுப்பு இருவாட்சி மற்றும் சீகார்ப் பூங்குருவி ஆகிய பறவைகள் இச்சரணாலயத்தில் காணப்படும் சில பறவைகளாகும். நீர்நாய் மற்றும் பெளிமீன் சீதாநதி ஆற்றில் காணப்படுகின்றன.[2]

அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையம் தொகு

இந்த ஆராய்ச்சி வசதியைத் ரோமுலஸ் விட்டேக்கர் என்ற ஊர்வன அறிவியலாளர் 2005இல் நிறுவினார். இந்த வசதி அகும்பே அருகே அமைந்துள்ளது. இது ராஜநாகம் மீது டெலிமெட்ரி அடிப்படையிலான திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

வானிலை தொகு

வடகிழக்கு இந்தியாவில் சேரபுஞ்சியுடன் ஒப்பிடுகையில், தென்னிந்தியாவில் அதிக மழை பெய்யும் பகுதி அகும்பே ஆகும். சோமேசுவர வனவிலங்கு சரணாலயத்தின் காப்புக் காடுகள் சராசரியாக ஆண்டுக்கு ~7000 மி.மீ. மழை பெய்கின்றது.

பிற சுற்றுலா தலங்கள் தொகு

அகம்பே சூரிய மறைவு இடம், பர்கானா அருவி, ஒனகே அப்பி அருவி, ஜோகிகுண்டி அருவிஆகியவை அருகிலுள்ள பிற சுற்றுலா தலங்களில் சில.

மேற்கோள்கள் தொகு

  1. "Karnataka Government Efforts to Preserve Wildlife and Forests Near National Park by Fixing Boundaries 2011". Scribd.
  2. http://aranya.gov.in/downloads/SomeshwaraWL_MgmtPlan.pdf