கிள்ளிவளவன், குளமுற்றத்துத் துஞ்சியவன்

(சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிள்ளிவளவன் அல்லது கிள்ளி வளவன் என்னும் சோழன் குளமுற்றம் என்னுமிடத்ததில் இறந்ததால் "குளமுற்றத்துத் துஞ்சிய" என்னும் அடைமொழியுடன் "சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்" என்று குறிப்பிடப்படுகிறான். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்று குறிப்பிடப்படும் மற்றொரு கிள்ளிவளவன் உள்ளமையால் இருவரையும் வேறுபடுத்திக் காட்ட அடைமொழிகள் தேவைப்பட்டன. இந்தக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பல பாடல்களில் பல புலவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளான். [1]

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பற்றிய செய்திகள்

தொகு

இவன் உறையூர் மாடத்தில் இருந்ததாகப் புலவர் கோவூர் கிழார் குறிப்பிடுகிறார். [2] காவிரிப்பூம் பட்டினத்திலும் இவன் தங்கியிருந்தான். [3] பசும்பூண் வளவன் என்று இவனை ஆடுதுறை மாசாத்தனார் போற்றிக் கூற்றுவன் பசியைப் போக்கப் பலரைக் கொன்று குவித்தான் என்று குறிப்பிடுகிறார். [4]

கிள்ளி வளவன் வெள்ளம் போன்ற படையுடன் கூடல் நகருக்குச் சென்று பழையன் மாறனைப் போரில் வென்று அவன் குதிரைகளையும் யானைகளையும் கைப்பற்றியபோது சேரன் கோதை மார்பன் உவகை கொண்டது போல் தலைவன் தலைவி கள்ளக் காதலை ஊரார் பேசி மகிழ்கின்றனர் என்று நக்கீரர் குறிப்பிடுகிறார். [5] வானவன் தலைநகர் வஞ்சி மாநகரை இவன் வென்றது பற்றி மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிடுகிறார். [6] பகைவரின் கோட்டைகளை அழித்தல் நன்று அன்று என்று இந்தப்பஃ பெண்புலவர் இவனுக்கு அறிவுரை கூறுகிறார். [7] பொலம்பூண் கிள்ளி என்று இவன் போற்றப்படுகிறான். காவிரிப்பூம் பட்டினம் இவன் தலைநகர். இவன் சோசரை வென்றான். [8] இவன் கருவூரைத் தாக்கியபோது சேரன் கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருந்தான். இப்படிப்பட்ட கோழையைத் தாக்குவது நாணத்தக்க செயல் என்று ஆலத்தூர் கிழார் குறிப்பிடுகிறார். [9]

மலையமான் மக்களை யானைக் காலில் இட்டுக் கொல்ல முற்பட்டபோது கோவூர் கிழார் புறாவுக்காகத் தன்னையே கொடுத்த சிபி வழிவந்தவன் என்று நயமாகப் புகழ்ந்தும் கொல்ல வரும் யானையைக் கண்டு குழந்தைகள் சிரிப்பதையும் எடுத்துக் கூறி மலையமான் மக்களைக் காப்பாற்றினார். [10]

புலவர் வெள்ளைக்குடி நாகனார் இவனை நேரில் கண்டு பாடி தன் நிலவரியைத் தள்ளுபடி செய்துகொண்டார் [11]

புலவர் இடைக்காடனார் இவனிடம் பரிசில் வேண்டியபோது இவன் பிறர் மண்ணை வென்று பரிசில் வழங்குவது போல் பார்த்தான் என்கிறார். [12] இவன் எப்போது தாக்குவான் என்று தெரியாமல் பகைவர் நாட்டு மக்கள் நடுங்கியது பற்றிப் புலவர் கோவூர் கிழார் குறிப்பிடுகிறார். [13] இவன் பகைவரை வென்று அவர் தலையில் அணியும் முடிப் பொன்னால் தான் காலில் அணிந்துகொள்ள கழல் செய்து கொண்டான் என்று புலவர் ஆவூர் கிழார் குறிப்பிடுகிறார். [14]

புலவர் மூலங்கிழாரை இவன் எந்த ஊர்க்காரர் என்று வினவியபோது "உன் பகைநாட்டவரும் உன்னை விரும்புவர்" என்று கூறிப் பாடுகிறார். [15]

கிணை முழக்கிக் கொண்டு வாயிலில் நின்ற புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பிறரை நாடாவண்ணம் தனக்குப் பரிசுகளை வழங்கினான் என்கிறார். [16] பாணர் சுற்றத்துக்குப் பாற்சோறும் பரிசில் பொருள்களும் இவன் வழங்கியது பற்றி ஆலத்தூர் கிழார் குறிப்பிடுகிறார். [17]

