மலபார் கறுப்பு வெள்ளை இருவாச்சி
மலபார் கறுப்பு வெள்ளை இருவாச்சி | |
---|---|
ஆண் | |
பெட்டை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. coronatus
|
இருசொற் பெயரீடு | |
Anthracoceros coronatus (Boddaert, 1783) |
மலபார் கறுப்பு வெள்ளை இருவாச்சி ( Malabar pied hornbill (Anthracoceros coronatus) என்பது இருவாச்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.
விளக்கம்
தொகுபிணந்தின்னிக் கழுகு அளவுள்ள இப்பறவை சுமார் 65 செ.மீ. (26 அங்) நீளம் இருக்கும். இதன் அலகின் மேல் அமைந்துள்ள தொப்பி போன்ற பகுதி மெழுகு மஞ்சள் நிறமாக இருக்கும். அந்தத் தொப்பி பருத்து அமுங்கி ஒரு முனையுடன் காணப்படும். அலகின் அடிப்பகுதி கறுப்பாக இருக்கும். தொப்பியில் பெரிய கறுப்புக் கறை காண இயலும். விழிப்படலம் ஆண் பறவைக்கு ஆரஞ்சு சிவப்பாகவும், பெண் பறவைக்கு பழுப்பாகவும் இருக்கும். கண்ணைச் சுற்றியுள்ள தூவியற்ற தோல் ஆண் பறவைக்கு கறுப்பாகவும், பெண் பறவைக்கு வெண்மையாகவும் இருக்கும். தொண்டையில் தூவியற்ற பகுதி ஊன் (இறைச்சி) நிறத்தில் இருக்கும். இதன் கால்கள் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும்.
தலை, கழுத்து உடலின் மேற்பகுதி இறக்கைகள் ஆகியன எல்லாம் கறுப்பு நிறமாக இருக்கும். மார்பு, வயிறு, வால், கீழ்ப்போர்வை இறகுகள், வாலிறகுகள் ஆகியன (இரண்டு நடு இறகுகள் தவிர) வெண்மையாக இருக்கும். ஆக இதன் உடல் நிறம் கறுப்பும் வெண்மையுமாக இருக்கும்.
பரவலும் வாழிடமும்
தொகுமலபார் கறுப்பு வெள்ளை இருவாச்சி இந்தியாவிலும் இலங்கையிலும் இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது. இதன் வாழ்விடம் பசுமையான மற்றும் ஈரமான இலையுதிர் காடுகளாகும். பெரும்பாலும் மனித குடியிருப்புகளுக்கு அருகில் காணப்படுகிறது. இது இந்திய துணைக் கண்டத்தில் நடு, கிழக்கு இந்தியா, மேற்கு தொடர்ச்சி மலைகள், இலங்கை போன்ற இடங்களில் பரவியிள்ளது. நடு மற்றும் கிழக்கு இந்தியாவில், இது மேற்கு மேற்கு வங்கத்திலிருந்து ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வடக்கு மற்றும் கிழக்கு மகாராட்டிரம், வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் வடகிழக்கு முனை வரை பரவியுள்ளது. இந்த இனமானது மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கிழக்கு சரிவுகளிலும், கொங்கன் பிராந்தியம் மற்றும் மேற்குக் கடற்கரையிலும் மேற்கு மகாராட்டிரத்திலிருந்து கோவா, மேற்கு கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு வழியாகவும், கேரளத்திலும் பரவியுள்ளது. இலங்கையில், இந்த இனம் முக்கியமாக தாழ் நில மற்றும் உலர் வலய காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் காணப்படுகிறது.[2]
நடத்தை
தொகுஇனப்பெருக்கம்
தொகுஇனப்பெருக்கக் காலத்தில், பெண் பறவை மரப் பொந்தில் இரண்டு அல்லது மூன்று வெள்ளை முட்டைகளை இடுகின்றது. பெண் அடைகாக்கும் போது மரப்பொந்தானது சேறு, கழிவுகள், பழக் கூழ் ஆகியவற்றால் செய்யப்பட்ட சாந்தினால் அடைக்கபட்டு ஒரு குறுகிய துளை மட்டும் இடப்படுகிறது. ஆண் பறவை தாய்ப் பறவைக்கும் குஞ்சுகளுக்கும் அந்த துளைவழியாக உணவை அளிக்கிறது. குஞ்சுகள் ஓரளவு பெரியதாக வளர்ந்தபிறகு, கூட்டுக்குள் போதிய இடம் இல்லாததால் தாய்ப் பறவை சுவரை உடைத்து வெளியேவந்து, சுவரை மீண்டும் கட்டுகிறது. அதன் பிறகு பெற்றோர் இருவரும் குஞ்சுகளுக்கு உணவளிக்கிறன.
உணவு
தொகுபழங்கள், சிறிய பாலூட்டிகள், பறவைகள், சிறிய ஊர்வன, பூச்சிகள் போன்றவற்றை உணவாக கொள்ளும் இந்த இனம் ஒரு அனைத்துண்ணி ஆகும். இவை இரையைக் கொன்று முழுவதுமாக விழுங்குகின்றன. அத்திப்பழம் ஒரு முக்கியமான உணவாக உள்ளது. மே முதல் பிப்ரவரி வரை, இனப்பெருக்கம் செய்யாத பருவம் வரை இவற்றின் உணவில் அத்திப்பழம் 60% உள்ளது. இனப்பெருக்கக் காலமான, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், கூட்டில் ஊட்டபட்ட பழங்களில் 75% வரை அத்திப்பழங்கள் இருக்கும். பல முதுகெலும்பிகளுக்கு நச்சுத்தன்மையுள்ளதாக உள்ள எட்டிப் பழங்கள் உள்ளிட்ட பிற பழங்களையும் இவை உண்கின்றன.[3]
காட்சியகம்
தொகு-
இணைப் பறவைகள்
தண்டேலி காட்டுயிர் உய்விடம் -
கருநாடகத்தின் கும்டாவில்
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Anthracoceros coronatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22682433A92945240. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22682433A92945240.en. https://www.iucnredlist.org/species/22682433/92945240. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Rasmussen, PC; JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Volumes 1 and 2. Smithsonian Institution & Lynx Edicions, Barcelona.
- ↑ Balasubramanian, P.; R. Saravanan and B. Maheswaran (2004). "Fruit preferences of Malabar Pied Hornbill Anthracoceros coronatus in Western Ghats, India". Bird Conservation International 14: pp. 69-79 எஆசு:10.1017/S095927090500024 9
வெளி இணைப்புகள்
தொகு- Oiseaux Photo