ஐயூரிலிருந்து இந்தக் கிள்ளிவளவனைக் கண்டு பரிசில் பெற ஐயூர் முடவனார் என்னும் புலவர் சென்று கொண்டிருந்தார். கருவூரை அடுத்த தாமான் தோன்றி மலைப்பகுதி நாட்டை ஆண்ட தாமான் தோன்றிக்கோ என்னும் மன்னன் இவரைக் கண்டு முடம்பட்ட புலவருக்கு உதவும் வகையில் வண்டித்தேரும் எருதுக்களும் தந்து உதவினான் [18] இவர் இந்தக் கிள்ளிவளவனிடம் வந்தபோது அவன் இறந்து விட்டான். அவனைப் புதைக்கப் பெரிய தாழி வனையும்படி இந்தப் புலவர் குயவனை வேண்டுகிறார்.[19]

மழைத்துளி விழுவது போல் பொறியும்படி நெய்யில் வறுத்துத் தனக்கு இவன் உணவளித்ததாகப் புலவர் கோவூர் கிழார் குறிப்பிடுகிறார். [20] அரசன் பிட்டை என்பானை இவன் போரில் காயப்படுத்தினான். [21] நல்ல உணவும், நல்ல ஆடையும் தனக்கு நல்குமாறு இவனைப் புலவர் நல்லிறையனார் வேண்டுகிறார். [22] தேர்வண் கிள்ளி என்று போற்றப்படும் இவனும் இவனது யானை இல்லாக் வெளிறும் தன்னைக் கலங்க வைக்கிறது என்று புலவர் பொத்தியார் குறிப்பிடுகிறார். [23] இந்தக் கிள்ளி வளவன் சிறந்த வள்ளல் என்பதைப் புலவர் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பால் உணர்த்துகிறார். இவனது உயிரை எமன் கொண்டு சென்றிருக்க முடியாது. காரணம் இவன் பெருவீரன். இவனிடம் இவனது உயிரைத் தானமாகக் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார். [24]

இந்த வளவன் பாடிய பாடல்கள்

தொகு

வருபவர்களுக்கெல்லாம் உண்ண உணவு தருவதோடு அவர்களின் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லவும் உணவு வழங்கிய சிறுகுடி கிழான் பண்ணன் தான் வாழவேண்டிய நாளையும் எடுத்துக்கொண்டு நீண்ட நாள் வாழவேண்டும் என்று வாழ்த்திப் பாடுகிறான்.[25]

மேற்கோள்

தொகு
  1. கோவூர் கிழார் - புறநானூறு 41, 46, 386
    எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் - புறநானூறு 397
    நப்பசலையார் - புறநானூறு 383
    நல்லிறையனார் - புறநானூறு 393
    சிறுகுடி வள்ளல் பற்றி இவன் பாடிய பாடல் புறநானூறு 173
    ஆகியோர் பாடியுள்ளனர் [சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், வையாபுரிப்பிள்ளை அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது, (முதல் பதிப்பு 1940) இரண்டாம் பதிப்பு 1967, சென்னை - 1 பிற்சேர்க்கை தலைப்பு - கிள்ளிவளவன்]
  2. புறநானூறு 69 & 70
  3. அகநானூறு 205
  4. புறநானூறு 227
  5. அகநானூறு 346
  6. புறநானூறு 39
  7. புறநானூறு 37
  8. அகநானூறு 205
  9. புறநானூறு 36
  10. புறநானூறு 46
  11. புறநானூறு 35
  12. புறநானூறு - 42
  13. புறநானூறு 41
  14. புறநானூறு 40
  15. புறநானூறு 38
  16. புறநானூறு 397
  17. புறநானூறு 34
  18. புறநானூறு 399
  19.  செம்பியர் மருகன்
    கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் 10
    தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
    அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
    வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
    இரு நிலம் திகிரியா, பெரு மலை
    மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? 15 (புறநானூறு 228)

  20. புறநானூறு 386
  21. புறநானூறு 373
  22. புறநானூறு 393
  23. புறநானூறு 220
  24. செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
    உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ;
    பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
    இரந்தன்று ஆகல் வேண்டும் பொலந் தார்
    மண்டு அமர் கடக்கும் தானைத் 5
    திண் தேர் வளவற் கொண்ட கூற்றே. (புறநானூறு 226)

  25. யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! (புறநானூறு 173)